திங்கள், 26 டிசம்பர், 2016

குறுந்தொகையில் தலைவன் - தலைவி - தோழி

குறுந்தொகையில் தலைவன் - தலைவி - தோழி
உறவு நிலைச் சித்திரிப்பு

முனைவர் சீ.காயத்ரி தேவி,
உதவிப் பேராசிரியை,தமிழ்த்துறை,
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி,பசுமலை, மதுரை - 4.

முகவுரை :
                சங்க இலக்கியத்துள் அகமன உணர்வை, தலைவன் - தலைவி எனும் பொதுச் சொல்லால் அமைத்து பெரிதும் வெளிப்படுத்துவது குறுகிய அடிகளாலான குறுந்தொகையே ஆகும். ஒத்த அன்பினால் தம் அகமன உணர்வால் ஒன்றிணைந்த தலைவன் - தலைவி தம் காதலில் வெற்றி கொண்டு கணவன் - மனைவியாக வலம்வரும் வெற்றியின் பின்புலத்தில் தோழியின் பங்கு மிகவும் பாராட்டுதற்குரியதாகும். அவ்வகையில், குறுந்தொகையில் தலைவன் - தலைவி - தோழி உறவுச் சித்திரிப்பு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
தலைவிதோழி நட்புணர்வு :
                தலைவனை விரும்பிய தலைவியின் காதல் வெற்றி பெறுவதற்குப் பெரிதும் துணை நிற்பவள் தோழி. தலைவி மீது தான் வைத்திருக்கும் உயரிய நட்புணர்வால் தலைவன் - தலைவி இருவரையும் திருமணத்தில் ஒன்றிணைப்பது தன் கடமையென்றே செயல்படுகிறாள் தோழி. தலைவி தன் உள்ளத்தில் உள்ள தலைவனைப் பற்றி தோழியிடம் கூறுவதன் மூலம் தன் கவலை நீங்கித் தலைவனோடு கற்பின் உயிர் நிலையில் இல்லற வாழ்வை அடைகிறாள்.
                ‘யானுமோர் ஆடுகள மகளே என்கைக்
                கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
                பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகளே!”- குறுந். 31
என்ற அடிகளின் மூலம், தலைவனோடு களவு மணம் புணர்ந்த தலைவி, அதனை வேறு யாரிடத்தும் கூறாது தோழியிடத்துக் கூறுவதை அறிகிறோம். தான் தலைவனோடு வைத்திருக்கும் அன்பை உரியவர்களிடம் உரிய முறையில் எடுத்துரைக்கும் பாங்கு தோழியால் மட்டுமே முடியும் என்று தலைவி நம்புவதையும் இதன் மூலம் உணர முடிகிறது. ஆக,தோழியானவள் தலைவன் - தலைவி ஆகிய இருவருக்கும் பாலமாகத் திகழ்வதைக் காணலாம்.
தலைவியைத் தோழி இடித்துரைத்தல் :
             
தலைவன், பரத்தையின் பொருட்டு பரிந்தமையால் வாடிய தலைவியை தோழி இடித்துரைப்பதனை,
                ‘கொன்முனை இரவூர் போலச்
                சிலவா குகநீ துஞ்சு நாளே!”- குறுந். 91
என்ற அடிகள் சான்று பகர்வதாக உள்ளன. தகாத செயலைச் செய்த தலைவனிடம் ஊடல் கொள்ளாது கூடல் கொள்ளின் அதிகமான துன்பமே வரும் என்று தலைவியை இடித்துக் கூறுகிறாள். தலைவனிடத்து ஊடல் கொண்டால்தான் தான் செய்த தவறை உணர்வான். அப்போது,பரத்தையை நாடாது உனக்கு அருள்வான் எனத் தலைவிக்கு உரிய காலத்தில் இடித்துரைத்து அவளின் வாழ்வை செம்மையுறச் செய்கின்றாள்.
                தலைவன் செய்த இழிவான செயலைக் கண்ட தோழி மிகவும் வருந்தி இருக்கின்றாள். தன் நெஞ்சம் துன்பம் அடைந்துள்ளதாகக் கூறும் தலைவியின் மனதை,
                ‘நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே
                புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
                கட்கின் புதமலர் முட்பயங் தாஅங்
                இனிய செய்தநங் காதலர்
                இன்னா செய்த னோமென் நெஞ்சே!” - குறுந். 202
என்ற வரிகள் பறைசாற்றுகின்றன. தன் மனதில் தலைவன் மீது அன்பு இருப்பினும் அவன் செய்த தவறை தலைவியின் மனம் ஏற்கவில்லை. அதனால் மனதில் உண்டாகிய துயரத்தைத் தன் தோழியிடம் வாயில் மறுப்பதன் மூலம் வெளிக்காட்டுகிறாள் தலைவி.
தலைவன் நிலை கண்டு தலைவி வருத்துதல் :
                தலைவன் நெடுங்காலம் தலைவியைத் திருமணம் (வரைவு) செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்த அதனால் வருந்திய தலைவி, ‘தலைவர் கருணை கொண்டு என்னைத் திருமணம் செய்து கொண்டாலன்றி எனக்கு உதவியாகச் சான்று கூறுவார் வேறு யாரும் இல்லை என்று தோழியிடம் கூறுகிறாள். இதனை,
                ‘யாரு மில்லை தானே கள்வன்
                தானது பொய்ப்பின் யானெவன் செங்கோ
                தினைத்தா ளன்ன சிறுபவுங் கால
                ஒழுகுநீ ரால் பார்க்கும்
                குருகு முண்டுதான் மணந்த ஞான்றே!” - குறுந். 25
என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன. தலைவனும் தலைவியும் களவில் மணந்து கொண்டனர். மணந்த இடத்தில் சிறிய பசுமையான கால்களையுடைய நாரையைத் தவிர வேறு யாரும் இல்லை. தலைவன் தலைவியை ஊரறிய மணந்து கொள்ள மறுப்பாராயின் சான்று கூற யாரும் இல்லை என்பதாம். நாரை இருப்பினும் சான்று கூற தகுதியற்றது. அதனால், தலைவனே முன்வந்து தலைவியை மணந்து கொண்டாலன்றி வேறு வழியில்லை என தலைவி தன் மன ஆற்றாமையை தோழியிடம் கூறுவதை அறிய முடிகிறது.
தோழி தலைவியை ஆற்றுவித்தல் :
                வரைவு நீட்டித்தவிடத்து ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவிக்கின்றாள். தலைவன் விரைவில் வரைவை (திருமணம்) மேற்கொள்ளாத போது தோழி தலைவியின் மனம் அறிந்து பேசுகின்றாள். தலைவியானவள் தன் நெஞ்சம் நிறைந்த தலைவனை எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்கிறாள். தலைவியின் வருத்தம் நீங்க வேண்டித் தோழி தலைவியிடத்துநின்தோள்கள் அழகுறும் பொருட்டு அவரது மண்ணுறு மணியில் தோன்றும் மலையை நோக்கினும் மனம் மகிழ்வாயாக எனக் கூறுவதனை,
                ‘உவக்காண் தோழி அவ்வந் திசினே
                தொய்யல் மாமழை தொடங்கலின் அவர்நாட்டுப்
                பூசு லாயம் புகன்றிழி அருவியின்
                தண்ணறுந் துறுகல் ஓங்கிய மலையே!”         - குறுந். 367
என்ற அடிகள் இதற்குச் சான்றாக அமைந்துள்ளன. இதன் மூலம், தோழி தலைவியின் மனநிலையை அறிந்து ஆறுதல் கூறும் தன்மை உடையவள் என்பதை உறுதிபடக் கூறலாம்.
நிறைவுரை :
                நாலடி முதல் எட்டடி வரையமைந்த செய்யுள்களையுடைய இக்குறுந்தொகைஅன்பின் வழியது உயிர்நிலை என்னும் உயர்ந்த பண்பாட்டைக் கொண்டு மக்கள் வாழ்ந்ததைக் கூறுகிறது. தலைவன்,தலைவியின் கற்புநிலை வெல்வதற்கு தோழி மிகவும் பொறுப்புள்ளவளாக செயல்படுவதையும், தோழி தலைவி மீது கொண்டுள்ள நட்புணர்வையும், தலைவனது இழிசெயலால் தலைவனையும் தலைவியையும் இடித்துரைப்பதும், தலைவனின் நிலைகண்டு தலைவி வருந்தி தோழியிடம் கூறுவதும், தோழி தலைவியை ஆற்றுவித்தல் என்பன போன்ற செய்திகளை நோக்கும் போது குறுந்தொகையில் தலைவன் - தலைவி - தோழி உறவு நிலையானது உன்னதமானதாகவும், மேன்மையானதாகவும் விளங்குவதை அறிந்து கொள்ள முடிகிறது.