திங்கள், 12 ஜூன், 2017

கு.சின்னப்பப்பாரதியின் புதினம் வெளிப்படுத்தும் உறவுகள்

கு.சின்னப்பப்பாரதியின் புதினம் வெளிப்படுத்தும் உறவுகள்
முனைவர் இ.செல்வி,
உதவிப்பேராசிரியர்-தமிழ்த்துறை,
வி.இ.நா.செந்திக்குமாரநாடார்கல்லூரி (தன்னாட்சி),
விருதுநகர்.
முன்னுரை
ஆசிரியர் கு.சின்னப்பாரதி தனது புதினத்தில் ‘உறவுகள்’ என்ற நிலை சமுதாயத்தில் எவ்வாறு காணக்கிடக்கின்றது என்பதைப் பதிவு செய்துள்ளார். இப்புதினத்தில் பெண்களின் உறவு நிலை, முரண்பட்ட உறவுகள், மனிதநேயமற்ற உறவுகள், முதலாளி தொழிலாளி உறவுகள் பற்றித் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
பெண்கள் உறவுநிலை
பெண்கள் சமுதாயத்தில் ஒரு மதிப்பு மிக்கப் பயனுள்ள அங்கமாவார்கள். உலகம் பெண்களை நாட்டின் கண்களாகப் போற்றுகிறது. தமிழ் மரபுப்படி நதிகளாகவும்,கடலாகவும்.பூமியாகவும் இன்னும் பல விதமாகவும் வைத்துப் பூசிக்கின்றார்கள். கவிஞர்கள் பெண்களை ‘உலகின் ஜீவ ஆதாரம்’ என்று புகழ்ந்து பெண்ணின் நிலையை உயர்த்தியுள்ளனர்.
“உயிரைக் காக்கும் உயிரினைச் சோர்ந்திடும்
உயிரினுக்கு யிராயின்ப மாகிடும்
உயிரினு மிந்தப் பெண்மை யின்தடா”
என்பதில் உயிரைக் காட்டிலும் பெண்கள் இனிமையானவர்கள் என்கிறார் பாரதி. மேலும் பெண்கள் மென்மையை மட்டும் உள்ளடக்கியதல்ல. ஆற்றலும், சக்தியும் நிரம்பியது என்கிறார். இத்தகு சிறப்பும் மகத்துவமும் கொண்ட பெண்களுக்குச் சமூகத்தில் அவர்களின் மதிப்பு என்ன என்பதை சர்க்கரைப் புதினம் உணர்த்துகிறது.
குடும்பநிலையில் பெண்மை மகத்தானது ஆகும். குடும்பத்தை நிர்வாகிப்பதிலும், குழந்தைகளைக் காத்து வளர்ப்பதிலும் பெண்களின் பங்கு உயர்வானது. சர்க்கரை புதினம் தொழிலாளி விவசாயிகளின் குடும்பச்சூழலை மையமாகக் கொண்டது என்பதால் அக்குடும்பத்துப் பெண்கள் நிலையினை ஆசிரியர் விளக்கியுள்ளார்.
நிறைமாத கர்ப்பிணியான லட்சுமி விவசாய கூலி வேலைக்குச் செல்கிறாள். வறுமை தன் குடும்பத்தில் நிரந்தர இடத்தைப் பிடித்து விடக்கூடாது என்பதற்காக தன்னையே வருத்திக் கொள்கிறாள். தாய் வீட்டில் இருந்த போது வறுமையை அல்ல கஷ்டம் என்பதை கூட அறியாமல் வாழ்ந்து வந்தவள். ஆனால் இன்று வேலைக்குச் சென்றால் தான் பிழைக்க முடியும் என்ற நிலையில் கூலி வேலைக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டாள். இருக்கின்ற சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் இயல்புடையவள் பெண். எனவே தான் லட்சுமியும் போலி கௌரவத்தை விட்டு குடும்பத்திற்காக உழைக்கிறாள்.
மேலும் தொழிலாளர் குடும்பத்துப் பெண்களுக்கு வேலை நிறுத்தம் என்றவுடன் அச்சவுணர்வு தொற்றிக் கொள்கிறது. ஏனெனில் குடிக்கின்ற கஞ்சிக்கும் பற்றாக்குறை வந்து விடுமோ? என்ற வேதனை அவர்களுக்கு. இதனால் அனைவரும் கந்தசாமயின் மனைவி லட்சுமியிடம் வந்து முறையிடுகின்றனர். போராட்டத்திற்குத் தலைவன் கந்தசாமி என்பதால் அவரிடம் விவரம் கேட்கின்றனர். ஸ்;ட்ரைக் செய்யறதுன்னா பலாச்சொளை சாப்பிடறாப்பல இருக்குது ஆம்பளைகளுக்குää சோத்துப்பானையோடவும், தூக்கமின்மையோடவும் போடறவங்க நம்மதானே… என்று கூறி ஆதங்கப் பெருமூச்சு விடுகிறாள் லட்சுமி.
கரும்பு விவசாய குடியானவப் பெண்களின் வாழ்வு இன்னும் கவலைக்குரியது. சூரிய உதயத்திற்கு முன்பே அவர்களின் வேலைகள் துவங்கி விடும். கால நேரம் இல்லாமல் கரும்புக்காட்டில் அவர்கள் படும்பாடு எண்ணில் அடங்காதது காட்டு வேலை முடிந்தால் வீட்டு வேலையைக் கவனிக்கும் கடமை வந்து விடும். சோளம், கம்பு குத்துவதும், களி கிண்டுவதும், தண்ணீர் சுமப்பது, ஆடு மாடுகளைக் கவனிப்பது, பால் கறப்பது என அனைத்தையும் பார்க்க வேண்டும் நிம்மதியான தூக்கம் கிடையாது. மீண்டும் அதிகாலையில் எழுந்து காட்டிற்கு ஓட வேண்டும் இதைத்தான் குடியானவப் பெண் ஒருத்தி, தலையிலெ இருக்கிற ஈரையும், பேனையும் கூட எண்ணிடலாம் ஆனாசொத்துச் சொகம் பெரிசா இல்லாத குடியானப் பொம்பளையோட வேலைகளிலிருக்குதே அதை எண்ணிட முடியாது. என்னமோ இந்த பூமியிலெ பொறந்துட்ட கடமையை கழிச்சாவனும் இல்லையா? என்று தன் வாழ்விற்கான சுந்தரம் புரியாத நிலையில் புலம்புகிறாள்.
இப்படி கீழ்த்தட்டுவர்க்கக் குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் அனுதினம் பல பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். வறுமையின் கொடிய கரங்களில் பிணைக்கப்பட்ட அவர்களின் வாழ்வு சோகம் நிறைந்தது. நாள் முழக்க உழைத்தாலும் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை ஆசைகள், கனவுகள் யாவும் நிறைவேறாத அவலம். இவைதான் கிராமப்புற ஏழைப் பெண்களின் வாழ்க்கை நிலை எனச் சுட்டிக் காட்டியுள்ளார் ஆசிரியர்.
முரண்பட்ட உறவுகள்
இளம் மனைவியான நாச்சாரம்மாளை விட்டு சிங்க கவுண்டர் பரத்தையர் சுகம் நாடிச் செல்கிறார். எப்பொழுதாவது வீடு தங்கும் பொழுது கூட அவளிடம் அன்பு காட்ட மறுகக்கிறார்.
தன் கணவனிடம் இருந்து அன்பைப் பெற முடியாத சூழலில் நாச்சாரம்மாள் தன்னுள் எழும் உணர்வுகளுக்கு வடிகால் காண முனைகிறாள். இளமையின் களிவெறி துள்ளும் மோக உணர்வானது அவளைத் தன் வீட்டு வேலைக்காரனுடன் தகாத உறவு கொள்ளத் தூண்டுகிறது. இவ்வுறவில் அவளுக்கு ஒரு வித பயமீதியும், பதைப்பும் இருக்கிறதே தவிர அதில் அமைதி கிடைக்கவில்லை. எனவே தன் உணர்ச்சிகளை ஆற்றிக் கொள்ள முடியாமல் மனம் புழுங்குகிறாள். ஒரு தீராத மோகத்தை ஏற்படுத்துகிறது. அதனால் நாச்சியப்பக்கவுண்டரிடம் அவள் தன்னை இழக்கிறாள்.
பொதுவாக சமூகத்தில் பெண்கள் பலவிதமான பிரச்சனைகள் இருக்கக்கூடும். இதில் நாச்சாரம்மாள் பாலியல் உணர்வு அதிகம் கொண்டவளாக இருக்கிறாள். இளம் வயதில் தான் கண்ட கல்யாண கனவுகள் யாவும் ஆர்வமற்ற கணவனால் நிராசையாக மனம் நோகிறாள். அதனால் தன்னுள் எழும் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் பிற ஆடவருடன் இன்பம் காண்கிறாள்.
இப்படி தன் கணவனுக்குத் தெரியாமல் அந்தரங்கமாகச் செய்யும் தவறுகளை நினைத்து அவள் உள்ளம் நடுங்குகிறது. இதனால் நினைத்து அவள் உள்ளம் நடுங்குகிறது. இதனால் நாச்சாரம்மாள் தன்னையே வெறுக்கிறாள். தன்னை மாய்த்துக் கொள்ளலாமா? என்றும் எண்ணுகிறாள். உரியைத் தாவிய பூனைக்கு ஒரு முறை இரை கிடைத்து விட்டால் தினம் தினம் தாவிப் பார்க்கும் என்பது போல அந்த ஒரு நாள் இழப்பு எவ்வளவு வெட்கக்கரமான இழிவான எதிர்ப்பை மேற்கொள்ளத் தூண்டியிருக்கிறது. கடவுளே! இந்த பாவிக்கு ஒரு சாவுவரக் கூடாதா? என்று நாச்சாரம்மாள் தினம்தினம் தனக்குத்தானே கேள்விகள் கேட்ட மனப்போராட்டத்தால் மறுகுகிறாள்.
கணவனிடம் அன்பைப் பெற முடியாத ஏக்கம், இளமையில் எழும் மோக உணர்வு, தன் மீது அன்பு காட்டுபவரிடம் தன்னை இழக்கும் சூழல் இவையாவும் நாச்சாரம்மாளைத் தவறு இழைக்கத் தூண்டுகிறது. இப்படி சமூகத்தில் சில பெண்கள் தங்களின் மன ஆசைகள் நிறைவேறா சூழலில் தன்னிலை இழக்கின்றனர். சந்தர்ப்பவசத்தால் உணர்ச்சிகளுக்கு அடிமையாகிப் பெண்மையை இழிவுபடுத்திக் கொள்கின்றனர் என்பதை ஆசிரியர் இதில் பதிவு செய்துள்ளார்.
மனிதநேயமற்ற உறவுகள்
மனிதனை மனிதனாக மதிக்கும் தன்மையே மனிதநேயம் அதாவது ஒருவரது துன்பத்தில் மற்றொருவர் பங்கேற்று அவருக்கு உதவ முன்வரும் தன்மையே இஃதெனலாம். சாதிகளை விட, மனித இனம் ஒன்று என்ற மனத்தினை உடையவர்களே மனிதநேயம் கொண்டவர்கள் ஆவர்.
வேலைப் பளுவின் காரணமாக வீரன் காயம் அடைகிறான். எதிர்பாராத விதமாக இரும்புத் துண்டில் கால் பெருவீரல் மோதி நகம் பெயர்ந்து விடுகிறது. இதனால் கால் பாதம் வீங்கி இரத்தப் பெருக்கும் ஏற்படுகிறது. வேலை நேரத்தில் விடுப்புக் கேட்டால் தன் இடத்திற்கு மாற்று ஆளை நியமித்து விடுவர்.
வீரனின் நிலையைக் கண்ட தொழிலாளிகள் அவனைச் சூழ்ந்து கொண்டனர். வேலை தடைப்படதால் அதிகாரி கோபம் கொண்டு, அவனை இழுத்து கொட்டாயில் போட்டு வேலைப்பாருங்க! என்று அரற்றுகிறான்.
மனிதநேயம் இல்லாமல் படித்தவர்கள் என்பதற்காக அதிகாரிகள் தங்கள் கீழ் வேலை பார்க்கும் தொழிலாளிகளை ஏளனமாக நடத்துவது, ஆணவத்துடன் திட்டுவது என முறை கேடாகச் செயல்படுகின்றனர் என்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“தேடினேன் தேடினேன்
தென்படவே இல்லை
எந்த இயத்திலும்
மனிதநேயம்” 
என்று கவிஞர் கணேசனின் கவிதை வரிகள் மூலம் மனிதநேயமற்ற உறவுகளை ஆசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார்.
முதலாளி தொழிலாளி உறவுநிலை
இப்பொழுது உலகம் பெரிதும் முதலாளிகள் வசம் கட்டுப்பட்டுக் கிடக்கிறது. அரசியல் கட்சிகள் பத்திரிகைகள் தொழிற்சாலைகள்.அக்கூட்டத்தார் வசமிருக்கின்றன. முதலாளிகள் ஆட்சியால் சண்டை, கலகம், குழப்பம் முதலிய நிலைக்குத் தொழிலாளிகள் ஆளாகின்றனர்.
முதலாளித்துவம் நிறைந்திருக்கும் வரை செல்வம் ஒருவர்பால் பெருகியும் மற்றொருவர்பால் குறுகியும் நிற்கும் என்று முதலாளித்துவத்தால் சமூகத்தில் நிகழும் ஏற்றத்தாழ்வுகளைத் திரு.வி.க. குறிப்பிடுகிறார்.
இப்படி முதலாளிகள் தங்களுக்குள்ளச் செல்வாக்கினால் எதை வேண்டுமானாலும் சாதித்துக் கொள்கின்றனர். இதனால் நேரடியாகப் பாதிக்கப்படுபவர்கள் தொழிலாளிகளும் அவர்களின் குடும்பங்களும்தான்.
சமூகத்தில் ஏமாளிகள் இருக்கும் மட்டும் ஏமாற்றுபவன் செழிப்பாக வாழ்வான். இதையுணர்ந்து தொழிலாளிகள் தங்களின் மௌனத்தை உடைத்து முழக்கமிட்டால்தான் அவர்கள் வாழ்வில் வெளிச்சம் பரவும் இவ்வாறு முதலாளி, தொழிலாளி அதிகாரிகளின் உறவுகள் வெளிப்படுகின்றது. 

முடிவுரை
பெண்களின் உறவு நிலை, முரண்பட்ட உறவுகள், மனிதநேயமற்ற உறவுகள், முதலாளி தொழிலாளி உறவுகள் பற்றித் தெளிவாக அறிய முடிகிறது.