சனி, 24 டிசம்பர், 2016

குறிஞ்சிப்பாட்டு - வாசிப்பும் நேசிப்பும்

குறிஞ்சிப்பாட்டு - வாசிப்பும் நேசிப்பும்
முனைவர்(திருமதி).இன்பரதி,
தமிழ்த்துறைத் தலைவர்இணைப்பேராசிரியர்,
வே..வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி,விருதுநகர்.

                            சங்க இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் நெறிகளின்படி தலைவியின் களவொழுக்கத்திற்கு உறுதுணையாக நின்ற தோழி காலங்காலமாகப் போற்றப்பட்டு வருகிறாள். ""தோழி அறத்தொடு நிற்குங்காலம் பெற்று அறத்தொடு நிற்புழித் தலைவியின் குடிப்பிறப்பிற்கும், கற்பு, நாண் முதலியவற்றிற்கும் செவிலியின் அறிவிற்கும், தலைவன் பெருமைக்கும், தன் பாதுகாவலுக்கும் மாறுபடாதவாறு நிற்றல் வேண்டும், என்னும் நுணுக்கமான வரையறைகளும் உள்ளன. இவ்வரையறைகள் இந்நூலில் பெரிதும் போற்றப்பட்டுள்ளன. இவை தமிழரின் சிறந்த நாகரிகத்தை விளக்கப் போதிய சான்றுகளாம் என்க.'' (உரைப்பாயிரம்) என்று குறிஞ்சிப்பாட்டின் உரைப்பாயிரம் அவளைப் பாராட்டுவதால் இன்றுவரை நாமும் தோழியைப் பாராட்டிக் கொண்டிருக்கிறோம். அவளது உளவியல் திறனை வியந்து கொண்டிருக்கிறோம். சமுதாயப் பண்பாட்டுக்கு முரணான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தலைவனைப் பற்றியும்  நாம் ஏதும் பேசாமல் விடுகிறோம். தலைவனையும், தோழியையும்  புதிய அணுகுமுறையோடு நோக்குவோம்.
அறத்தொடு நிற்றலில் அவள் பங்கு பெரிதா? பாராட்டத்தகுந்ததா? என்பதைத் தக்க சான்றுகளுடன் ஆராய்வோம்.

                      
சங்ககாலந்தொட்டுத் தமிழர்களின் வாழ்க்கைமுறை அகம், புறம் என்ற பகுப்புக்குள் அடங்கியதாக ஆராயப்படுகிறது. எந்த ஒரு நாட்டிலும், எந்த ஒரு மொழியிலும் இல்லாதவகையில் தமிழர்களின் வாழ்க்கைமுறைக்கு மட்டுமே இலக்கணம் எழுந்துள்ளது என்பது பெருமைக்குரியதாகப் பேசப்படுகிறது. தமிழர்களின் அகவொழுக்கம் ஐந்து திணைகளுக்குள் அடக்கப்பட்டு, அது அன்பின் ஐந்திணை என்று பெருமைக்குரியதாகப் பேசப்படுகிறது. இவ்வைந்து திணைகளுக்கும் உரிய ஒழுக்கங்களும் வரையறுக்கப்பட்டுள்ளன. குறிஞ்சிக்குக் கூடலும் கூடல் நிமித்தமும், முல்லைக்கு இருத்தலும் இருத்தல் நிமித்தமும், மருத்திற்கு ஊடலும் ஊடல் நிமித்தமும், நெய்தலுக்கு இரங்கலும் இரங்கல் நிமித்தமும், பாலைக்குப் பிரிவும் பிரிவு நிமித்தமும் சுட்டப்படுகின்றன. முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நான்கு திணைகளுக்கும் உரியதாகப் பேசப்படுகின்ற ஒழுக்கத்தைப் பற்றி எந்தக் கருத்து வேறுபாடுமில்லை. ஆனால் களவொழுக்கத்திற்குரியதாகப் பேசப்படுகின்ற குறிஞ்சிஒழுக்கம் விவாதத்திற்குரியதாகிறதுகளவொழுக்கத்திற்கு முன்னதாகிய கூடல் ஒழுக்கத்தை எவ்வாறு சிறந்ததாகக் கருத இயலும்? என்பது முதல் கேள்வியாகிறது. மேலை நாடுகளில் இத்தகைய  ஒழுக்கம் வரவேற்கப்படலாம். ஆனால் தமிழ் மண்ணில் இத்தகைய நிலை இன்றுவரை சமுதாய அந்தஸ்துடையதாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
                        திருமணத்திற்கு முன்னதாகிய களவொழுக்கம் வரவேற்கப்படலாம். எதிர்பாராத விதமாக அவ்வேளையில் நடக்கின்ற சில தவறுகள் திருமணஉறவின் மூலமாகச் சரிசெய்யப்படலாம். மனம் மாறுபடாமல், வேறு தலைவனை நாடாமல், எந்தத் தலைவனிடம் தலைவி மனதைப் பறிகொடுத்தாளோ அதே தலைவனைத் திருமணம் செய்து கொண்டு, சரிய இருந்த  தமிழரின் பெருமையைச் சரிய விடாமல் காப்பாற்றினாள் என்று பெருமைப்படலாமே தவிர, திருமணத்திற்கு முன்னர் நடந்த மெய்யுறுபுணர்ச்சி என்ற அவளுடைய தவறு முறையானது என்று ஏற்றுக்கொள்வதற்கில்லை. ஆனால் நாமோ அதைக் குறிஞ்சிக்குரிய சிறப்பான ஒழுக்கமாகப் பறைசாற்றிப் பெருமிதப்படுகிறோம். களிறுதரு புணர்ச்சி, பூத்தரு  புணர்ச்சி, புனல்தரு  புணர்ச்சி என்று சொல்லுவதெல்லாம் இலக்கியத்திற்கு மட்டுமே அழகு சேர்க்கக் கூடியவைவாழ்க்கைக்கன்று. களவுக்கு முன்னைய புணர்ச்சியும், உடன்போக்கும் அன்றைய சமுதாயத்தில் சிறந்த அறமாகக் கருதப்படவில்லை. குடும்ப மானம் காப்பாற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்ற இக்கட்டான சூழ்நிலையில் அது பெற்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றதேயன்றி முறையானதாகப் போற்றி வரவேற்கப்படவில்லைபழகிய பின்னர் தலைவியை ஏமாற்றிச் செல்லுகின்ற போக்கும் அன்றைக்கு இருந்துள்ளது என்பதை,
                  பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
                  ஐயர் யாத்தனர் கரணம் என்ப.''
என்ற தொல்காப்பிய நூற்பாவும் உறுதிசெய்கிறது.
                            குறிஞ்சிப்பாட்டு ஆரியஅரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்காகக் கபிலரால் பாடப்பட்டது என்பது நமக்குக் காலங்காலமாகப் போதிக்கப்பட்டு வந்த பாடமாகும். திருமணத்திற்கு முன்னதாகிய மெய்யுறுபுணர்ச்சிக்குத் தோழி துணைநிற்கின்ற செயலையா நாம் தமிழ்ப்பண்பாடாக ஆரியஅரசனுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறோம்? உரைப்பாயிரத்தின் இறுதியில் இது உள்ளப்புணர்ச்சி என்றும் கூறப்படுகிறது. ஆனால் உள்ளத்தால் அவனை மணந்தாள் என்பது  உண்மையானால் அது அறத்தொடு பொருந்திய செயலே. அப்படியாயின்  அது உண்மையாக இருக்கின்ற பட்சத்தில் மெய்யுறு புணர்ச்சி எதற்காக?
                                இனி குறிஞ்சிப்பாட்டின் நாயகியாக, முக்கியப் பாத்திரமாகக் கருதப்படும் தோழியைப் பற்றியும், தவறு செய்தபோதிலும் இதுவரை யாராலும் குற்றம் சாட்டப்படாத தலைவனைப் பற்றியும் காண்போம். அன்றைய ஆடவரின் போக்கும், இன்றைய ஆடவரின் போக்கும் ஒன்றாகவே காணப்படுகிறது. ஒரு பெண்ணைத் தன்பக்கம் ஈர்ப்பதற்கான முயற்சியில் பெண்களின் உளவியலை அறிந்தவனாகவே தலைவன் செயல்படுகிறான். தலைவியும், தோழியும் விலகிச் செல்கின்ற போதும் அல்லது விலகிச் செல்ல முயற்சிக்கின்ற போதும் அவன் அவர்களை விலகவிடவில்லை. பெண்களைச் சுற்றி வளைத்துப் போடுகின்ற திறம் வாய்ந்தவனாகவும், அவர்களை நம்பவைக்கின்ற வகையில் பேச்சில் வல்லவனாகவும் இருக்கிறான்.
                  தலைவி தந்தையின் காவலில் வளர்வதாகத் தோழி குறிப்பிடுகிறாள். அவ்வாறு  தந்தையின் காவலில் வளர்கின்ற சூழலில் அன்றைய பெண்கள் இருந்துள்ளனர். அந்தக் காவலை விட்டு அவள் வெளியே வரும்போது அவளுடைய பெண்மைக்குக் காவலில்லை என்ற நிலையையே குறிஞ்சிப்பாட்டு காட்டுகிறது. தலைவியைத் தினைப்புனத்தில் கண்ட தலைவன் அவளை அடைய நினைக்கின்றான். அதன்பொருட்டு அவன் தலைவியிடம் பேசுவதற்கு முற்படுகிறான். முதல் முயற்சியாக,
                   ""ஆகாண் விடையின் அணிபெற வந்தெம்
                   அலமரல் ஆயிடை வெருஉதல் அஞ்சி
                   மெல்லிய இனிய மேவரக் கிளந்தெம்
                   ஐம்பால் ஆய்கவின் ஏத்தி ஒண்தொடி
                   அசைமென் சாயல் அவ்வாங் குந்தி
                   மடமதர் மழைக்கண் இளையீர் இறந்த
                   கெடுதியும் உடையேன் என்றனன்.'' (136 þ 142)
அதாவது அவனிடமிருந்து தப்பிச் சென்ற விலங்கினை அவர்கள் கண்டார்களா என்று விசாரிக்கின்றான். அவ்வாறு விசாரிக்கும்போதும் அவன் விசாரிக்க முற்படுவதோடு அவளது புறஅழகையும் வர்ணிக்கின்றான். பெண்கள் புகழ்ச்சிக்கு மயங்கக் கூடியவர்கள் என்ற உளவியலைத் தெரிந்து வைத்தே þ அவளைத் தன்வசம் ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே செயல்படுவதை அவனது பின்னைய பேச்சும் வெளிப்படுத்துகிறது. ஆனால் தலைவன் புதிய முகத்தினன் என்பதால் தலைவியும் தோழியும் அவனிடம் பேசவில்லை. உண்மையிலேயே தப்பிச் சென்ற விலங்கைக் கண்டறிய முற்பட்டவனாயின் அவர்கள் வாளாவிருந்தது குறித்த நிலைமையைப் புரிந்து கொண்டவனாய் அவன் விலகிச் சென்றிருக்க வேண்டும். ஆனால் அவன் இரண்டாவது முயற்சியாக,
                   ""கெடுதியும் விடீஇர் ஆயின் எம்மொடு
                   சொல்லலும் பழியோ மெல்லியலீர்'' (144 þ 145)
என்று கேட்கிறான். கெடுதியும் விடீராயின் என்று கூறுவதால் அவனது நோக்கம் தப்பிச் சென்ற விலங்கைக் கண்டுபிடிப்பதன்று என்பதும், எம்மொடு சொல்லலும் பழிமோ? என்ற கேட்பதால் தலைவியைத் தன்னோடு பேசவைப்பதே அவனது நோக்கம் என்பதும் உறுதிப்படுகிறது. ஆனால் அப்பொழுதும் தலைவி ஏதும் பதிலுரைக்கவில்லை. தலைவனும் நம்பிக்கை இழக்கவில்லை. மூன்றாவது முயற்சியாக,
                   ""தாறடு களிற்றின் வீறுபெற ஓச்சிக்
                   கல்லென் சுற்றக் கடுங்குரல் அவித்தெம்
                   சொல்லற் பாணி நின்றனன்'' 150 þ 152
அவன் நாய்களின் குரலை அடக்கியவனாய், அவ்விடத்தை விட்டு நகராமல் தலைவியின் பதிலை எதிர்பார்த்து நிற்கிறான். செய்வதறியாதும், பதில் கூறாதும் நிற்கின்ற அவர்களைப் பார்த்துத் தலைவன் துணிவு பெறுகிறான். நான்காவது முயற்சியாக, தமிழ்மரபை மீறி
                   ""அஞ்சி லோதி அசையல் யாவதும்
                   அஞ்சல் ஓம்புநின் அணிநலம் நுகர்கென
                   மாசறு சுடர்நுதல் நீவி நீடுநினைந்து'' (180 þ 18)
தோழியின் முகத்தைப் பார்த்துச் சிரிக்கிறான். நின் அணிநவம் நுகர்வேன் என்று முன்பின் அறியாத பழக்கமில்லாத பெண்ணிடம் முறைதவறி, வரம்பு மீறிப் பேசுகின்றான் என்றால் அவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்அவ்வாறு கூறியதோடும் அவன் நிற்கவில்லை. அவ்விடத்தை விட்டுப் போகத் தெரியாது நிற்கின்ற தலைவியின் குற்றமில்லாத நெற்றியை நீவுகின்றான். தோழியைக் குறிப்புடன் பார்த்துச் சிரிக்கின்றான். இதனைத் தமிழ்ப்பண்பாடு என்று எவ்வாறு ஏற்றுக் கொள்ள இயலும்? ஐந்தாவது முயற்சியில் அவன் தன்னிடமிருந்து விலக முடியாதவாறு தலைவியைத் தழுவி நிற்கிறான்
                   ""ஒய்யெனப் பிரியவும் விடாஅன் கவைஇ
                   ஆகம் அடைய முயங்கலின்'' 185 þ 186
இதுவும் வரவேற்கக்கூடிய தமிழ் மரபன்று. அந்த நிலையிலும் கூட, அவனது புகழ்ச்சிக்கும் நெருக்கத்திற்கும் இடையில் அவளது மனதில் ஒரு தடுமாற்றமும், தயக்கமும் இருக்கின்றது. அதைத் தலைவன் மிக நுணுக்கமாகப் புரிந்து கொள்கிறான். அவளது தடுமாற்றத்தை முழுமையாகப் போக்க எண்ணியவனாய்
ஆறாவது முயற்சியாக,
                   ""உள்ளத் தன்மை உள்ளினன் கொண்டு
                   சாறயர்ந் தன்ன மிடாஅச் சொன்றி
                   வருநர்க்கு வரையா வளநகர் பொற்ப
                   மலரத் திறந்த வாயில் பலருணப்
                   பைந்நிணம் ஒழுகிய நெய்ம்மலி அடிசில்
                   வசையில் வான்றிணைப் புரையோர் கடும்பொடு
                   விருந்துண் டெஞ்சிய மிச்சில் பெருந்தகை
                   நின்னோ டுண்டலும் புரைவ தென்றாங்கு
                   அறம்புணை யாகத் தேற்றிப் பிறங்குமலை
                   மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழுது
                   ஏமுறு வஞ்சினம் வாய்மையிற் றேற்றி
                   அந்தீந் தெண்ணீர் (200 þ 211) குடித்து அவன் தமிழர் பண்பாட்டையும், நம்பிக்கையையும் தொட்டுப்  பேசுகின்ற பேச்சை அவள் நம்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றாள். அன்றைய மாலைப்பொழுதுவரை அடர்ந்த பூங்காவிலே தலைவியோடு பொழுதைக் கழித்த தலைவன் அதன்பின்னரும் தன்னை நல்லவனாய்த் தலைவியிடம் நிலைநிறுத்திக் கொள்வதற்கான  ஏழாவது முயற்சியில் இறங்குகிறான்.
                   நேரிறை முன்கை பற்றி நுமர்தர
                   நாடறி நன்மணம் அயர்கம் சின்னாட்
                   கலங்கல் ஓம்புமின் இலங்கிழை யீரென
                   ஈர நன்மொழி தீரக் கூறித்
                   துணைபுணர் ஏற்றின் எம்மொடு வந்து
                   துஞ்சா முழவின் மூதூர் வாயில்
                   உண்துறைநிறுத்துப் பெயர்ந்தனன் அதற்கொண்டு
                   அன்றை யன்ன விருப்போ டென்றும்
                   இரவரன் மாலைய னேவரு தோறும்''  231þ 237
என்ற தோழியின் கூற்று அதை உறுதி செய்கிறது. உன்னைச் சார்ந்தவர்கள் உன் கையைப் பற்றித் தர உன்னை நாடறி நன்மணம் செய்குவேன் என்று அவள் மனம் சாதானம் அடையும்படியான ஈர நன்மொழி பேசி அவளுடைய ஊருக்கு அருகேயுள்ள நீர்த்துறையின்கண் அவளை நிறுத்திச் செல்கிறான். சோலையிலேயே அவளை விட்டுப் பிரிந்து விட்டால் அவள் தலைவனின் முழு இயல்பையும் உடனடியாக உணர்ந்து கொள்ள நேரிடும் என்ற எண்ணத்தினாலும், அன்று முதல் தொடர்ந்து தலைவியைப் பார்க்கவர அவன் திட்டமிடுதலாலும் அவன் மென்மையான மொழிகளைப் பேசி நீர்த்துறை வரை  வந்து செல்கிறான்
                             அயலூரைச் சேர்ந்த ஒருவன் துணிச்சலோடு தவறு செய்வதற்குக் களமிறங்க உறுதுணையாக நின்றவள் யார்? சந்தேகமில்லாமல் தோழியே. அவள் தலைவியின் களவொழுக்கம் கற்பொழுக்கமாக மாறுவதற்கு உறுதுணையாக நிற்பதாகவே நாம் எண்ணுகிறோம். ஆனால் உண்மை அதுவன்று. அவள் மிகச் சாமர்த்தியமாக, நடந்து போன தவறுகளுக்கெல்லாம் காரணமாகத் தாயையும், களிற்றையும் காரணம் காட்டுகிறாள். தன்னையும், தலைவியையும் மிகுந்த அப்பாவிகளாக வர்ணிக்கின்றாள். ஒருவேளை தலைவி அப்பாவியாக இருக்கலாம். அவ்வாறு இருந்ததால்தான் அவள் தலைவனின் பேச்சை நமபி வீண்போகின்றாள். ஆனால் தோழி உறுதியாக அப்பாவி இல்லை. அவள் மிகத் தெளிவானவள். நடந்து போன தவறுக்கு அவளே முழுப் பொறுப்பாகின்றாள். தலைவிக்கு உற்ற காவலாக இருக்கவே தாய் தோழியை உடன் அனுப்புகிறாள். ஆனால் அந்தத் தோழியோ தலைவனின் ஒரு சிரிப்பில் அவனது எண்ணக்கிடக்கையைப் புரிந்து கொண்டவளாய்த் தலைவியை விட்டு அகன்று செல்கிறாள். இதற்காகவா அவளுடைய தாய் அவளை அனுப்பினாள்? தலைவனின் எண்ணத்தைப் புரிந்து கொண்டவுடன் அவள் மூன்று காரியங்களைச் செய்திருக்கலாம்.
1. அவள் அந்த இடத்தில் தலைவனின் முகத்தலறைந்தாற் போலப் பதிலுரைத்திருக்க வேண்டும்.
2. தலைவியின் கையைப் பிடித்துக் கொண்டு வேறு இடத்திற்குச் சென்றிருக்க வேண்டும்.
3. இரண்டும் அவளால் இயலாமல் போயிருக்கிற பட்சத்தில் விரைந்து சென்று வீட்டார் யாரையாவது துணைக்கு அழைத்திருக்க வேண்டும்.
                  இந்த மூன்றில் எதையுமே செய்யாமல் பாலுக்குப் பூனையைக் காவல் வைத்து வேடிக்கை பார்த்த கதையாகச் செயல்பட்டவளை எவ்வாறு அறத்தொடு நின்றாள் என்று நாம் பெருமையுடன் கூற இயலும்? தலைவிக்காகத் தாயிடம் பேசுகின்றவள் அவளே என்று நாம் கூறலாம். ஆனால் உண்மையில் அவள் தலைவிக்காகப் பேசவில்லை. தனக்காகவே பேசுகின்றாள். ஆம். தன்னைக் காவலாக வைத்துத் தலைவியை உடன் அனுப்பிய தாய் தன்னைக் குற்றம் சாட்டிவிடக் கூடாது என்பதில் அவள் கவனமாக இருக்கிறாள். அதனால்தான் அவள் முந்திக் கொண்டு நடந்து போன தவறுகளுக்கெல்லாம் காரணமாகத் தாயையும், களிற்றையும் காரணம் காட்டுகிறாள்.
                   ""நற்கவின் தொலையவும் நறுந்தோ ணெகிழவும்
                   புட்பிறர் அறியவும் புலம்புவந் தலைப்பவும்
                   உட்கரந் துறையும் உய்யா அரும்படர்
                   செப்பல் வன்மையிற் செறித்தியான் கடவலின்'' (9 þ12)
என்று அவள் கூறுவதும் பொய். போலியான நடிப்பே. ஏனெனில்
தலைவி தினைப்புனம் காக்கச் சென்றபோது உடன் சென்றவளும், தலைவனின் குறிப்பறிந்து விலகிச் சென்றவளும் அவளே. ஆதலின் தலைவிக்கு நிகழ்ந்தவை அனைத்தும்þ நிகழ்ந்த நேரத்திலேயே, நிகழ்ந்த விதமாகவே தோழிக்குத் தெரியும். அவ்வாறு இருக்க உட்கரந் துறையும் உய்யா அரும்படர் செப்பல் வன்மையிற் செறித்தியான் கடவலின் என்று அவள் கூறுவது எவ்வாறு உண்மையாக இருக்க முடியும்?
                           முதல்நாள் தலைவியைச் சந்தித்த பிற்பாடும் இரவு நேரங்களில் இந்தச் சந்திப்புத் தொடர்கிறது. இரவுக்குறிதானும் இல்லத்தின் உள்ளும், அல்லாதவிடத்து மனையிலுள்ளோர் சொல் கேட்கும் எல்லைக்கண்தாகிய மனைப்படப்பையும் என்க என்று குறிஞ்சிப்பாட்டு உரை கூறுகிறது. ஆக வீட்டின் அருகிலும், வீட்டிற்குள்ளுமாகத் தலைவனைத் தலைவி சந்திக்கின்றாள் என்றால், அது தோழியின் சம்மதம் அல்லது உதவி இல்லாமல் நடந்திருக்க இயலாது. அப்படியாயின் தோழி எவ்வளவு நெஞ்சத்துணவு கொண்டவளாக இருக்க வேண்டும்? குடிப்பிறப்புக் கெட்டது என்று தலைவி வருந்துவதாகத் தோழி கூறுகிறாள். இதையும் முழுமையாக நம்பமுடியவில்லை. ஏனெனில் தலைவி இறுதியிலும் தலைவனுக்கு என்ன நேருமோ என்று வருந்துகிறாளேயன்றிக் குடிப்பிறப்புக் கெடுமோ என்று வருந்தவில்லை. குடிப்பிறப்புக் கெடும் என்று வருந்துபவளாக அவள் இருந்திருந்தால் அது தலைவனைச் சந்தித்த நாளிலேயே அதைப் பற்றி நினைத்திருக்க வேண்டுமல்லவா? தலைவனுக்கு வரும் இடர்களை அறிந்தபிறகுதான் இது ஒழுக்கமன்று என்று தலைவிக்குத் தெரிந்தது போலும். ஆதலின் இது தலைவி þ தோழியின் கூட்டு ஒப்பந்த முயற்சியாகத் தோன்றுகிறதேயன்றி உண்மையான ஊழின் வலியால் நடந்த களிறுதரு புணர்ச்சியாகத் தோன்றவில்லை.
                           தலைவனைச் சந்தித்து வீடு திரும்பிய பின்னராவது தோழி தாயிடம் உண்மையைக் கூறியிருக்கலாம். ஆனால் அப்பொழுதும் அவள் கூறவில்லை. பின்னர் எப்பொழுதுதான் கூறினாள்? தெய்வங்களை வேண்டியும், வேலன் வெறியாடல் போன்றவற்றிற்கும் தாய் ஏற்பாடு செய்வதைக் கண்ட பின்னர்தான் வீட்டார் உண்மையை அறியக் கூடிய நேரம் வந்துவிட்டது; இனியும் தாமதித்தால் நடந்த விஷயங்கள் அம்பலத்திற்கு வந்துவிடும் என்று அஞ்சியவளாய்த் தன்னைத் தற்சாத்துக் கொள்கின்ற முயற்சியில் அவள் பேசுகின்றாள்.

                      பொதுவாக, குற்றம் செய்தவர்களை விட, குற்றம் செய்யத் தூண்டியவர்களும், அதற்கு உறுதுணையாக இருந்தவர்களுமே அதிகமாகத் தண்டிக்கப்பட  வேண்டியவர்கள் என்பதே சமுதாயச் சட்டமாகவும் இருக்கின்ற பட்சத்தில் குறிஞ்சிப்பாட்டின் தலைவனும், தோழியும் தண்டிக்கப்பட  வேண்டியவர்கள் என்பதே சமுதாய அறம் தருகின்ற தீர்ப்பாகும்.