திங்கள், 12 ஜூன், 2017

தி.ஜானகிராமனின் ‘முள்முடி’ சிறுகதை உணர்த்தும் ஆசிரியர் – மாணவர் உறவு

தி.ஜானகிராமனின் ‘முள்முடி’ சிறுகதை உணர்த்தும் ஆசிரியர் – மாணவர் உறவு
முனைவர் ஜெ.மணிச்செல்வம்,
உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,
வி.இ.நா.செ.நா.கல்லூரி(தன்னாட்சி),விருதுநகர்.
முன்னுரை
தி.ஜானகிராமன், தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள தேவங்குடியில்  பிறந்தவர். தாம் பிறந்த சீமையின் சூழ்நிலையையும் நடையுடை பாவனைகளையும், பேச்சுவழக்குகளையும் இயல்பாகச் சித்திரித்து பல புதினங்களையும், சிறுகதைகளையும், நாடகங்களையும் எழுதியுள்ளார். சில மொழிப்பெயர்ப்பு நூல்களையும், சில விஞ்ஞான நூல்களையும் வெளியிட்டுள்ள இவர் 11 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். 1954 முதல் அகில இந்திய வானொலியிலும், தொலைக்காட்சியிலும் பணியாற்றி ஓய்வு பெற்றார். புதிய தலைமுறை எழுத்தாளர்களையும் உற்சாகப்படுத்தும் இயல்புடையவர். இவரது ‘சக்தி வைத்தியம்’ என்ற நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்துள்ளது. இவரது அம்மா வந்தாள், மரப்பசு ஆங்கிலத்திலும், மோகமுள்,அம்மா வந்தாள், மலையாளம் மற்றும் குஜராத்தியிலும்; மொழிபெயர்க்கப் பெற்று நூல்களாக வெளிவந்துள்ளன.
கதைப்பொருள்
முப்பத்தாறு வருடம் மற்ற ஆசிரியர்களைப் போலல்லாமல் அன்புத் தெய்வமாக வாழ்ந்த அனுகூலசாமி தன்னுடைய சாதாரண வார்த்தைக்கு மதிப்புக்கொடுத்து ஒரு மாணவன் இதயத்தை மற்றவர்கள் கூறுபோட்டு விட்டார்கள் என அறிந்து வருந்துகிறார். வாய்வார்த்தையில் அறியாமற் செய்த பாவங்கூட முள்முடியாக உறுத்தும் என்பதே இக்கதையின் கருப்பொருளாக அமைந்துள்ளது.
அனுகூலசாமிக்குப் பாராட்டு
அனுகூலசாமிக்கு அறுபது வயது. ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். அவரிடம் படித்த பள்ளி மாணவர்கள் அவரை மேளதாளத்தோடு வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள். அவர் இதெல்லாம் எதற்கு என்று நாணத்தால் குன்றிப்போகிறார். மாணவர்கள் அவர் காலில் விழுந்து கும்பிடுகிறார்கள். அவர் தடுத்துப் பார்க்கிறார் யாரும் கேட்பதாயில்லை. உடன் வந்த பெரியவர் கண்ணுசாமி,
“அனுகூலசாமி நீங்க நிஜமான கிறிஸ்தவர். முகத்துக்குச் சொல்லலே. முப்பத்தாறு வருஷம் பிரம்பைத் தொடாம அதிர்ந்து ஒரு வார்த்தை சொல்லாம வாத்தியாராய் இருக்கிறதுன்னா, அந்தத் தெய்வத்தை விழுந்து கும்பிட்டாத்தான் என்ன?” 
என்றார்.
ஆசிரியர் பேச்சில் மென்மை
கணவனின் பெருமையும்,மகிமையும் தனக்கு வந்தனவாகக் கருதும் அவரது மனைவி மகிமை,
“என்னைக் கூடத்தான் நீங்க அடிச்சதில்லை, அதிர்ந்து ஒரு வார்த்தை சொன்னதில்லை”
என்கிறாள். அதற்கு அவளது கணவர் அனுகூலசாமி,
“உலகத்திலே வந்து இருக்கிறது கொஞ்சகாலம், ஈசல் மழைக்கு வந்து மடியறாப்போல அந்தப்பொழுதை அடிச்சு கோச்சுக்கிட்டுப் போக்கணுமா? அடிச்சு யாரைத் திருத்த முடியும்”
என்கிறார்.
“பள்ளிக்கூடத்திலே அடிக்காமலே அதட்டாமே இருக்க முடியுமா?”
என்று கேட்ட மனைவிக்கு,
“இருக்க முடிஞ்சுதே!”
என்கிறார். இந்த உரையாடலின் மூலம் ஆசிரியரின் மென்மைத் தன்மையை உணரலாம்.
மனைவியின் பாராட்டு
மகிமை காப்பி எடுத்துக் கொண்டு வந்தாள். என்ன யோசனை சூடு சரியாயிருக்கு என்று சொல்லி உபசாரப் பத்திரங்கள் ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டே நடுநடுவே அவர் முகத்தைப் பார்த்தாள்.
“அதெல்லாம் நெசம்னு நெனச்சுக்காதே இனிமேல் வேலைக்கு வரமுடியாதுன்னு வருத்தப்படுவேன் என்பதற்கு ஆறுதல் தான் இந்தப் பாராட்டு.
திறமைன்னு சொல்லறதும் நெசந்தான். தடியெடுக்காம அதட்டாம அப்படியே கெட்டிக்காரன்னு பேர் எடுக்கறுதம் கஷ்டந்தானே”
என்றாள் மகிமை.
ஒரு கஷ்டமும் இல்லை. புத்தியிருக்கிறவன் யாரும் அடியிலே நம்பிக்கை வைப்பானோ?
எல்லோராலும் முடியாது
என்னமோ நான் இருந்துட்டேன்”
இந்த உரையாடலின் மூலம் மகிமை தன் கணவனை எப்படியெல்லாம் பாராட்டுகிறாள் என்பதை அறியலாம்.
முள்முடி அழுத்தியது
சின்னையன் இவரது மாணவன். அவன் ஓர் ஆங்கிலப் புத்தகத்தைத் திருடி விற்றுவிட்டான். இதைத் தெரிந்த அனுகூலசாமி,
“இனிமேல் இவனுடன் யாரும் போசதீர்கள்” 
என்று சொல்லிவிட்டார். அன்றிலிருந்து ஓராண்டு காலம் எந்த மாணவனும் அவனுடன் பேசுவதில்லை. அவன் கொடுத்த ஒரு ரூபாய் நன்கொடையையும் வாங்கவில்லை. அதனால் அவன் வாடி, வதங்கிப் போனான். தன் தாயாரோடும் தன் திருட்டைக் கண்டு பிடித்துக் கொடுத்த ஆறுமுகத்தோடும் அனுகூலசாமியிடம் வந்து நடந்ததைக் கூறி சின்னையன் தன்னை மன்னிக்கும் படி கேட்டான். அப்போது அவர்,
“இந்தப் பசங்க இப்படிப் பண்ணுவாங்கன்னு எனக்கு தெரியாமப் போச்சே” என்று வருத்தப்பட்டார்.
“நீங்க சொன்னதைத்தானே செய்தாங்க” 
என்றால் மகிமை அது சரி என்று இலேசாகச் சிரித்தார் அனுகூலசாமி.
முடிவுரை
அனுகூலசாமி ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெறுவதால் அவருக்கு இனி சனி, ஞாயிறு மட்டும் விடுமுறை இல்லை என்றுமே விடுமுறைதான். அவர் ஓய்வு பெறும் நாளில் அவரை மேளதாளம் முழங்க மாணவர்கள் வீடு வரை கொண்டுவந்து விட்டுவிட்டுப் போனார்கள். மாலையைச் சூட்டினர். பரிசுப் பொருள்களைக் கொடுத்தார்கள். உபச்சாரப் பத்திரங்களை வாசித்து அளித்தார்கள். அவர் செய்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவர் யாரையும் அடித்ததில்லை. மனம்புண்படப் பேசியதில்லை. அவ்வளவுதான் முப்பத்தாறு ஆண்டுகளாக எந்த மாணவன் மனமும் நோகச் செய்யாது பணியாற்றியதாம், கடைசியில் சின்னையன் ஓராண்டு மிகவும் வருந்துவதற்குத் தாம் காரணமாய் இருந்துவிட்டோமே என வருந்தினார். ஏசுநாதரின் முள்முடி போல அச்செயல் அவர் நினைவில் முள்முடியாய் நின்று வருத்தியது.