திங்கள், 12 ஜூன், 2017

சிறிது வெளிச்சம் - கு.ப.ரா

சிறிது வெளிச்சம் - கு.ப.ரா

அப்பா அவன் துன்பம் தீர்ந்தது என்று ஒருசமயம் தோன்றுகிறது.

ஐயோ தெரிந்தே அவளை சாவுக்கிரையாக விட்டு விட்டு வந்தேனே என்று ஒருசமயம் நெஞ்சம் துடிக்கிறது. 

நான் என்ன செய்ய முடிந்தது. அவள் இடமே கொடுக்கவில்லையே 

அந்த வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு எவ்வளவோ தடவைகள் அங்கே போயும் அவளைப் பார்க்க முடியவில்லை. 

நேற்று போனேன் அவள் மாரடைப்பால் இறந்துபோய் விட்டாளாம்! 

மாரடைப்பா 

அந்த மார்பில் இன்னும் என்னென்ன ரகசியங்கள் மூண்டு அதை
அடைத்து விட்டனவோ? 

அன்றிரவு சிலவற்றைத்தான் வெளியேற்றினாள் போல் இருக்கிறது. 
போதும், சிறிது வெளிச்சம் போதும்; இனிமேல் திறந்து சொல்ல முடியாது' என்றாள் கடைசியாக. 

திறந்து சொன்னதே என் உள்ளத்தில் விழுந்துவிடாத வேதனையாகி விட்டது. 


அது தெரிந்துதான் அவள் நிறுத்திக் கொண்டாள். ஆமாம்! 

இனிமேல் என்ன சொல்லுகிறேனே; அவள் இட்ட தடை அவளுடன் நீங்கிவிட்டது

நான் சென்னையில் சென்ற வருஷம், ஒரு வீட்டு ரேழி உள்ளில் குடியிருந்தேன். உள்ளே ஒரே ஒரு குடித்தனம். புருஷன் பெண்சாதி, உலகத்தில் சொல்லிக்கொள்ளுகிறபடி புருஷனுக்கு எங்கோ ஒரு பாங்கில் வேலை. பகல் முழுவதும் வீட்டிலிருக்க மாட்டான்: இரவில் வீட்டில் இருப்பதாகப் பெயர். சாப்பிட்டுவிட்டு வெளியே போவான்; இரவு இரண்டு மணிக்கு வந்து கதவைத் தட்டுவான். 

அந்த வீட்டில் நான் தனியாக இருப்பது எனக்கே சங்கடமாக இருந்தது. நான் எழுத்தாளன் இரவும் பகலும் வீட்டிலேயே இருப்பவன்.

காலையிலும் மாலையிலும்தான் சிறிது நேரம் வெளியே போவேன்.

அந்த மனிதன் முந்திக் கொண்டு விட்டான்.

'ஸார், நீங்கள் இங்கே தனியே இருக்கிறோமே என்று சங்கோசப்பட வேண்டாம். நான் சந்தேகப்படும் பேர்வழியல்ல; நீங்களும் உங்கள் ஜோலியோ நீங்களோ என்று இருக்கிறீர்கள். மனுஷ்யாள் தன்மையை அறிய எவ்வளவு நேரமாகும்? உங்களைப் போன்ற ஆசாமி வீட்டில் இருப்பது, நான் சதா வெளியே போவதற்குச் செளகரியமாக இருக்கிறது.

'உங்களைப் போல என்று சொல்ல என்னிடம் என்னத்தைக் கண்டான்?

அவள்-சாவித்திரி-என் கண்களில் படுவதே இல்லை. நானும் சாதாரணமாகப் பெண்கள் முகத்தை தைரியமாகக் கண்ணெடுத்துப் பார்க்கும் தன்மை இல்லாதவன். எனவே எனக்கு அவள் குரல் மட்டும் தான் சிறிது காலம் பரிச்சயமாகி இருந்தது.

அவன்-அவன் பெயர் கோபாலய்யர்-ஆபீஸுக்குப் போகுமுன்பே நான் முற்றத்திலிருந்த குழாயை உபயோகித்துக் கொண்டு விடுவேன். பிறகு, அந்தப் பக்கமே போகமாட்டேன். அவன் வெளியே போனதும் அவள் ரேழிக் கதவைத் தாளிட்டுக் கொண்டு விடுவாள். சாவித்திரி யாருடனும் வம்பு பேசுவதில்லை; வெளியே வருவதே இல்லை.

இப்படி ஒரு வாரமாயிற்று. இரவு இரண்டு மணிக்கு அவன் வந்து கதவைத் தட்டுவதும், சாவித்திரி எழுந்து போய்க் கதவைத் திறப்பதும், பிறகு கதவைத் தாளிட்டுக் கொண்டு அவள் அவனுடன் உள்ளே போவதும் எனக்கு அரைத் தூக்கத்தில் கேட்கும். ஒரு நாள் அவன் வந்து கதவைத் தட்டியபோது அவள் அயர்ந்து தூங்கிப் போய் விட்டாள் போல் இருக்கிறது. நாலைந்து தடவை கதவைத் தட்டிவிட்டான். நான் எழுந்து போய்க் கதவைத் திறந்தேன்.

'ஒ! நீங்களா திறந்தீர்கள்? மன்னிக்க வேண்டும்! என்று என்னிடம் சொல்லிவிட்டு அவன் உள்ளே போனான். நான் என் அறையில் போய் படுத்து கதவைத் தாளிட்டுக் கொண்டேன்.

உள்ளே போனவன் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை என்ன செய்தானோ தெரியவில்லை. பிறகு தெரிந்தது; உதைத்தான் காலால் அவள் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து, ரொம்ப நாழி தட்டினர்களா? மத்தியானமெல்லாம் தலைவலி, உடம்பு... தெரியாமல்...' என்று அவள் மெதுவாக பயந்து சொன்னது என் காதில் பட்டது.

'உடம்பு தெரியுமா உனக்கு உடம்பு தெரியச் சொல்கிறேன்! என்று சொல்லிக் கொண்டு அடித்தான் அவளை அடித்தது என் காதில் விழுந்தது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. புருஷன் பெண்சாதி கலகத்தில் பிற மனிதன் தலையிடக் கூடாது என்று கடைசியாகச் சும்மா இருந்துவிட்டேன்.

பிறகு இரவு முழுவதும் மூச்சுப் பேச்சு இல்லை. ஆனால் அவள் தூங்கவே இல்லை என்பது எனக்குத் தெரிந்தது. ஏனென்றால் நானும் தூங்கவில்லை.

மறுநாள் இரவு கதவை அவள் விழித்திருந்து திறந்தாள். ஆனால், அன்றும் அவளுக்கு அடி விழுந்தது. முதல் நாள் போல அவள் பேசாமல் இருக்கவில்லை.

"என்னை ஏன் இப்படி அடித்துக் கொல்லுகிறீர்கள்? நீங்கள் செய்வது எதையாவது நான் வேண்டாமென்கிறேனா?

'ஒஹோ, இப்பொழுது உனக்கு வாய் வேறா? '

எவ்வளவு நாள்தான் நானும்...'

'சீ, வாயைத் திறந்தால் பல்லை உதிர்த்து விடுவேன்?

'உதிர்த்து விடுங்கள்!"

பளாரென்று கன்னத்தில் அரை விழுந்த சத்தம் கேட்டது. என்னை யறியாமல் நான் எழுந்து ரேழிக் கதவண்டை போய், ஸார், கதவைத் திறவுங்கள் என்றேன்.

அதற்குமுன் என்னோடு பல்லிளித்துக் கொண்டு பேசி வந்த மனிதன் உள்ளே இருந்து மிருகம் போலச் சீறினான்.

"எதற்காக?"

'திறவுங்கள், சொல்லுகிறேன்!

'முடியாது, ஸார்!

" திறக்காவிட்டால் கதவை உடைப்பேன்!"

அவன் கதவைத் திறந்துகொண்டு வெளியே ரேழிக்கு வந்து மறுபடியும் கதவை மூடிக்கொண்டு என்ன ஸார்?' என்றான்.

'உங்கள் மனைவியை நீங்கள் அடித்தது போல் காதில் பட்டது?

இருக்கலாம், அதைப் பற்றி உங்களுக்கென்ன?

'நீங்கள் அந்த மாதிரிச் செய்யும்படி நான் விடமுடியாது!"

"என்ன செய்வீர்கள்?"

போலீஸுக்குத் தகவல் கொடுப்பேன், முதலில் நானே பலாத்காரமாக உங்களைத் தடுப்பேன்."

அவன் முகத்தில் சோகமும் திகிலும் தென்பட்டன. திருதிருவென்று சற்று விழித்தான். என்னுடைய திடமான பேச்சைக்கண்டு அவன் கலங்கிப் போனான் என்று தெரிந்தது. அவன் கோழை என்று உடனே கண்டேன்; இல்லாவிட்டால் ஒருவன் பெண் பிள்ளையை அடிப்பானா?

'நீங்கள் சாது, ஒரு வழிக்கும் வரமாட்டீர்கள் என்று உங்களை ரேழியில் குடிவைத்தேன். நீங்கள் அனாவசியமாக என் விஷயத்தில் தலையிடுவதாக இருந்தால் காலையிலேயே காலி செய்து விடவேண்டும்.

'நான் காலி செய்வதைப் பற்றி பிறகு பார்த்துக் கொள்ளுவோம். இனிமேல் நீங்கள் விடிகிற வரையில் உள்ளே போகக்கூடாது. 

'நீர் யாரையா, இந்த மாதிரியெல்லாம் உத்தரவு செய்ய?

"யாராயிரிருந்தால் என்ன? இப்பொழுது நீர் நான் சொன்னபடி செய்ய வேண்டியதுதான்; மீறினீரானால் உமக்கு நல்லதல்ல.

'பயமுறுத்துகிறீர்களோ?

பயமுறுத்துவது மட்டுமல்ல-செயலிலே காட்டி விடுவேன். வாரும், என் அறையில் படுத்துக் கொள்ளலாம். அம்மா, கதவை உள்ளே தாழ்ப்பாள் போட்டுக் கொள்ளுங்கள் என்றேன் அவள் பக்கம் திரும்பி.

போட்டு விடுவாளோ அவள்?"

'நான் இங்கே இருக்கிறவரையில் நீர் இனிமேல் அந்த அம்மாள் மேல் விரல் வைக்க முடியாது."

அப்பொழுது சாவித்திரி கதவைத் திறந்துகொண்டு வந்தாள். என்னுடன் அவள் பேசினதே இல்லை.

தயவு செய்து நீங்கள் தலையிட வேண்டாம் என்று என்னிடம் சொல்லிவிட்டுப் புருஷனைப் பார்த்து, வாருங்கள் உள்ளே! என்றாள்.

'நீ போடி உள்ளே! உன்னை யார் இங்கே வரச் சொன்னா என்று அவன் அவள்மேல் சீறி விழுந்தான்.

'அம்மா, விஷயம் உங்கள் கையிலும் இல்லை. என் கையிலும் இல்லை. நான் தலையிடாமல் இருக்க முடியாது. போலீஸுக்குத் தகவல் கொடுத்தால் அனாவசியமாக உங்களுக்கு சங்கடமே என்றுதான் நானே தலையிடுகிறேன் என்றேன் அவளைப் பார்த்து.

'நீங்கள் இதையெல்லாம் காதில் போட்டுக்கொண்டு தலையிடுவது தான் எனக்குச் சங்கடம் என்று அவள் சொன்னாள்.

சரி, கதவு திறந்திருக்கட்டும். நீங்கள் உள்ளே படுத்துக் கொள்ளுங்கள். வாசற்கதவைத் தாளிட்டு வருகிறேன். இவரும் நானும் என் அறையில் படுத்துக் கொள்ளுகிறோம் என்றேன்.

நான் இங்கே படுத்துக்கொள்ள முடியாது. எனக்க வெளியே போக வேண்டும். ஜோலி இருக்கிறது என்று அந்த மனிதன் வெளியே போக ஆயத்தமானான்.

என்ன மனிதன் அவன் அவன் போக்க எனக்கு அர்த்தமே ஆகவில்லை.

சாவித்திரி உள்ளே போய்க் கதவைத் தாளிட்டுக் கொண்டாள். அவன் வெளியே போனான். நான் வாசற்கதவை மூடிக்கொண்டு என் அறையில் போய்ப் படுத்துக்கொண்டேன்.

தூக்கம் வரவில்லை. சாவித்திரியின் உருவம் என் முன் நின்றது. நல்ல யெளவனத்தின் உன்னத சோபையில் ஆழ்ந்த துக்கம் ஒன்று அழகிய சருமத்தில் மேகநீர் பாய்ந்தது போலத் தென்பட்டது. பதினெட்டு வயதுதான் இருக்கும். சிவப்பு என்று சொல்லுகிறோமே, அந்த மாதிரி கண்ணுக்கு இதமான சிவப்பு. மிகவும் அபூர்வம் இதழ்கள் மாந்தளிர்கள் போல இருந்தன. அப்பொழுதுதான் அந்த மின்சார விளக்கின் வெளிச்சத்தில் கண்டேன். கண்களுக்குப் பச்சை விளக்கு அளிக்கும் குளிர்ச்சியைப் போன்ற ஒரு ஒளி அவள் தேகத்திலிருந்து வீசிற்று.

அவளையா இந்த மனிதன் இந்த மாதிரி...!

தாழ்ப்பாள் எடுபடும் சத்தம் கேட்டது.

நான் படுக்கையில் சட்டென்று எழுந்து உட்கார்ந்தேன். அவள் என் அறை வாசலில் வந்து நின்றாள் போலத் தோன்றிற்று. உடனே எழுந்து மின்சார விளக்கைப் போட்டேன்.

வேண்டாம், விளக்கு வேண்டாம், அணைத்து விடுங்கள் என்றாள் அவள்.

உடனே அதை அணைத்துவிட்டு, படுக்கையிலேயே உட்கார்ந்து விட்டேன். அவள் என் காலடியில் வந்து உட்கார்ந்து கொண்டாள். 'புருஷன் ஒரு விதம், மனைவி ஒரு விதமா என்று எனக்கு ஆச்சரியம்.

'உங்களுடன் தனியாக இப்படி இருட்டில் பேசத் துணிந்தேனே என்று நீங்கள் யோசனை செய்ய வேண்டாம். நீங்கள் இதற்காக என்னை வெறுக்க மாட்டீர்கள் என்று எனக்கு எதனாலோ தோன்றிற்று... வந்தேன்.

'அம்மா...'

'என் பெயர் சாவித்திரி.

“எதற்காக இந்த மனிதனிடம் இங்கே இருக்கிறீர்கள்? பிறந்தகம் போகக் கூடாதா? இந்த புருஷனிடம் வாழாவிட்டால் என்ன கெட்டுப் போய் விட்டது

'இருக்க வேண்டிய காலம் என்று ஊர் ஏற்படுத்தியிருக்கிறதே. அதற்குமேல் பிறந்த வீட்டில் இடமேது ?"

ஆனால் அங்கே இருக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்களா? '

வாயைத் திறந்து சொல்ல வேண்டுமா?"

'பெற்றோர்களாவது, புருஷனாவது, எல்லாம் சுத்த அபத்தம். காக்கை குருவி போலத்தான் மனிதர்களும். இறகு முளைத்த குஞ்சைக் கூட்டில் நுழைய விடுகிறதா பட்சி?

'புருஷன்...'

'என்னடா இந்தப் பெண் இப்படிப் பேசுகிறாள் என்று நீங்கள் நினைப்பீர்கள். நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன நினைத்தாலும் எனக்கு ஒன்றுதான். புருஷனா புருஷனிடம் வந்த சில மாதங்கள் பெண் புதிதாக இருக்கிறாள். பிறகு புதிதான பானம் குடித்துத் தீர்ந்த பாத்திரம் போலத்தான் அவள்...'

'நீங்கள் அப்படி...'

'நீங்கள் என்று ஏன் சொல்லுகிறீர்கள், நீங்கள் தானே பெரியவர்கள். என் நெஞ்சு புண்ணாகி, அதன் ஆழத்திலிருக்கும், எரியும் உண்மையைச் சொல்லுகிறேன். உங்களுக்குக் கலியாணம் ஆகிவிட்டதா?’

'இல்லை."

ஆகி, மனைவி வந்து சில மாதங்கள் ஆகியிருந்தால், நான் சொல்வது உங்களுக்கு அர்த்தமாகும்.'

வாசற்புறம் கேட்காதபடி சற்று மெல்லிய குரலில்தான் பேசினாள். ஆனால், அந்தப் பேச்சில் இருந்த துடிப்பும் வேதனையும் தாங்க முடியாதவையாக இருந்தன.

'அம்மா... சாவித்திரி, உன் புருஷன் வந்துவிடப் போகிறான். ஏதாவது தப்பாக நினைத்துக்கொண்டு...'

’இனிமேல் என்னை என்ன செய்துவிடப்போகிறான். கொலைதானே செய்யலாம்? அதற்குமேல்?’

'நீ இப்படிப் பேசலாமா? இன்னும் உன் புருஷனுக்கு புத்தி வரலாம். நீயே நல்ல வார்த்தை சொல்லிப் பார்க்கலாம்.

'நல்ல வார்த்தையா? புத்தியா? இந்த மூன்று வருஷங்களில் இல்லாததா?

பின் என்ன செய்யப் போகிறீர்கள்?"

‘என்ன செய்கிறது? தற்கொலை செய்துகொள்ளப் பார்த்தேன், முடியவில்லை - அதாவது என்னால் முடியவில்லை. என்னால் பொய் சொல்ல முடியாது. உயிர் இருக்கிற வரை அடிபட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.'

அடடா, இப்படியேயா!'

வேறு வழி என்ன இருக்கிறது?

என்னால் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை.

'என்ன பதில் இல்லை? என்று அவள் சிரித்தாள்.

'நான் என்ன சொல்வது... அதாவது நான் ஒன்று கேட்கட்டுமா?" என்று திடீரென்று கேட்டேன்.

கேட்கிறது தெரியும். உங்களுடன் ஓடிவந்துவிடச் சொல்லுகிறீர்கள். நீங்களும் இதே மாதிரிதானே சில மாதங்களுக்குப் பிறகு.? '

என்ன சாவித்திரி..."

அதாவது, ஒருவேளை நீங்கள் அடித்துக் கொல்லாமல் இருப்பீர்கள். மிருக இச்சை மிகைப்படும்போது என்னிடம் கொஞ்சுவீர்கள். இச்சை ஒய்ந்ததும் முகம் திருப்பிக் கொள்ளுவீர்கள். புது முகத்தைப் பார்ப்பீர்கள்."

'நீ இவ்வளவு பட்டவர்த்தனமாகப் பேசும்பொழுது, நானும் பேசலாமா?

'தாராளமாக!'

'என்னைக் கவர்ந்து வைத்துக்கொள்ளும் சக்தி உன்னிடமல்லவா இருக்கிறது!"

அதெல்லாம் சுத்தக் கதை. அதை இங்கே இப்பொழுது புகவிடாதீர்கள். வெட்கமற்று உண்மையை நான் கொட்டுகிறேன். நீங்கள் எதையோ சொல்லுகிறீர்களே? எந்த அழகும் நீடித்து மனிதனுக்கு திருப்தி கொடுக்காது...'

'நீ எப்படி அந்தமாதிரிப் பொதுப்படையாகத் தீர்மானிக்கலாம்?"

‘எப்படியா? என் புருஷனைப்போல் என்னிடம் பல்லைக்காட்டின மனிதன் இருக்கமாட்டான். நான் குரூபியல்ல, கிழவியல்ல, நோய் கொண்டவள் அல்ல. இதையும் சொல்லுகிறேன். மிருக இச்சைக்கு பதில் சொல்லாதவளுமல்ல. போதுமா?"

'சாவித்திரி, உன் உள்ளத்தில் ஏற்பட்ட சோகத்தால் நீ இப்படிப் பேசுகிறாய். என்றாவது நீ சுகம் என்றதை ருசி பார்த்திருக்கிறாயா?

“எது சுகம்? நகைகள் போட்டுக்கொள்வதா? நான் போடாத நகை கிடையாது. என் தகப்பனார் நாகப்பட்டணத்தில் பெரிய வக்கீல், பணக்காரர்; புடவை, ரவிக்கை-நான் அணியாத தினுசு கிடையாது. சாப்பாடா, அது எனக்குப் பிடிக்காது. வேறென்ன பாக்கி. சரீர சுகம்; நான் ஒருநாளும் அடையவில்லை இதுவரையில்.

'அதாவது...'

'என் புருஷன் என்னை அனுபவித்துக் குலைத்திருக்கிறான். நான் சுகம் என்பதைக் காணவில்லை."

பின் எதைத்தான் சுகம் என்கிறாய்? '

நான் உள்ளத்தைத் திறந்து பேசுவதற்கும் கூட ஒரு எல்லை இல்லையா? இதற்கும் மேலுமா என்னைச் சொல்லச் சொல்லுகிறீர்கள்?"

'உன் புருஷன் ஏன்...?"

'என் புருஷனுக்கு என் சரீரம் சலித்துப்போய் விட்டது. வேறு பெண்ணைத் தேடிக் கொண்டுவிட்டான், விலை கொடுத்து.

'சாவித்திரி தைரியமாக ஒன்று செய்யலாமே!

'நான் எதையும் செய்வேன். ஆனால், உபயோகமில்லை. சிறிது காலம் உங்களைத் திருப்தி செய்யலாம் அவ்வளவுதான்.

'உன்னைத் திருப்தி செய்ய நான் முயற்சி செய்து பார்க்கிறேனே!"

'வீணாக உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். என் ரூபத்தைக் கண்டு நீங்கள் மயங்கிவிட்டீர்கள். உங்கள் இச்சை பூர்த்தியாவதற்காக, என்னை திருப்தி செய்வதாகச் சொல்லுகிறீர்கள்.

“எது சொன்னாலும்...'

'ஒன்றுமே சொல்லவேண்டாம், இனிமேல் விளக்கைப் போடுங்கள்.

நான் எழுந்து விளக்கைப் போட்டேன்.

'நான் போய்ப் படுத்துக்கொள்ளட்டுமா?"

தூக்கம் வருகிறதா?”

தூக்கமா? இப்பொழுது இல்லை

பின் சற்று தான் இரேன்.

'உங்கள் தூக்கமும் கெடவா? 

'சாவித்திரி..."

'ஒன்றும் சொல்லாதீர்கள்!"

நீ சொல்வதெல்லாம் சரி என்றுதான் எனக்குத் தோன்ற ஆரம்பிக்கிறது

. நிஜம்மா என்று எழுந்து என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

'பொய் சொன்னால்தான் நீ உடனே...

அப்பா, இந்தக் கட்டைக்கு கொஞ்சம் ஆறுதல்'

'சாவித்திரி, உன்னால் இன்று என் அபிப்பிராயங்களே மாறுதல் அடைந்துவிட்டன.

அதெல்லாம் இருக்கட்டும். இந்த அந்தரங்கம் நம்முடன் இருக் கட்டும். என் கட்டை சாய்ந்தபிறகு வேண்டுமானால் யாரிடமாவது சொல்லுங்கள்.

'ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? '

இல்லை, இனிமேல் இந்த சரீரம் என் சோகத்தைத் தாங்காது. ஆனால், எதனாலோ இப்பொழுது எனக்கேதோ ஒரு திருப்தி ஏற்படுகிறது.

நான் சொல்லவில்லையா? என்று நான் என்னையும் அறியாமல், துவண்டு விழுபவள்போல் இருந்த அவளிடம் நெருங்கி, என்மேல் சாய்த்துக்கொண்டேன்.

அவள் ஒன்றும் பேசாமல் செய்யாமல் கண்களை மூடிக் கொண்டு சிறிது நேரம் அப்படியே கிடந்தாள்.

இவ்வளவு மாதங்கள் கழித்து, நிதான புத்தியுடன் இதை எழுதும் போதுகூட, நான் செய்ததை பூசி மெழுகிச் சொல்ல மனம் வரவில்லை எனக்கு. இப்படி மனம் விட்டு ஒரு பெண் சொன்ன வார்த்தைகளைக் கொஞ்சங்கூட மழுப்பாமல் எழுதின பிறகு கடைசியில் ஒரு பொய்யைச் சேர்க்க முடியவில்லை.

மெள்ள அவளைப் படுக்கையில் படுக்கவைத்தேன்... என் படுக்கையில் அப்பொழுதும் அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவ்வளவு ரகஸ்யங்களை ஒரேயடியாக வெளியே கொட்டின இதழ்கள் ஒய்ந்து போனது போலப் பிரித்த படியே கிடந்தன.

திடீரென்று, ‘அம்மா! போதுமடி!’ என்று கண்களை மூடிய வண்ணமே முனகினாள்.

'சாவித்திரி, என்னம்மா? என்று நான் குனிந்து அவள் முகத்துடன் முகம் வைத்துக்கொண்டேன்."

போதும்!"

'சாவித்திரி, விளக்கு...'

அவள் திடீரென்று எழுந்து உட்கார்ந்தாள்.

‘ஆமாம், விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக் கொள்ளுங்கள். சற்றுநேரம் இருந்த வெளிச்சம் போதும்!’ என்று எழுந்து நின்றாள்.

'நீ சொல்வது அர்த்தமாகவில்லை, சாவித்திரி!’ 

'இனிமேல் திறந்து சொல்ல முடியாது. நான் போகிறேன். நாளைக்கு வேறு ஜாகை பார்த்துக்கொள்ளுங்கள்!"

'ஏன், ஏன் நான் என்ன தப்பு செய்துவிட்டேன்?’

'ஒரு தப்பும் இல்லை. இனிமேல் நாம் இந்த வீட்டில் சேர்ந்து இருக்கக் கூடாது, ஆபத்து என்று சொல்லி என்னைப் பார்த்துவிட்டு, சாவித்திரி தானே விளக்கை அணைத்துவிட்டுச் சிறிதும் தயங்காமல் உள்ளே போய்க் கதவைத் தாளிட்டுக்கொண்டாள்.

சட்டென்று என் உள்ளத்திலும் சற்று எரிந்த விளக்கு அணைந்தது.

போதும்!

எது போதும் என்றாள்? தன் வாழ்க்கையா, துக்கமா, தன் அழகா,என் ஆறுதலா, அல்லது அந்தச் சிறிது வெளிச்சத்தில்...?