திங்கள், 12 ஜூன், 2017

இராமாயணத்தில் தசரதன் - கைகேயி உறவு

இராமாயணத்தில் தசரதன் - கைகேயி உறவு
முனைவர் கா.ஸ்ரீதர்,
முதுகலைத் தமிழ்த்துறைத் தலைவர்,
வி.இ.நா.செந்திக்குமார நாடார் கல்லூரி (தன்னாட்சி),
விருதுநகர்.

கம்பரால் ‘இராமகாதை’ என்று பெயரிடப்பட்ட கம்பாராமாயணம் பல்வேறு கிளைக்கதைகளையும் எண்ணற்ற உளவியல் நிகழ்வுகளையும் உட்கொண்டுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் பெரும்பாலும் அனைத்துமே தமது எண்ணப்போக்கிற்கேற்ப எதிராளி செயல்பட வேண்டும்உடன்பட வேண்டும் என்ற உளவியல் நிலைப்பாடு கொண்டவையாகவே உள்ளன. இதன் அடிப்படையில் தசரதன் மற்றும் கைகேயி ஆகியோர் தத்தமது (பெரு) விருப்பத்திற்கு எங்ஙனம் செயல்வடிவம் கொடுத்தனர் என்பது ஆய்விற்குரியதாகும். மனிதன் தன்னுடைய சுயத்திற்காக,உறவுகளை விரும்பியே இழக்கிறான் என்ற கருதுகோளைக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.
தசரதன்
தசரதன், இராமன் முதல் சத்ருகன் வரையிலான நான்கு புதல்வர்களைத் தனது செல்வமாகக் கருதியவன் ஆவான். ஆனால் இராமனை மட்டும் தனது இன்னுயிராகக் கொண்டிருந்தான். நீண்ட நெடுங்காலமாகத் தான் துய்த்த அரச வாழ்வு இன்பமயமானதாக இருப்பினும் அது,
“………… நெடிது நாள் உண்ட
எச்சிலை நுகருவது இன்பம் ஆகுமோ” (இராமாயணம்.1338)
என்று தன்னைத்தானே தசரதன் வெறுமையுடன் நோக்கிக் கொள்கிறான். மேலும் அவன் தன்னுடைய மனத்துயரைப் போக்கும் வகையில் இராமனிடம் அரசப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு கானகம் சென்று தவவாழ்க்கை மேற்கொள்வதையே விரும்பினான். இந்நிலையில் கைகேயி பரதன் நாடாள வேண்டும்; இராமன் காடாள வேண்டும் என்ற வேண்டுகளைää
“……………………………………… என்
சேய் அரசு ஆள்வது சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் அள்வது………………………” (இராமாயணம் 1504)
என்பதாக தசரதன் முன்வைத்தாள். இதனைக் கேட்ட தசரதன் பாம்பு தீண்டிய களிறு போல கீழே விழுந்தும் கொல்லன் ஊது உலைக் கனல் போல பெருமூச்சும் விட்டதால் அவளை விட்டு உயிர் போகத் தொடங்கியது.
நீண்ட காலமாகப் புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்த தசரதன் வசிட்டரின் ஆலோசனைப்படி யாகம் வளர்த்து அதன் பயனாய் நான்கு புத்திரர்களைப் பெற்றான். இந்நால்வரிடமும் அன்பையும் பாசத்தையும் சரி நிகராகக் கொள்ளாமல் இராமன்பால் மட்டும் அதீத அன்பு கொண்டிருந்தான். அதனாலே தசரதனால் பரதனின் அரச உரிமையை மனத்தளவில்கூட ஏற்க முடியவில்லை. மேலும் வனம் சென்றதைத் தசரதன் அறிந்தவுடனேயே உயிர் நீத்தான் என்பதைää
“வேய் உயர் கானம் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும்
போயினன் என்றான்; என்ற போழ்தத்தே ஆவி போனான்” (இராமாயணம் 1898)
என்பதாகக் கம்பன் பதிவு செய்துள்ளார்.
அரசவுரிமை முறைப்படி தனக்கே வரவேண்டும்; தரவேண்டும் என்று இராமனோ கோசலையோ வேண்டுகோள் வைக்கவில்லை. மாறாக பரதன் நாடாள வேண்டும் என்று கைகேயி விரும்புகிறாள் எனில் தசரதன் அதற்கேற்ப வழங்கி இருக்கலாம். காட்டிற்குச் சென்று தவவாழ்க்கை மேற்கொள்ளவிருக்கும் தசரதனுக்கு,அயோத்தியை இராமன் ஆண்டால் என்ன? பரதன் ஆண்டால் என்ன?
என்னுடைய எண்ணம் ஈடேறவில்லை என்பதற்காக உயிரை இழந்தாலும் இழப்பனே ஒழிய உனது (கைகேயியின்) எண்ணத்திற்கு உடன்பட மாட்டேன் என்பதாகத் தசரதனின் வாழ்க்கை முடிகிறது. புத்திரர்களின் மீது சமமாக அன்பு கொள்ளாமல் தலைமகன் மீது மட்டும் கூடுதல் அன்பு கொள்ளும் வகையிலும் மனைவியின் எண்ணத்தை அறியாது, எண்ணத்திற்கு உடன்படாத வகையிலேயே தசரதனின் இல்லற உறவு இருந்ததை இதன் மூலம் அறிய முடிகிறது. 
கைகேயி
இராமாயணக் கதையின் போக்கை முதலில் திசைத்திருப்பிய பேராளுமைக்குரியவள் கைகேயி ஆவாள். தசரதச் சக்ரவர்த்தியின் பேரன்பைப் பெற்றவர்.
“தாய் கையில் வளர்ந்திலன்;;; வளர்த்தது தவத்தால் 
கேகயன் மடந்தை; கிளர் ஞாலம் இவன் ஆள” (இராமாயணம் 1591)
என்று பரதனை விட இராமன்பால் மிகுந்த அன்பு கொண்டு அவளை ஈன்றதாய் போல் வளர்த்தவள் என்று அவளும் ஊராரும் பெருமைப்பட பேசும் அளவிற்குக் கைகேயியின் மனம் பரந்துபட்டதும் பண்பட்டதும் ஆகும்.
“வாராது அரும் புவிக்கு எல்லாம் வேதமே அன
இராமனைப் பயந்த எற்கு இடர் உண்டோ? என்றாள்” (இராமாயணம் 1453)
ஆனால் மந்திரையின் மந்திர ஆலோசனைக்குப்பின் ‘என்சேய்’ என்று பரதனைச் சுட்டுகிறாள். இராமன், சீதையின் வழியே வந்த உறவு என்பது போல், ‘சீதையின் கேள்வன்’ என்று கூறுகிறாள். ‘இராமனைப் பயந்த எற்கு இடர் உண்டோ?’ என்று பெருமிதம் கொண்டவள்,
“…………………………………………………
பூழி வெய் கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி
ஏழ்-இரண்டு ஆண்டின் வா”
என்று தெளிந்த மனத்தைக் கொண்டவள் போல் பேசுகிறாள். கைகேயின் ‘இராமன் வனம் செல்ல வேண்டும்’ என்ற வரத்திற்குத் தசரதன் ‘உன் அபயம் என் உயிர்’ என்றும்,
“இன்று ஓர்காறும் எல் வளையார்
தம் இறையோரைக்
கொன்றார் இல்லை; கொல்லுதியோ” (இராமாயணம் 1531)
என்றும் தசரதன் தனது கருத்தை முன் வைக்கிறான். இருப்பினும் கைகேயி தனது முடிவில் இருந்து சற்றும் தளராமல்,
“ஊழியின் பெற்றாய் என்று உணர
இன்றேல் உயிர் மாய்வேன்” (இராமாயணம் 1536)
என்று கைகேயி தன் விருப்பத்தை ஏற்கவில்லை எனில் தற்கொலை செய்வேன் என்கிறாள். இறுதியில் தசரதன் கைகேயியின் விருப்பத்தை நிறைவு செய்து உயிர் துறக்கிறான்.
குடும்ப உறவு இல்லாத மந்தரையின் கூற்றுக்கு இணங்கிய கைகேயியின் மனம் கணவன், மகன், ஊரார் மற்றும் தேவர்கள் ஏற்காத ஒன்றிற்காகக் கணவன் உயிரையும் இழக்கத் துணிக்கிறது; தன்னுயிரையும் இழக்கத் துணிகிறது. ‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’ என்பதற்கேற்ப,
“எனக்கு நல்லையும் அல்லை நீ,
என் மகன் பரதன்
தனக்கு நல்லையும் அல்லை” (இராமாயணம் 1471) 
என்று இருந்த கைகேயின் மனம்,
“எனை உவந்தனை இனியை என் மகனுக்கும் அனையான்
புனையும் நீள் முடி பெறும்படி புகலுதி” (இராமாயணம் 1485)
என்று மந்தரையிடம் வழி கேட்கும் நிலைக்குச் சென்று விட்டது. 
மனிதன் சமூகத்தில் உள்ளவர்களுடன் சற்று தாழ்ந்து போய் விடுகிறான். ஆனால் குடும்ப உறவுகளுக்குள் தனது கருத்தில் இருந்தும், முடிவில் இருந்தும் சற்றுத் தாழ்ந்தோ, விட்டுக்கொடுத்தோ செல்லாத நிலையையே காண முடிகிறது. நெருங்கிய உறவுகள் நமக்காக விட்டுத்தர வேண்டும் என்ற தன்முனைப்பும் எனது எண்ணத்தைச் சரிவர புரிந்து மேற்கொள்ளவில்லையே என்ற ஆதங்கமும் மேலோங்கி நிற்கிறது. தனது எண்ணம் ஈடேற எதையும் விட்டுத்தருவதற்குத் துணியும் மனம் இறுதியில் தன்னையே (உயிரையே) விட்டுத்தரவும் துணிகிறது.
முடிவுரை
மனிதன் தன் உறவுகள், தனது ஆதிக்கத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவனாக உள்ளான். உறவோரின் கருத்து சரியா, சாதகமா, பாதகமா என்பதை உணர்வதில்லை. தனது இருப்பைப் பதிவு செய்யவும், நிலைப்படுத்தவும், மரணம் வரை செல்லவும் துணிகிறான் என்பதை அறியலாம். தசரதன், கைகேயின் நேர்மறைக் குணத்தை விடுத்து எதிர்மறைக் குணமாக இருப்பினும் இக்கட்டுரை அவர்களது மற்றொரு முகத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது.