திங்கள், 26 டிசம்பர், 2016

சங்க இலக்கியங்களில் மன்னன் - மக்கள் உறவுச் சித்தரிப்பு

சங்க இலக்கியங்களில் மன்னன் - மக்கள் உறவுச் சித்தரிப்பு
                                                                                        முனைவர் இரா. அன்பழகன்                                                                                 
 சைவ சித்தாந்த தத்துவத்துறை  
                                                                மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம்                                                                                                                                  மதுரை-21.
சங்க இலக்கியங்களில் குறிப்பாக புறப்பாடல்களில் அரசனின் பண்பு மிகச் சிறப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது. பல்வேறு பாடல்களில் அரசன் இயற்கையோடும் பெற்ற தாய்க்கு நிகராகவும், இறைவனுக்கு ஒப்பாகவும், புனையப்பட்டுள்ளான். அரசன் வீரம், கொடை உள்ளம், மக்களைத் தாய்போல் பாதுகாக்கின்ற பரிவு, நீதி வழுவா நேர்மை எனப் பல்வேறு பண்புகளையும், ஒருங்கமையப்பெற்றவனாக அரசன் விளங்க வேண்டும் என இப்பாடல்கள் கருத்துரைக்கின்றன.
இயற்கையோடு மன்னன் உறவுகள்:
                அரசனின் ஆழுமையை அல்லது அவனது தகுதியை முறைப்படுத்துகின்ற புறப்பாடல்கள் அவனை இயற்கையோடு பொருத்தி விளக்குவது குறிப்பிடத்தக்கது. சான்றாக, சேரமான்பெருஞசோற்று உதயஞ்சேரலாதனை நிலம், விசும்பு, காற்று, தீ, நீர் என்ற ஐம்பெரும்பூதங்களின் இயற்கைபோல பொறை,சூழ்ச்சி, வலி, திரள், அளி என்ற ஐந்தும் உடையவன் இவன் என்று பொருத்திக்காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
                “மண்டிணிந்த நிலனும்
                நிலனேந்திய விசும்பும்
               
விசும்புதைவரு வளியும்
                வளித்தலை இய தீயும்
                தீமுரணிய நீரு மென்றாங்கு
                ஐம்பெரும்பூதத் தியற்கைபோலப்
                போற்றார்ப் பொருத்தலுஞ் சூழ்ச்சிய தகலமும்
                வலியுந் தெறளும் அளி;யு முடையோய்    (புறம் பா. எண்-2)
என்ற பாடல் வரியால் இதனை அறியலாம். இதேபோல் பாண்டியன் இலவந்திகை பள்ளித்துஞ்சிய நன்மாறனைப் புகழ்ந்துபாடும் புலவன்,
                “…அறநெற் முதற்றே யரசின் கொற்றம்
                அதனால் நமகரனக் கோல் கோடாது
                பிறரெனக் குணங்கொல்லாது
                ஞாயிற் றன்ன இவந்திறலாண்மையும்
                திங்களன்ன தன் பெருஞ் சாயலும்
                வானத் தன்ன வன்மையுமூன்றும்
                உடையை யாகி                                                                                (புறம் பா. எண்-55)
என்று அரசனுக்கு வேண்டிய பண்பினைச் சூரிய,சந்திர, வானத்தோடு பொருத்திக் காட்டுகிறான்.
கொடைத்திறன்:
                மன்னனுக்கு உரிய தகுதியில் முதன்மையானதும் மக்களால் வேண்டப்படுவதும் அவனது ஈகை குணமே ஆகும். ஆற்றுப்படை நூல்களும், அரசனின் கொடைத்திறத்தை மிகுதியும் போற்றுவன. மன்னன் நல்லியக்கோடன் பாணர்க்கு மகிழ்ந்து உணவளிக்கும் காட்சி இதற்குச் சிறந்த சான்றாகும். கடையேழு வள்ளல்களான பேகன், பாரி, காரி, ஆய்,அதியன்,நல்லி,ஓரி, ஆகியோரை விஞ்சிய நிலையில் இவனது கொடைத்திறம், “எழுசமம் கடந்த எழு ஊழ் திணி தோள் எழுவர் பூண்டஈகைச் செந்நுகம் எனப் புகழ்ந்து பேசப்படுகிறது. சிறுபாணாற்றுப்படை நூலில் தலைமகனாகிய நல்லியக்கோடன் புலவர் நத்ததனாரால் உலக்கத்தோர் மகிழ்வுபெய்தும் வண்ணம் மன்னனின் பண்பு விளங்கித் தோன்றுவதாக விளக்கப்படுகிறது.
                “வரிசை அறிதலும் வரையாது கொடுத்தலும்
                பரிசில் வாழ்க்கை பரிசிலர் ஏத்த
                பல்மீன் நடுவண் பால்மதி போல்
                இன்நகை ஆயமொடு.                                      (சிறுபா. பா. வரி 217-220)
இங்ஙனம் அரசர்களின் ஈகை குணம் புறப்பாடல்கள் பலவற்றில் மிகச்சிறப்பாகப் பேசப்பட்டுள்ளது. இன்னும் சில சான்றுகள் வருமாறு:
1.            காரிக் கண்ணன் எனும் புலவன் மன்னன் பிடடங்கொற்றனைப் பாடிய திறம் வருமாறு: “இன்று சென்றாலும் தருவான்; சில காலம் கழித்துச் சென்று கேட்டாலும் தருவான்; முன்னாள் தந்ததாகக் கூறி மறுக்காது தருவான்; தினசரி சென்று கேட்பினும் தருவான்; களத்து நெல் வேண்டினும் காளைகளைத் தொழுவோடு கேட்பினும் தருவான்; அணிகலன்களோடு களிற்றையும் தருவான்; எல்லோரிடத்திலும் அவ்வாறே நடந்து கொள்ளும் பெருந்தகை அவனது காலடியில் சிறு முள் குத்தி அவனுக்கு நோவு வரக்கூடாது என வாழ்த்துவேன். ஏனெனில் இந்த உலகத்தில் கொடுப்பவர் குறைவாக உள்ளனர்;.” என்கிறார். மன்னனின் கொடைத்திறம் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
2.            சோழன் குளமுற்றத்துதுந்திய கிள்ளி வளவன் மன்னனின் மனிதநேயம் குறித்து பாடிய பாடல் (எண். 173) கருத்து வருமாறு: “பழுத்த மரத்தில் பறவைஇனம் ஒலிக்கின்ற ஆரவாரம் போல் பரிசில் பெற்ற பாணனின் குடும்பம் மகிழ்ச்சியில் ஆரவாரித்து உண்டு மகிழும். காலந்தப்பாது மழைவிழும் காலத்தை அறிந்து எறும்புக் கூட்டம் தமது முட்டைகளை சுமந்தபடி சாரைசாரையாய் மேட்டுநிலம் நோக்கி செல்வதைப் போல வறிய மக்கள் தமது சுற்றத்தாரோடு பரிசில்களையும்,உணவுப் பண்டங்களையும் பெற்று செல்வதைப் பார்த்து அவர்களிடம் கேட்கிறேன். சகல மக்களை ஆதரித்து அவர்தம் வறுமையைப் போக்கும் சிறுகுடிக்கிழான் பண்ணனின் இல்லம் பக்கத்திலா? தூரத்திலா? கூறுங்கள்.” இப்பாடல் உணர்த்தும் கருத்து யாதெனில் மன்னனே வியந்து போற்றும் ஒரு கொடையாளனை முதன்மைப்படுத்துவதுதான்.
3.            அறத்தொடு மக்களைக் காத்த திறத்தால் மன்னன் ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையானார், “என் நெஞ்சம் திறப்போர் நிர் காண்குவரே என்று அன்பு மிகுதியால் பாடுகிறார். இது சிறு மன்னனாயிலும் புலவரது குறையைப் போக்கும் வண்ணம் இரவு பகல் பாராது அவரைக் காத்த அவன்தன் பெருமையைச் சுட்டுகிற பாடலாக உள்ளது (பா. எண் 175). மேலும், “எம் ஊர் ஆங்கன் உண்டும் தின்றும் உளர்ந்தும் ஆடுகம் செல்வல்(எண்-166)” என்றும், “கைவல் ஈகை கடுமான் கொற்ற வையா. வரைப்பில் தமிழகம் கேட்ப பொய்யாச் செந்நா நெளிய ஏத்தி பாடுப என்ப பரிசிலர்(168) என்றும், “ஒளி திகழ் முத்தம் விறலியர்க்கு ஈத்து நார் பிழிக் கொண்ட வெங்கட் தேரல் பண் அமை நல் யாழ்ப்பபாண் கடும்பு அருந்தி நயசவர்க்கு மென்மை(170)” என்றும், “பாண் பசிபகைஞன் என்றும், “நிழல் இல் நீல் இடைத் தனிமரம் போல , , “பாரியும் உண்டு இங்கு உலகு பறப்பதுவே என்றும், “ஒரு திசை ஒருவனை உள்ளி, நால் திசைபலரும் வருவர் என்றும், பலவாறு மன்னர்களின் கொடைச்சிறப்பின் வழியாக அவர்களது மனிதநேயப்பண்பு விளக்கப்படுகிறது. மன்னர்கள் வறியவர்க்கு கொடையளிப்பதில் தகுதி பாராட்டாது இனம் காணாது மேல், கீழோன் என்று அறியாது, இல்லை என்று கேட்டு வருபவர்க்கு அவர்தம் இல்லாமையையும், தேவையையும் அறிந்து பலமடங்கு பரிசிலும் உணவும் வழங்கி அவர்களது உள்ளத்தில் உயரிய இடத்தைப் பெறுகின்ற தகுதி மிக்கவராய் மன்னர் விளங்க வேண்டும் என்று புறப்பாடல்கள் கருத்து தெரிவிக்கின்றன.
மன்னனின் பழகுதிறன்:
                எளியோரிடத்தும், வறியோரிடத்தும் மன்னன் மிகவும் அன்பு பாராட்டுகிறவனாக இருக்க வேண்டிய திறத்தையும் இப்பாடல்கள் முன் மொழிகின்றன. சான்றாக,
                “காணாது அழிந்த வைகல் கானாவழி நாட்டு
                கிறங்கும் என்நெஞ்சம் - அவன்கழி மென்சாயல்
                காண் தொறும் நினைந்தே                   (பா. எண்-176)
என்று மன்னனிடம் பழகுதற்குரிய பொழுது கிட்டாமல் வருந்துகிற புலவனின் கழிவிரக்கமாக இச்செய்தி அமைகிறது. மன்னனோடு நட்புச் செய்ய விரும்புகிற அளவிற்கு மன்னனின் எளிமையும் அன்பும் இங்கு புகழ்ந்து உரைக்கப்படுகிறது.
மன்னன் எனும் தாய்:
                மன்னன் தாயைப் போன்றவன் என்று புலவர்களால் புகழப்படுகிறான். சான்றாக, தாயை இழந்தது போல எழினியை இழந்த தகடூர் நாடு வருந்தியதைக் குறிப்பிடலாம் (பா. எண்-230). இதனால் நாட்டைப் பாதுகாக்கின்ற அளவில் மன்னவன் சிறந்த தாயைப் போலச் சித்தரிக்கப்படுகிறான். இச்சான்று நேர்மறையான பொருளில் கூறப்பட்டுள்ளது இதற்கு மாறாகதாயில்லாது உண்ணாதிருக்கும் குழந்தை போல பகை நாடு அலறும் (பா. எண்-4) என்று கூறுவதன் வழி போர்ச் செயலில் ஈடுபடும் ஓர் அரசனின் செயலைப் புகழ்ந்துரைக்க வேண்டிய புலவன் மாற்று நாட்டு அரசனின் தோல்வியை இங்ஙனம் கூறுகிறான். இதில் பாதுகாப்பற்ற குழந்தைகளாக வலிமையற்ற மன்னனின் நாட்டுமக்கள் விளக்கமுறுகின்றனர். இதனால் தன்நாட்டு மக்களுக்குத் தாய் போன்ற மன்னன் பிறிதொரு நாட்டு மக்களுக்கு எமனாக இருப்பது எண்ணத்தக்கது.
மன்னனே உயிர்:
                மன்னனை உயிரளவிற்கு உயர்த்திப்பாடுகின்ற தன்மையும் புறப்பாடல்களில் காணக்கிடைக்கின்றன. சான்றாக, புலவன் மோசிகீரன்,
நெல்லும் உயிரன்றே; நீரும் உயிர் அன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
அதனால் யான் உயிர் என்பது அறிகை
வேல் மிகு தானை வேந்தர்க்கு கடனே                                         (பா. எண்-186)
எனப் பாடுவதைக் குறிப்பிடலாம் திருவள்ளுவரும் இக்கருத்தை எடுத்தாண்டுள்ளார். அது மட்டுமன்றி அரசன் இறைவன் என்கிற நிலையில் வைத்து போற்றப்படுவனாகவும் இருக்கிறான்.
மன்னன் அறம்:
                மேற்குறித்த செய்திகள் மன்னனின் அறப்பண்பினை விளக்குவன. எனினும் அரசன் பிற பாட்டின் மீது போர்தொடுத்து அந்நாட்டவரை அழித்து அந்நாட்டின் பொருள்களைக் கவர்ந்து தன் நாட்டு மக்களுக்குக் கொடுத்து மகிழ்வது வீரம் என்ற நிலையில் அரச அறமாகப் போதிக்கப்பட்டாலும் அதில் அறமற்ற செயலும் இருக்கிறது எனலாம். தான் ஆளுகின்ற குடிகளின் முன்பாக அரசன் அறத் தகுதியைப் பெற்றவனாகக் காட்சி தரவேண்டியது இன்றியமையாததாகிறது. அரசனது மொழி, முகபாவனை, அறிவு, நடவடிக்கை, பாதுகாவல், நீதி வழங்கல் போன்ற பல அரச தொழில்களுக்கு ஏற்றவண்ணம் அறம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது அரச அறம் ஆகிறது. இதனால் தன் குடியைக் காக்கும் மன்னன் பிறிதொரு பகை நாட்டின் மீது போர்தொடுக்க வேண்டியுள்ளது. இது மனித நேயத்திற்கு முரண்பட்டதாயினும் அரச அறத்தின்படி ஏற்புடையதாகிறது. ஈகை,நீதி, பாதுபாவல் போன்ற தொழில்களின் சிறப்புக் குறித்து அரசனைப் புகழ்ந்து பாடும் சங்கப் பாடல்கள் மாறாக, அவனது வீரம் குறித்துப் பேசும் இடத்தில் இரத்தக்களரியையும்,ஒப்பாரியையும், மிகுத்தல் பேசுகின்றன.
                “மன்னவன் சீறினால் மருந்தில்லை        (கலித்தொகை 89)

என்ற வரியால் மன்னன் கோபம் கொண்டால் அவனுக்கு முன்பாக எவரும் அழிந்துபடுவர் என்கிற அரசனின் மனிதநேயம் என்பது வறியர்களின் புகழ்ச்சிக்கும் அச்சத்திற்கும் உட்பட்ட வரையறையைக் கொண்டுள்ளது.