திங்கள், 26 டிசம்பர், 2016

பயண இலக்கியம் காட்டும் உறவுச் சித்திரிப்பு

பயண இலக்கியம் காட்டும் உறவுச் சித்திரிப்பு
ஜா.அருள் சுனிலா,
முனைவர் பட்டஆய்வாளர்,தமிழ் உயராய்வுமையம்,
பாத்திமா கல்லூரி,மதுரை-18.
பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் பயணமானது ஒரு முக்கியப் பங்கினை வகிக்கின்றது. பண்டைக் காலங்களில் மனிதன் உணவைத் தேடிப் பயணித்தான். நாகரிகம் சிறிது வளர்ந்த காலத்தில் உடை,உறைவிடம் இவற்றைத் தேடித் தன் பயணத்தை விரிவுபடுத்தினான். காலம் செல்லச் செல்ல மனிதனின் அறிவும் சிந்தனையும் மேம்படத் துவங்கின. அதன் விளைவாகப் பல நாடுகளுக்கும் சென்று தன் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்குடன் பயணத்தை மேற்கொண்டான். இத்தகைய  பயணத்தைப் பலர் பதிவு செய்துள்ளனர். தாம் கண்டவைகளையும் கேட்டவைகளையும் ஓவியமாகவும் பாடலாகவும் படைத்தார்கள். இம்முயற்சிகள் செம்மை பெற்றுப் பயண இலக்கியமாக வடிவம் பெற்றுள்ளன. இப்பயண இலக்கியப் படைப்புகளில் பயணத்தால் விளைந்த நல்ல நட்புறவுகளையும் காண முடிகின்றன.
உறவினர்களைச் சந்தித்தல்:
பயணம் செய்பவர்கள் பல்வேறு வித நோக்கங்களோடு பயணம் செய்தாலும்; தாங்கள் செல்லும் நாடுகளில் வாழும் நண்பர்கள் உறவினர்களைச் சந்தித்து,அவர்களோடு தங்கி வருவதும் ஒரு குறிப்பிட்ட செயலாகவே உள்ளது.
சிவசங்கரி,புதிய சுவடுகள் எனும் தனது பயணநூலில்  தன்னுடைய உறவினர்களைக் கண்டு மகிழ்ந்ததைக் குறிப்பிட்டுள்ளார். ஜே.பி.ஜெயப்பிரகாசம்,தனது மகள் மருமகனுடன் அமெரிக்காவில் ஒன்றாக வாழ்ந்த அனுபவங்களை குறிப்பிட்டுள்ளார்.
உறவுகளோடு சேரும் போது லேசாக மிதக்கிற இதயம், பிரியும் போது கனக்கிறது. இன்னும் இரண்டு நாள் இருந்திருக்கலாம்? என முனகிக் கொண்டே விழியோரம் அரும்பிய நீரைத் துடைத்துக் கொண்டே விடை கொடுத்தாள் மகள்
(அமெரிக்கா வந்தேறியவர்களின் வளநாடு .37).

பிறநாடுகளுக்குப் பயணிக்கும் போதும், திரும்பி வரும் போதும் நண்பர்கள்,குடும்பத்தினர் நட்போடு வழியனுப்பி வைப்பதையும் கண்கலங்குவதையும் பயணப் படைப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நல்ல நண்பர்களைப் பெறுதல்:
பயணம் செல்வோர்க்கு அதிகம் மொழிகள் தெரிகின்ற அளவுக்கு நண்பர்கள் அதிகம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. அன்னிய மண்ணில் எதிர்பாராமல் தமிழ்மொழி கேட்கும் போது உண்மையாகவே தேன்வந்து பாயத்தான் செய்கிறது, அறிமுகமே இல்லாதவர்களுடன் நம் மொழியில் நாலு வார்த்தைப் பேசுவதில்  உற்சாகம் பிறக்கிறது என்று சுஜாதா விஜயராகவன், ராஜேந்திர சோழ உலா எனும் தமது நூலில் கூறியுள்ளார்.ஒற்றை வரி மலையாளம் எனக்குப் புதிய நபரை அறிமுகம் செய்து வைத்தது. போன இடமெல்லாம் நட்புப் புன்னகையையும்,நேசக்கரத்தையும் சம்பாதித்துத் தந்தது என்றும்  மொழிந்துள்ளார்.
வெளிநாடு செல்கிறவர்களுக்கு அங்குச் சந்திக்கிற மனிதர்கள் போல் நினைத்து விடாதீர்கள். அவர்களுடைய முகவரிகளை வாங்கி வந்தால் வந்ததும் இரண்டு வரி எழுதிப் போடுங்கள். அவர்களோடு படமெடுத்துக் கொண்டிருந்தால் அதன் நகலொன்றை அவர்களுக்கு அனுப்பி வையுங்கள். அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதோடு அடுத்தமுறை நீங்கள் செல்லும் போது உங்களிடம் அவர்கள் காட்டுகிற அன்பை அதிகரித்துவிடும். வெளிநாட்டிற்குச் செல்லும் போது உங்கள் நண்பர்களுக்கென பரிசுகள் வாங்கிச் செல்லுங்கள்                                            (வெளிநாட்டு வீதியிலே-.123)
என்று எஸ்.இராதா கிருஷ;ணன் அறிவுரையும் வழங்கியுள்ளார்சாரதா நம்பி ஆரூரன்அலை கடலுக்கு அப்பால் எனும் நூலில் இலண்டனில் தங்கள் நல்வாழ்வுக்குக் காரணமான நண்பர்களைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். அவர்கள் வாழ்ந்த பகுதியிலுள்ள தமிழ்வாழ் மக்கள் அதிகமான அன்பைக் காட்டியதையும்,குழந்தைகளை அன்போடு கவனித்ததையும்,விருந்தோம்பியதையும், உரிமையோடு உதவிச் செய்ததையும் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.
என் கணவரது ஆராய்ச்சி நிறைவேறும் தருவாயில் அல்லும் பகலும்   எங்களுடனேயே இருந்து அயராது பாடுபட்ட நண்பர் திரு.ஜகதீஸ்வரன் போன்றவர்களை நினைக்கும் போது,“‘நல்லார் ஒருவர் உளரல் அவர் பொருட்டுஎல்லாhர்க்கும் பெய்யும் மழை என்பதுணர்ந்தோம்
(அலைகடலுக்கு அப்பால்-பக்.164-165)
என்கிறார். தன்னுடன் பணிபுரிந்த மேலைநாட்டுப் பெண்கள் நட்போடு பழகிய விதத்தையும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.
பயணத்தால் ஏற்படும் நட்புறவு:
பாரிஸ் நகரில் மணியன் பங்கேற்ற மாநாட்டில் மணிலா, ஹாங்காங்,நாடுகளிலிருந்து கலந்து கொள்ள வந்த அல்போன்ஸோ,சீ. மணியன் மூவரும் கீழைநாட்டைச் சார்ந்தவர்கள் என்பதால் ஒரே தெருவில் வசிக்கும் நண்பர்களைப் பார்த்துக் கொண்டதைப் போல் நட்போடு பழகியுள்ளதைக்  குறிப்பிட்டுள்ளார். மேலும்,
இந்தியாவில் சென்னையில் இருக்கும் வரையில் நான் அடுத்த வீட்டில் இருப்பவருடன் கூடப் பேசமாட்டேன். டில்லிக்குப் போனால் தமிழர்களைத் தேடுவேன். வெளிநாடுகளில் இந்தியர் என்றாலே போதும். இங்கேயோ கிழக்காசியப் பகுதிக்காரர்கள் என்று நினைத்தாலே வெல்லமாக இருந்தது. போகப்போக மனப்பாங்கில் பார்வையில் அப்படி ஒரு விரிவு!”
(இதயம் பேசுகிறது …) பிரெஞ்சுப் பயணக்கதை - .15)
எனும் வரிகளால் மணியன் தெளிவுபடுத்துகிறார். ஜெர்மானியருக்கு எப்போதுமே இந்தியா மீதும் இந்திய மக்கள் மீதும் நல்லெண்ணம் உள்ளது. நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸை நேரில் கண்டு, சொற்பொழிவைக் கேட்டவர்களும்,மகாத்மா காந்தி உயிர் நீத்த தகவல் அறிந்து துயரமடையாத ஜெர்மானியரும் இல்லை எனலாம்.
அமெரிக்க மக்கள் பிற நாட்டினர் மீது அன்பு பாராட்டி வருவதையும்,இந்தியரை அன்போடு வரவேற்பதையும் தனிநாயக அடிகள்ஒன்றே உலகம்; நூலில்  குறிப்பிட்டுள்ளார். இரஷ்யா விமான நிலையத்தில் உள்ளவர்கள் அனைவரும் அன்புடனும்,பணிவுடனும் நடந்து கொணடதையும் மாஸ்கோ மக்களை விட லெனின் கிராருக்குச் சென்றால்,அங்குப் பிறநாட்டவரை அன்போடும் மகிழ்ச்சியோடும் வரவேற்பதையும் பழகும் மனப்பான்மை பன்மடங்கு விரிந்து இருப்பதையும் எடுத்துரைத்துள்ளார்.
பிரெஞ்சுக்காரர்கள் மிக நல்லவர்கள். அவர்களிடம் வேற்றுமை கிடையாது. பிறரை எப்பொழுதும் சமத்துவமாகவும் அன்பாகவும் நடத்துவார்கள்
(உலகம் சுற்றும் தமிழன்-.41)
என .கே.செட்டியார் குறிப்பிட்டுள்ளார்.
 “நட்புக்கு உள்ளத்தில் உன்னதமான இடத்தை ஒதுக்கியிருப்பவர்கள் பாரிஸ்  தமிழன்பர்கள்
(ஒரு பத்திரிகையாளனின் மேலைநாட்டுப் பயண அனுபவங்கள்-.218)
என லேனா தமிழ்வாணன் குறிப்பிடுகிறார். மேலைநாடுகளில் தினமும் அலுவலகத்தில் சந்தித்துக் கொள்ளும் நபர்களுக்கு முத்தம் கொடுத்து வரவேற்பதையும் உண்மையான நட்பும் நெருக்கமும் பணிசெய்யும் இடங்களில் இருப்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
பயணத்தால் மாணவர்களிடையே ஏற்படும் நட்புறவு:
நியயார்க் நகரில்இன்டர் நேஷனல் ஹவுஸ்;’ என்ற சர்வதேச மாணவர் விடுதியில் ஐம்பத்திரண்டு நாடுகளைச் சார்ந்த முந்நூறு மாணவர்கள் தங்கினர். அவர்களுடைய தேசிய உடையும் மொழியும் வேறு வேறுவிதமாக இருந்தாலும் ஒரே மொழியைப் பேசி, ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்து நட்போடு பழகினர் என்பதை,
ஜப்பானியனும் கொரியாப் பெண்ணும் கைகோர்த்துச் செல்வார்கள். ஜெர்மனும் யூதனும் அளவளாவுவார்கள். சீனரும் ஜப்பானியரும் அன்னியோன்னியமாயிருப்பார்கள். அமெரிக்கரும் நீக்ரோவும் சரியாசனத்திலமர்வார்கள்(உலகம் சுற்றும் தமிழன்-.20)
என .கே.செட்டியார் குறிப்பிடுவது போல,தனிநாயக அடிகளும் வத்திக்கானில் ஐந்து ஆண்டுகள் கல்வியைப் பயின்ற போது 43 நாடுகளைச் சேர்ந்த 250 மாணவர்கள் பயின்று வந்ததைக் குறிப்பிடுகிறார். நிறத்தில் மொழியில், பண்பாட்டில் வேறு வேறுவிதமாக இருந்தாலும் அன்போடும் நட்போடும் வாழ்ந்து வந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலை நாடுகளில் படிக்கும் அயல்நாட்டு மாணவர்களுக்கு ஒரு கார்டியன் பேமிலியை அங்குள்ள பல்கலைக்கழகம் தேர்ந்தெடுக்க உரிமையளிக்கிறது. இதன்படி மாணவர்கள் நான்கு ஐந்து குடும்பங்களோடு பழகிப் பின் தனக்குப் பிடித்தக் குடும்பத்தைத் தேர்ந்தெடுப்பதையும் அக்குடும்பத்தில் ஒருவராக ஏற்று அன்போடு கவனிக்கும் தன்மை உள்ளதையும் லேனா தமிழ்வாணன் மற்றும் சாரதா நம்பி ஆரூரனும் குறிப்பிடுகின்றனர்.
அந்நாட்டு மக்கள் தங்களுடைய குடும்பத்து அங்கத்தினராக விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள். அக்குடும்பத்தினர் அந்தப் பல்கலைக் கழகத்தில் படிக்கும் காலத்தில் அந்த மாணவரின் இன்ப துன்பங்களில் பங்குக் கொள்கிறார்கள்; விருப்பு வெறுப்புக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அம்மாணவர்களிடம் உண்மையான அன்புடன் நடந்து கொள்கிறார்கள். கனடா மக்கள் அவர்களை விட்டுப் பிரியும் போது கண் கலங்குகின்றனர் (ஒரு பத்திரிகையாளனின் மேலைநாட்டுப் பயண அனுபவங்கள்-.139)
கல்விப் பயிலும் மாணவர்கள் தாங்கள் தேர்வுச் செய்யும் குடும்பத்தில் ஓர் அங்கமாகிப் போவதையும் இன்ப துன்ப நிகழ்வுகளில் பங்கெடுப்பதையும், தங்கள் நாட்டிற்குத் திரும்பி வந்த  பின்பும் இவ்வுறவு நிலைகள் நிலைத்து நிற்பதையும் சாரதா நம்பி ஆரூரன், லேனா தழிழ்வாணன், தனிநாயக அடிகள் போன்றோர் கூறுவதிலிருந்து உணரலாம். இவ்வாறு,பயணங்கள் உறவை, நட்பை வளர்க்கும் இடமாக அமைகின்றன.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவின் விண்ட்ஸர் பல்கலைக் கழகத்திற்குப் படிக்கச் சென்ற மாணவர்கள் மூவர் ஒரே அறையில் இருப்பதையும் தீயப்பழக்க வழக்கங்களுக்கு உட்படாமல் நட்போடு பழகுவதையும் அவர்களுக்குரிய உணவைத் தினமும் ஒருவர் மாறி ஒருவர் சமைத்து மகிழ்வோடு வாழும் சிறப்பையும் லேனா தமிழ்வாணன் எடுத்துரைத்துள்ளார்.
பயணத்தால் குடும்பங்களில் ஏற்படும் நட்புறவு:
பயணத்தின் போது ஒருவர் மற்றவர்களுடன் காட்டும் அன்பும் கரிசனையும் உறவை வளர்க்கும் காரணியாகவும் புரிந்து கொள்ளும் மனநிலையையும்,உறவுகளில் பிடிப்பையும் ஏற்படுத்துகிறது. இதனால், மகிழ்வான குடும்ப வாழ்வை வாழ வழிகோலுவதாக உள்ளதாக சுஜாதா விஜயராகவன்,சாரதா நம்பி ஆரூரன்,ஜே.பி.ஜெயபிரகாசம் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற அனுபவங்களின் வழிப் பகிர்ந்துள்ளனர்.

இவ்வாறு, பிறநாடுகளிலிருந்து சென்று ஒன்றாக வாழும் இடங்களில், நட்போடு பழகி,ஒருவருக்கொருவர் உதவிப் புரிவதையும் நண்பர்கள் நட்போடு வரவேற்று,விருந்தோம்புவதையும்,வழிகாட்டுவதையும் உணரமுடிகின்றன. தொழில் முறையாகப் பயணம் செய்பவர்கள் நல்ல நட்புகளைத் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்வதையும் காணலாம். கருத்தரங்கு மாநாடுகளில் புதிதாகச் சந்திக்கும் வேறு வேறு நாட்டினருடன் நல்ல உறவு நிலைகளை வளர்த்துக் கொள்ளும் செயல்களையும் பயணப் படைப்பாளர்கள் கூற்றால் அறிந்து கொள்ள முடிகின்றன.