சனி, 21 ஜனவரி, 2017

சிலப்பதிகாரத்தில் உறவுகள்

சிலப்பதிகாரத்தில் உறவுகள்
முனைவர் திருமதி அ.இன்பரதி, எம்.ஏ., எம்.ஃபில். பி.எட்.,.எச்டி.,
தமிழ்த்துறைத்தலைவர் இணைப்பேராசிரியர்,
வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி,விருதுநகர்.
                                                  உறவுகள் இல்லாத உலகம் இனிமை, இன்பம், துன்பம், மகிழ்ச்சி, ஆரவாரம், ஆர்ப்பாட்டம் என காரசாரம் எதுவுமே இல்லாத  உலகமாகி விடுகின்றது. உறவுகளே இன்பத்திற்கும், துன்பத்திற்கும், வாழ்வியல் முரண்பாடுகளுக்கும், வாழ்க்கைச் சிக்கல்களுக்கும் காரணமாகின்றன.  இலக்கியங்களும் உறவுகளை மையமிட்டே கதைக்கருவை அமைத்துக் கொள்கின்றன. பெற்றோர்-பிள்ளை, தாய்-மகள், தந்தை-மகன், மாமன்-மாமி, மாமி-மருமகள், சகோதர உறவுகள் எனக் குடும்பஉறவுகள் இருக்கின்றன.

திருமண உறவும் திருமணமில்லா உறவும்:
                                     ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து வாழ்கின்ற வாழ்க்கையானது முறையான வாழ்க்கையாகும். திருமணமின்றி  ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்கின்ற வாழ்க்கையானது முறையற்ற, நெறிபிறழ்ந்த வாழ்க்கையாகும். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமாக அமைகின்ற திருமணஉறவு சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய உறவாகும். இந்த உறவுக்குரியவர்களாகச் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகியைப் பார்க்கிறோம்.  கோவலன் கண்ணகியின் திருமணத்தில் அங்கண் உலகின் அருந்ததியன்னாளாகிய கண்ணகியை மங்கலப்பெண்டிர் பலர் கூடி மங்கல நல்லமளியில் ஏற்றுகின்றனர்.  திருமணமான புதிதில் கோவலன் தீராக்காதலின் திருமுகம் நோக்கிக் குறியாக் கட்டுரை கூறியநிலையைக் காண்கிறோம்.
மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே…………………………………………
யாழிடைப் பிறவா இசையே யென்கோ” (2:73-79)
என்று புகழ்கிறான். மனைவி என்று கிட்டிய புதிய உறவு அவனை அவ்வாறு பேச வைக்கிறது. இதுவே சாதாரண மனிதனின் சரியான மனநிலையாகும். கண்ணகியோடு அவன் மனம் ஒன்றி மகிழ்ச்சியோடு வாழ்ந்த வாழ்க்கையை,
தூமப் பணிகள்ஒன்றித் தோய்ந்தால் எனஒருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து நாமம்
தொலையாத இன்பம்எலாம் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்ப்போல் நின்று. (2:வெண்பா)
எனக் காட்டுகிறது சிலப்பதிகாரம். அவர்கள் நடத்தும் இல்லறத்தில்  நல்லறமும் இடம் பெற வேண்டும் என்பதால் கோவலனின் தாய் அவர்களைத் தனிக்குடித்தனம் வைக்கிறாள்.
           “வாரொலி கூந்தலைப் பேர்இயல் கிழத்தி
மறுப்புஅருங் கேண்மையொடு அறப்பரி சாரமும்
………………………………………………
                                காண்தகு சிறப்பின் கண்ணகி தனக்குஎன். (2:84-88)
என்ற வரிகள் இவ்வுண்மையை உணர்த்துகின்றன. அவன் சில ஆண்டுகள் கழித்துக் கண்ணகியை விட்டு விலகிச் செல்கிறான். ஆனால் அதற்குக் கண்ணகி காரணமாகாள். ஏனெனில் கண்ணகியோடு கோவலன் கூடி மகிழ்ந்து குடும்பம் நடத்திய காட்சிதான் அடிகளால் சுட்டப்படுகின்றதேயன்றி கண்ணகியோடு அவன் ஊடல் கொண்டமையோ, கருத்து மாறுபட்ட காட்சிகளோ காட்டப்படவில்லை.   உரிமைச்சுற்றம் சூழ்ந்து நிற்க முரசுகள் முழங்க, மத்தளங்கள் ஆர்க்க, சங்கொலிக்க, வெண்கொற்றக்குடை நிழலில் மங்கலநாணினை எடுத்துவர, மறையோன் கூறிய விதிப்படித் தீவலம் வந்து கண்ணகியை மணம் புரிந்து மனைவியாகப் பெற்ற கோவலன், மாதவியை எவ்வாறு பெறுகிறான்?
நூறுபத்து அடுக்கி எட்டுக்கடை நிறுத்த
……………………………………….
மணமனை புக்கு”(3:164-172)
மாதவியைப் பெறுகிறான். வீதியில் நிறுத்தி வைத்து விலை கூறிய ஒரு விலைப்பொருளாகத்தான் அவன் மாதவியைப் பணம் கொடுத்துப் பெறுகிறான். எந்த விதத்திலும் உரிமை பெற முடியாத உறவு அது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமாக அமைகின்ற திருமணமில்லாத உறவு சமுதாயத்தால் அங்கீகரிக்கப்படாத முறையற்ற உறவாகும். இந்த உறவுக்குரியவர்களாகச் சிலப்பதிகாரத்தில் கோவலன் மாதவியைப் பார்க்கிறோம். கணிகையர் குலவழக்கத்தைப் புரிந்து கொள்ளத் தெரிந்த அவளால் தாய்மைக்கு உயர்வு கொடுக்க முடியாமல் போனது அவலமே. தன்னை ஒப்பனை செய்துகொண்டு கோவலனோடு அவள் ஊடியும் கூடியும் கடலாடியும் பாடியும் ஆடியும் மகிழ்ந்ததை,
நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக்
கலவியும் புலவியும் காதலற்கு அளித்துஆங்கு
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரிக்
கோலம் கொண்ட மாதவி அன்றியும்” (4:31-34)
என்று வெளிப்படையாகச் சொன்ன அடிகள் மாதவி பொருள் பறித்த செய்தியை நாகரிகமாக, இலைமறை காயாகச் சொல்கிறார்.
பாடுஅமை சேக்கையுள் புக்குத்தன் பைந்தொடி
                                வாடிய மேனி வருத்தம்கண்டு, யாவும்
                                சலம்புணர் கொள்கைச் சலதியொடு ஆடிக்
                                குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைந்த
                                இலம்பாடு நாணுத் தரும்எனக்கு”(9:67-71)
என்று கோவலன் கூறுகிறான். இதன் பொருள் யாது? மாதவியிடம் பொருளை இழந்தேன் என்பதுதானே?கோவலன் முன்னோர் தந்த பொருளை எல்லாம் தொலைத்தேன் என்று தன்னை முன் வைத்துக் கூறுவதால், மாதவியைத் தவறாக நினைத்துப் பார்க்க நம் மனம் இடம் கொடுக்காமல் போய்விடுகிறது. மேலும் கணிகையர் குலத்துக்கே உரிய வழியில்   நின்று அவள் கண்ணகியைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை. மற்றொரு பெண்ணை நாம் வாழவிடாமல் செய்கிறோம் என்ற குற்ற உணர்வு அவளிடம் காணப்படவில்லை.   மாறாக அவள் கோவலனோடு ஊடியும் கூடியும் மகிழ்கிறாள். ஆடல்மகள் என்பதால் மட்டுமல்லாது, கோவலனைத் தன் பிடிக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவும் அவள் தன்னை ஒப்பனை செய்து கொள்கிறாள். இந்த உண்மையைக் கோவலன் மாதவியோடு கடலாடி மகிழ்ந்த பின்னர்தான் உணர்கிறான். இதுநாள் வரை அவன் மாதவியுடன் வைத்திருந்த உறவு மனமயக்கத்தினால் ஆனது என்பதை உணர்ந்து அதிலிலிருந்து வெளிவருகிறான். முதல் முயற்சியாக, தாழையின் வெள்ளிய மடலில், சுற்றிலும் பல்மணப் பூக்களைப் பொதித்து, செம்பஞ்சுக் குழம்பை மையாகவும் பித்திகை மொட்டினை எழுத்தாணியாகவும் கொண்டு தன்னோடு அவன் கூடியிருந்த காலத்தில் பெற்ற இன்பத்தை நினைவுறுத்தும் வகையில்  மடல்எழுதுகிறாள்.
மன்உயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும்
                             இன்இள வேனில் இளவர சாளன்

…………………………………………….
                             பண்ணும் திறனும் புறங்கூறு நாவின்
                            தளைவாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து
                           விளையா மழலையின் விரித்துஉரை எழுதி” (8:56-67)
அனுப்புகின்ற மடல் அவளது காமவேட்கையை வெளிப்படுத்திக் கோவலனைத் தன்வசமாக்குவதற்கான முயற்சி என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது. மேலும் வசந்தமாலையிடம் மடலைக் கோவலனிடம் கொடுத்துப் பதில் வாங்கி வரக் கூறாது, தூமலர் மாலையின் துணிபொருள் எல்லாம் கோவலற்கு அளித்துக் கொணர்க என்கிறாள்.  ஆனால், கோவலன் மடலைக் கொண்டு சென்ற வசந்தமாலையிடம், நான் அவள் மனையில் புகுந்தபோது நான் அழையாமலே முதன்முதலாக என்மேல் காதலுடையாள் போல் என்முன் வந்து நின்று நடித்த கண்கூடுவரி என்னும் நடிப்பும், வருக என்று அழைத்தபோதெல்லாம் காலம் தாழ்த்தலின்றி வந்தும் சூழ்நிலை காரணமாக நான் செல்க என்று கூறியவுடன் தடையேதுமின்றிச் சென்றும் அவள் நடித்த காண்வரி என்னும் கோலம் பூண்ட நடிப்பும், காமநோயால் வருந்தும் என் சிறுமை கண்டு ஏவல்மகள் போல் வேடம்பூண்டு தமியளாய் என்முன் வந்துநின்று நடித்த உள்வரி என்னும் நடிப்பும், காதலுடையாள் போல் என்பக்கம் வந்துநின்று எனது பிரிவாற்றாமையாகிய துன்பத்தைக் கண்டும் ஏதிலாள் போல் புறத்தே நின்று நடித்த புன்மையுடைய புறவரி என்னும் நடிப்பும், என் இன்ப நுகர்வுள்ளத்தை உணராது மாறுபட்டுத் தோழியர் சொல் கேட்டு இருபொருள்படக் கூறி என்னைத் தவிக்கவிட்டுப் போன கிளர்வரி என்னும் நடிப்பும், நான் அவளைப் பிரிந்து பிறிதோரிடத்தில் வதிய நேர்ந்த காலத்தில் என் பிரிவால் மிகவும் வருந்துவாள் போன்று தனது துன்பத்தைச் சுற்றத்தார்க்கு வெளிப்படுத்திய தேர்ச்சிவரி என்னும் நடிப்பும், மாலைப்பொழுதில் காமநோயால் மிகவும் மயங்கினாள் போன்று எனது கிளைஞர்களுக்கும் அத்துயரத்தைக் கூறி நடித்த காட்சிவரி என்னும் நடிப்பும், எனது கிளைஞர் முன்பு காமநோய் மிக்கு மயங்கி வீழ்வாள் போன்று வீழ்ந்து நடித்த பொய்யான மயக்கத்தை அவர்கள் மெய்யாகக் கருதி அவளுக்குப் பரிந்து எடுத்துத் தீர்த்த எடுத்துக்கோள்வரி நடிப்பும் அவளுக்கே உரியன. ஆனால் கடற்கரை மணலிலே அமர்ந்து யாழ் மீட்டிப் பாடி மகிழ்கின்ற வேளையிலே மாதவியின் எண்ணத்தில் மாறுபாடு கண்ட கோவலன்,
கானல்வரி யான்பாடத் தான்ஒன்றின்மேல் மனம்வைத்து
மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்என
யாழ்இசைமேல் வைத்துத்தன் ஊழ்வினைவந்து உருத்ததுஆகலின்
உவவுஉற்ற திங்கள்முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய்
(7:52)
பொழுது சாய்ந்த நேரம் என்றும் பாராது, அவள் பெண் என்றும் கருதாது, இருந்த இடத்தில் இருந்தபடியே விட்டுவிட்டுச் செல்கின்ற செயலானது  பன்னிரண்டாண்டுக் காலம் கூடி வாழ்ந்தாலும் அவன் அவளை எளிதில் உதறித் தள்ளக் கூடிய அளவில்தான் வைத்திருந்தான் என்பதையே புலப்படுத்துகின்றது. சில ஆண்டுகள் மட்டுமே கூடி வாழ்ந்தாலும் அவன் புகாரை விட்டுச் செல்லும்போது கண்ணகியை உடன் அழைத்துச் செல்வது கட்டிய மனைவிக்கு அவன் தருகின்ற அந்தஸ்தைப் புலப்படுத்துகின்றது.
                                   கோவலன் கொலையுண்ட பிறகு பட்டாங்குயானுமோர் பத்தினியேயாமாகில் ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் என்று கூறி மதுரையை எரிக்கின்றாள், கண்ணகி. கோவலனையன்றிப் பிறரை எண்ணாது வாழ்ந்தவளேயாயினும் நானுமோர் பத்தினி என்று பாரறியக் கூற இயலாதவள், மாதவி.  கூறின் அன்றைய சமுதாயத்தில் அது நகைப்பிற்கு இடமாகியிருக்கும். திருமண உறவுக்கும் திருமணமல்லாத உறவுக்கும் உரிய இந்த வேறுபாடு அன்றைக்குரியது மட்டுமல்ல இன்றைக்கும், என்றைக்கும் உரியதாகும்.