திங்கள், 26 டிசம்பர், 2016

சிற்பி கவிதைகளில் தாய்மைப்புனைவு

சிற்பி கவிதைகளில் தாய்மைப்புனைவு
(கிராமத்து நதி)
.சரவணன்
முனைவர் பட்ட ஆய்வாளர்,ஒப்பிலக்கியத்துறை
தமிழியற்புலம்,மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,மதுரை - 21
முன்னுரை
                தாய்மையைக் குறித்து சிலர் உயர்வாகப் பேசுவது உண்மையே அதை நடைமுறைப்படுத்துகிறபோது மனம் ஏற்க மறுத்துவிடுகின்றது. வெறுமனே வாய்ப்பேச்சாக இருந்துவிடாமல் அப்பெண்களை மேலும் மேலும் உயர்த்தவும் சக மனிதர்களைப்போல்  மதிக்கவும் மனிதநேயத்தோடும் பார்க்க வேண்டும் என்றும் போகப்பொருளாக காட்சிப்பொருளாக நினைப்பதைப் பெண்ணியக்கோட்பாட்டாளர்கள் உடன்படுவதில்லை என்பதையும் வலியுறுத்துகின்றன. ஆண்மக்களால் கட்டமைக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு மாறுபட்டு நடக்க வேண்டும் என்ற கருத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் தீங்கு விளைக்கும் கட்டுப்பாடுகளைக் களைவதில் ஆணும் பெண்ணும் உடன்பாடு கொள்ள வேண்டும்.
தாலாட்டுப்பாடலில் பெண்களின் நிலை
தாலாட்டுப்பாடலில் பெண்கள் விரதத்திற்குச் செல்வதை ஆராயும்போது குழந்தையில்லை என்பது முதற்காரணம். இரண்டாவது காரணம் ஆண்குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

மங்கை பிறந்தாலே மனக்கவலை வச்சாளே
மன்னன் பிறந்தானே மனக்கவலை தீர்த்தானே
இப்பாடலை நாம் எப்படிப் புரிந்துகொண்டால் பெண்களின் மனநிலையை உணரமுடியும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். ஆண்கள், பெண்களின் நிலையிலிருந்து சிந்தித்துப் பார்த்தால் இப்பாடலின் கருத்துப்புரிந்து கொள்ளலாம்,  நிறைய பெண்களைப் பெற்ற தாயாக இருக்க வேண்டும். அல்லது அதிகப் பெண்களோடு பிறந்த மரபினராக இருக்க வேண்டும். அய்யோ பெண்குழந்தையைப் பெற்றெடுத்த காரணத்தால் நம்மை மணவிலக்கு செய்து விடுவானோ என்ற பயந்த காரணத்தால் இப்படி பாடியிருக்கக்கூடும்,  முதற்குழந்தையாகப் பெண்களைப் பெற்றெடுத்து கவலை அடைந்தேன் இரண்டாவது ஆண்குழந்தையைப் பெற்றெடுத்து ஆறுதல் அடைந்தேன் என்பதை தாய் தாலாட்டில் கூறி ஆறுதல் அடைகிறாள்.
பணிச்சுமையும் மனச்சுமையும்
                தமக்குப் பிறந்த குழந்தைகளைப் பேணி வளர்க்கும் கடமை இருபாலினருக்கும் உரியதாகும். இவரும் நன்றாகவே வளர்க்கின்றனர். இருந்தபோதிலும் பெண்களுக்கே அதிகச்சுமை உள்ளது என்பதை சிற்பி அவர்களின் ஓடுஓடு சங்கிலி என்ற தலைப்பிலான கவிதையைக் காணலாம்.
                                “ஒற்றையடிப் பாதையில்
                                நடக்கச்சலித்த குழந்தையை
                                முன்னால் நடத்தி
                                ஓடு ஓடு சங்கிலி
                                ஓடோடு......
காலை மிதிப்பேன்
கையை மிதிப்பேன்
ஓடு ஓடு சங்கிலி
ஓடு ஓடு”  என்று  பாடித் துரத்துவாள்.
தாய் ஒன்றிற்கு மேற்பட்ட குழந்தையைப் பெற்றவளாக இருந்த காரணத்தாலும் வாகன வசதியில்லை என்பதையும் நமக்கு இப்பாடல் எடுத்துரைக்கின்றது. ஒரு குழந்தையை கையில் வைத்திருக்கும்போது மற்றொரு குழந்தையைச் சுமக்க முடியாது என்ற காரணத்தால் விளையாட்டுக் காட்டி குழந்தையை நடக்கச்செய்கிறாள் என்பதைக் கவிதையின் வாயிலாக உணர முடிகின்றது.
                விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட பெண்களின் நிலை இதுவே எனலாம். தலையில் கஞ்சியைச் சுமந்துகொண்டு கையில் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு நடக்கும் குழந்தையை விளையாட்டுக்காட்டிக் கூட்டிச் செல்லும் பழக்கம் இன்னும் சிற்சில ஊர்களில் கிராமத்து ஓவியமாகக் காணக் கிடக்கின்றன. அப்பொழுது தந்தை இரண்டு மாடுகளோடு போராடி உழுது கொண்டிருப்பார்கள் என்பதையும் நாம் யூகித்து அறியலாம். தற்போது மின்சாரம் வருகையாலும் இயந்திரத்தின் உதவியாலும் இப்பாடுகள் மாறியிருக்கலாம். ஆனால் வறுமை மாறியதாக கற்பனை செய்து கொள்ளலாம்.
அழித்து எழுதமுடியாத சித்திரம்:
                ஒரு படைப்பாளனுக்கு இருக்கவேண்டிய குணத்தைச்சிற்பியவர்கள் கவிதையின் வாயிலாக உணரமுடிகின்றது. எப்படி என்றால் படைப்பாளி அல்லாதவர்கள் கண்டுணர்ந்த நிகழ்ச்சிகளை மறந்துவிடுவார்கள். ஆனால் படைப்பாளிகளோ மனதைப் பாதித்ததை படைப்போவியமாக வரைந்து விடுவர் என்பதற்கு இக்கவிதை ஒரு உதாரணமாகும்.
                                ‘அழித்து எழுதமுடியாத
சித்திரம் ஒன்றுண்டு
அம்மா
எப்போதும் பெண்களெனில்
இளக்காரம் ஆண்களுக்கு
காயம் பட்டாகக்கூட
ரத்தம் வர்ரதில்லே
டாக்டர்கிட்ட அவளெக் காட்டுங்கடா.......”
கவிஞர் சிற்பியவர்கள் தாயின் நிலையில் இருந்து பெண்களின் நிலைமையை எடுத்துக்காட்டுகின்றனர். தன் தாயை மறக்காமல் பிற பெண்களையும் நேசிக்கிறார் என்பதை இக்கவிதையின் வாயிலாக உணரலாம். கடுமையான உழைப்பின் காரணமாக பெண்களுக்கு ஏற்படும் நிலைமையைப் புரிந்துகொண்ட கவிஞர்,  எப்போதும் பெண்களெனில் இளக்காரம் ஆண்களுக்கு பெண்கள் மதிக்கப்படவில்லை. இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்பட்டு வருகிறார்கள் என்பதைக் குறிப்பிடுகின்றார்.
ஆண்களில் ஒரு சிலருக்கு மட்டுமே பெண்களின் நிலைமையைப் புரிந்துகொண்டு அவர்களும் சமூகத்தின் அங்கத்தினர்களே என்ற கருத்தை காயம்பட்டாகக் கூட ரத்தம் வர்றதில்லை டாக்டர்கிட்ட காட்டுங்களடா என்ற வரியின் மூலம் தனது தந்தையின் குரலாக கவிஞர் ஒலிக்கிறார்.
பிறர்நலம் பேணுதல்
                தனக்காக வாழாமல் பிறருக்காக வாழும் தகைமை உடையவர்கள் பெண்கள் என்பதற்கு எடுத்துக்காட்ட கீழ்வரும் கவிதையைக் கூறலாம். தன் வீடு தன் பெண்டு தன் அற்றம் என்று வாழும் நாட்டில் பிறருக்காக வாழ வேண்டும் என்ற உயரிய சிந்தனையை உளமாறக் கூறுகிறார் கவிஞர். தனக்குப் பிடிக்கவில்லையாயினும் தன் குழந்தைகளுக்கும் கணவனுக்கும் சமைத்துப்போடும் தாய்மார்களின் குணநலன்களைக் கவிதை எடுத்துக்காட்டுகின்றன.
                                நேசிப்புக்கு எடுத்த ஜென்மம்
                                களி தின்னும் அப்பாவுக்குக்
கை கூசாமல் சமைத்தளிக்கும்
கடும் சைவக்காரி
கணவன் அசைவப்பிரியர் என்பதால் தான் கடைபிடிக்கும் சைவத்தை விட்டு விட்டு சமைத்துப்போடும் பாங்கு சிறந்தது. இது தாய்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சிறந்த பெண் ஆவார்.
நேசிப்பு
                தன்னைப்போல பிறரையும் நேசி என்பது பழமொழியாகும். தன் உடம்மையும் தன் உள்ளத்தையும் எவ்வாறு நேசிக்கிறோமோ அதைப்போலவே பிற உயிர்களையும் நேசி என்பதை நமது முன்னோர்கள் நமக்கு எடுத்துக்காட்டியிருக்கின்றனர் என்பதை கவிதையின் வழி உணரலாம்.
                உடம்புக்கு அழுதனையோ உயிருக்கு அழுதனையோ என்ற வரியின் அடிப்படையில் உயிருக்கு அழுதாய் என்றால் அந்த உயிர் பிற உயிர்களிடம் அடைக்கப்பட்டிருக்கும். உடம்பை நீதான் தீயிட்டு அழித்தாய் என்று பழம்பாடல் கூறுகின்றது.
மனிதர்கள் பிறஉயிர்களிடம் நேசிப்பு:
                                நேசிப்பு நேசிப்பு
                                புருசனைப் போலவே
                                புண்ணியத்தையும்
குழந்தைகளைப் போலவே
எருமைகளையும்
உறவுகளைப் போலவே
அக்கம்பக்கத்தையும்
ஆறறிவுடைய மனித உயிர்களை நேசிப்பதைப் போலவே விவசாயத்தையும்ää தன் குழந்தைகளைப் போலவே ஆடுமாடுகளையும் நெருங்கிய உறவினர்களைப் போலவே உறவினர் அல்லாதவர்களை மனித நேயத்தோடு பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை அம்மாவின் வாயிலாகப் பிறருக்கு உரைக்கின்றார் எனலாம்.
கோபம்
                ‘ஆலமரத்தின் அடியிருக்கும் வண்டே ஒருவாத்தா பொருத்தால் ஏன்வருது சண்டே என்ற முதுமொழிக்கு ஏற்ப நமது தாய்மார்கள் கோபத்தை அடக்கும் சிறந்த பண்புடையவர்களாக விளங்கியிருக்கிறார்கள் . ஒருவர் கோபத்தோடு பேசும்பொழுது தனது பொன்மொழியாலும் புன்சிரிப்பாலும் அம்மனநிலையை மாற்றும் பக்குவம் உடையவர்கள் பெண்கள்.
                                ஊரையே தூக்கும்
                                அப்பாவின் கோபத்தை
                                ஒற்றைப் பார்வையால்
செதுக்கி ஊமையாக்குவாள்
தாய்மார்கள் கடுமையான கோபக்காரரையும் தன் ஓரப்பார்வையால் அல்லது மௌனமொழியால் ஒன்று இல்லாமல் ஆக்கிவிடுவாள் என்பதை சமூகத்தில் உள்ள பெண்களின் செயல்பாடுகளை எடுத்துரைக்கின்றார்.
மரியாதை
                ‘உயர்வுக்கு வித்தாகும் நல்லொழுக்கம் என்பதைப் போல அனைவரிடமும் மனிதநேயத்தோடும் மரியாதையோடும் நடந்தால் நாடு போற்றும் அன்பாய் அறிவாய் பணிவாய் நடந்தால் உலகமே உன்னை வணங்கும் என்ற வரிகளுக்கு ஏற்ப தாய்மார்களுக்கே உரிய பண்புநலன்களை கவிஞர் தாயின் ஊடாக மக்களுக்கு எடுத்துக்கூறும் கருத்து சிறப்பாக உள்ளது எனலாம்.
எழுபது வயதிலும்
மூத்தவரைக் கண்டால்
தலைகுனிந்து நிலம் கீறும்
அம்மா ஓர் அதிசயம்
மட்டு மரியாதையும்
கொட்டிய களஞ்சியம்
மனிதர்களுக்கு பணிவும்,  துணிவும்,  ஒழுக்கம் நல்ல அணிகலன்களாய் திகழும் என்ற உண்மை மேற்குறிப்பிட்ட கவிதையின் மூலம் அறியமுடிகின்ற அன்பாய் இரு அடிமையாகிவிடாதே என்ற கருத்தையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். மூத்தோர்களுக்குப் பணிய வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டாலும் அடக்கி ஒடுக்கும்போது எதிர்ப்பையும் தெரிவிக்க வேண்டும் என்பது நல்ல நடத்தை என்பதை அறிஞர்களின் கருத்துக்களில் வெளிப்படுகின்றன எனலாம்.
முடிவுரை
                பெண்களைப் பாராட்டிப் பேசுவதும், கழ்வதும் வெறும் வாய்சவடாலாக இருக்கிறது. நடைமுறைப்படுத்தவில்லை. நாட்டுப்புற இலக்கியமான தாலாட்டில் வரத்திற்குச் செல்ல வேண்டிய காரணம் என்பதை அறியமுடிகிறது. பெண்களுக்கு மட்டுமே அதிகப்பணிச்சுமை  உள்ளது எனலாம். தன்னலம் கருதாது பிறர்நலம் பேணுதல் போன்றவற்றை கவிதையில் காணமுடிகிறது. எந்தத்தொழிலையும் நேசித்துச் செய்ய வேண்டும் என்பதையும் கூறுகின்றது. கோபம் மரியாதை போன்ற குணாதிசயங்கள் கொண்டவர்கள் என்று பெண்களின் பண்புநலன்களை எடுத்துரைக்கப்படுகிறது.