திங்கள், 12 ஜூன், 2017

மார்க்சியப் பார்வையில் ‘தோழர்’ புதினம்

மார்க்சியப் பார்வையில் ‘தோழர்’ புதினம்
முனைவர் சு.தங்கமாரி,
உதவிப்பேராசிரியர்,முதுகலைத்தமிழ்,
வி.இ.நா.செ.நா.கல்லூரி(தன்னாட்சி),
விருதுநகர்.
தோற்றுவாய் :
இன்றைய காலக்கட்டத்தில் உலகம் முழுமையும் ஒரு சிந்தனை தேவை ஏற்பட்டுள்ளது.ஏனெனில் நாடு,மொழி,இனம்,பிராந்தியம் தாண்டி அங்கிங்கெனாதபடிக் காற்றுப்புகாத இடங்களிலும் கூட முதலாளித்துவத் தாக்கமும்,தாக்கத்தினால் உண்டான முரண்பட்ட வாழ்வியல் கூறுகளும் தோன்றியுள்ளன.ஆனால் முதலாளித்துவச் சிந்தனை எவ்வகையில் தன்னுடைய ஆழ்ந்த விதையைத் தூவினாலும்,அதனை முறிக்க அதனுள் இருந்து முற்றிலும் மாறுபட்ட பொதுவுடைமை சிந்தனையும் தொடர்ந்து தன் போராட்ட நிலையினைச் செயல்படுத்திக் கொண்டே இருக்கின்றது.
அவ்வகையில் உலகம் முழுமையும் பொதுவுடைமைச் சிந்தனை உடைய காம்ரேட்டுகள் இலக்கியப் பணியிலும் தன் வீச்சினைச் செலுத்த தவறுவதில்லை.இதே போன்றதொரு பணியினைச் செய்வதாகத் தோற்றம் பெற்றுள்ள படைப்பாளர் தனுஷ்கோடி இராமசாமியின் ‘தோழர்’ புதினத்தை மார்க்சியப் பார்வையில் காணும் முகமாக இக்கட்டுரை அமையப் பெற்றுள்ளது.
மார்க்சியப் பார்வையே மானுடம் :
உலகினை நாடு,மொழி,இனம் எனப் பிரித்துக் காட்டி,அதன்வழி சில புல்லுருவிகள் தன் சுயநலமிக்க செயல்களைச் செய்து வருகின்றனர்.இப்பிரிவினையைக் கொண்டு ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு தோற்றுவிப்பது மட்டுமின்றி மானுடம் முழுமைக்கும் கிடைக்க வேண்டிய இன்பத்தை, ஒரு சாரார் மட்டும் சுரண்டுவதற்கு வழிவகையும் செய்கின்றனர்.இதனால் மிகக் கொடிய வாழ்வியல் சூழல் உலகம் முழுதும் இருந்து வருகின்றது.ஆனால் மார்க்சியப் பார்வையில் சாதி,மதம்,மொழி,இனம் நாடு கடந்து மானுடம் உய்விக்கத் தேவையான அத்தனைச் செல்வங்களையும் பொதுவுடைமை ஆக்குவதே நோக்கமாக உள்ளது.உலகில் இன்று மார்க்சியத் தேவை அதிகரித்துள்ளது.அதை மக்களிடையே இட்டு நிரப்ப வேண்டியப் பணியினைச் சில படைபாளர்கள் செய்து வருகின்றனர்.
தோழர் சொல்லாடலும் உணர்வுகளும் :
தமிழ் இலக்கியத்தில் நட்பு,தோழன் என்ற சொற்கள் ஒரு ஆழம் மிக்கப் பொருளினை இலக்கியப் பொருண்மையில் தந்து கொண்டே இருக்கிறது.நட்பின் சிறப்புக் குறித்து வள்ளுவரும்,
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 
இடுக்கண் களைவதாம் நட்பு”
என்று குறிப்பிடுகிறார்.இதே போன்று கம்பராமாயணத்தில் குகன் - இராமன் நட்பும் சிறப்புடையதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இப்படிச் சிறப்பிடம் பெற்று விளங்கும் நட்பு குறித்த இலக்கியச் சித்திரிப்புகள் ஒரு அரசியல் இயக்கத்தில் ‘தோழமை’ என்ற சொல்லாடலாகப் பயன்படுத்தும் பொழுது அதற்கான ஒரு கருத்தாக்கப் பொருண்மை கிடைக்கப் பெறுகின்றது.இவ்வாறு கருத்தாக்கப் பொருண்மை பெற்ற இச்சொல்லாடல் ஒரு மிகப் பெரிய பொதுவுடைமை சித்தாந்த செயல்பாட்டில் மிகப் பெரிய பங்கினைப் பெறுகின்றது.அதாவது, ‘தோழர்’ என்ற சொல்லாடல் தரும் உணர்வு என்பது முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டக் களத்தில் செயல்படும் ஒரு எழுச்சி என்பதைக் குறிக்கின்றதி.
அந்த வகையியிலே ஆசிரியர் தனுஷ்கோடி இராமசாமியினுடைய படைப்பான ‘தோழர்’ புதினமும் மார்க்சிய கருத்தாக்கங்களைத் தாங்கிச் செல்லும் களமாகும் என்பதை உணர முடிகின்றது.
பிரான்சு - தொழிற்புரட்சி - காட்சிச் சித்திரிப்பு :
‘தோழர்’ புதினத்தின் கருத்தியல் சார்ந்த மைய உரையாடல் அனைத்தும் ‘பழனிமுருகன்’ என்ற மார்க்சிய சிந்தனை கொண்ட இளைஞனுக்கும் பிரான்சு தேசத்தில் இருந்து தொண்டு நோக்கில் வந்துள்ள சிலருக்கும் இடையே நடைபெறுவதாக இருக்கின்றது.உலகிற்கு உண்மைப் போராட்டத்தின் வழியாக உழைக்கும் வர்க்கத்திற்கான உரிமைகளை மீட்டெடுத்த ‘தொழிற்புரட்சி’யினைக் கொடையாக வழங்கிய பிரான்சு தேசத்தவர்களுக்கு உழைக்கும் மக்களின் உணர்வுகளைப் புரிய வைக்கும் ஒரு போராளியாகத் தலைமைப் பாத்திரம் சித்திரிக்கப்படுவது வியப்பினை அளிப்பதாக உள்ளது.
அதேவேளையில் பிரான்சு தேசத்துக் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் உரையாடல்கள் அனைத்தும் தலைமைப் பாத்திரத்தின் செயல்பாடுகளைப் படைப்பாளர் வாசகனுக்கு மெழுகேற்றிக் காட்டப் பயன்படுத்தும் உத்தி முறைகளாகவே கொள்ள முடிகின்றது.ஏனெனில் கிறித்தவப் பிரசங்கங்களின் வழியாக மட்டுமின்றி கிராம மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பொருளாதார வினையூக்கியாகச் செயல்பட முனைகின்றனர்.
அதன்வழி பிரான்சு தேசத்தவர் சேவை எனும் மத பிரசங்க செயல்பாடு என்பது வர்க்கப் பிரிவினை மூலம் ஏற்பட்ட ஆழ்புண்ணிற்காக மேற்பரப்பில் தடவப்படும் மருந்து போன்றதே ஆகும்.ஆனால் தலைமைப் பாத்திரம் கூற்றாக,
“நாங்கள் எங்கள் மக்களுக்குப் பிச்சையிடுவதையோ சில சீர்திருத்தங்கள் செய்வதையோ விரும்பவில்லை.முழுக்க இந்தச் சமுதாயத்தின் அடிப்படை அமைப்பையே மாற்றி உழைக்கும் மக்களைச் சுரண்டாத சுதந்திரமான ஓர் இனிய உலகை அமைக்கத் திட்டமிடுகிறேன்”ப-28
வருகின்றது. இக்காட்சிச் சித்திரிப்புச் செய்துள்ளதைக் கொண்டு இப்புரையோடிய புண்ணைக் குணப்படுத்துவதற்கு அடிப்படையினையே மாற்ற வேண்டும் என்ற படைப்பாளருடைய உள்ளம் வெளிப்படுவதை உணர முடியும்.

தோல் - நிறம் - உளவியல் சித்திரிப்பு : 
 ‘மாதவனும் வடிவேலும்’ நடித்த தமிழ்த் திரைப்படத்தில் ‘நிறம்’ குறித்த காட்சிச் சித்திரிப்பு ஒன்று வரும்.அதாவது மாதவனுடைய சிவந்த மேனியைக் காட்டி “அடேய்! சிவப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் டா” என்று உரையாடல் அமையப் பெற்றிருக்கும். இயல்பாகவே,இரு நூற்றாண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த வெள்ளையர்கள் மீதான மேன்மைப் பார்வையானது இன்றும் நம்மில் இருந்து மறையவில்லை என்பதை இப்புதினம் மிக சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றது. 
கலிங்கமேட்டுப்பட்டியில் பழனிமுருகனும் குமரி ஷபின்னாவும் செல்லும் பொழுது நிகழக் கூடிய காட்சிகள் அனைத்தும் கிராம மக்களுடைய அறியாமையையும், நிறம் குறித்த தனது அடிமைச் சிந்தனையையும் சித்திரிப்பதாகவே உள்ளன.சான்றாக,ஷபின்னாவைப் பார்ப்பதற்காகக் கூடும் கூட்டம் அவர்கள் பேசுகின்ற பேச்சுகள் சிலவற்றைக் கொண்டு இதனை உணரலாம்.
“எங்கள் கஷ்டங்களெல்லாம் நீங்குறதுக்கு நீங்க ஏதாவது வழி பண்ணுங்க சாமி”ப-34
“சாமி நீங்களே திரும்பி வந்து இந்த தேசத்த ஆளுங்க...சாமி....கொடுமைக்காரப் பாவிக ஆட்சியிலே..........ஜனங்க தவியாத் தவிக்குதுக.......நீதியே கிடையாது.....நீங்களே திரும்ப வந்து ஆளுங்க சாமி.....ஒங்களுக்கும் புண்ணியம் உண்டு.எங்க ஜனங்களுக்கும் வயிறாரக் கஞ்சிக் குடிக்க செவனேன்னு காலங் கழிக்குங்க.”ப-36
“வெள்ளைக்கார நாட்லேருந்து கடலைத் தாண்டிவந்து எங்களுக்கு ஆஸ்பத்திரி கட்டிக் கொடுக்க வந்திருக்குற தர்ம புண்ணியவான்மார்கள்லா......என்று கைக்கூப்பியபடி சொன்னார்கள்”ப-132
அதேவேளையில் விடுதலை அடையும் முன்பு கிராமச் சூழலில் பயன்படுத்தப்பட்ட குழந்தை பாடல்களில் வெள்ளைக்காரர்கள் பற்றியான நாட்டுப்புறப் பாடல்களைக் குழந்தைகள் இன்றளவும் பாடுவதும் பதிவு செய்யப் பெற்றுள்ளது.
“வாராண்டா..... வாராண்டா.....வெள்ளைக்காரன்
 வரட்டுந் தாயோளி வெள்ளைக்காரன்”ப-148
காட்சியமைப்பிலும் அதனை விவரிக்கும் தன்மையிலும் படைப்பாளன் தன்னையறியாமல் தன் ஆழ்மனதில் ஊடாடுகின்ற உணர்வுகளை வெளிப்படுத்திடுவதும் உண்டு. ஆகவே இப்புதினப் படைப்பாளரும் தன்னை அறியாமல் இந்த நிற மோகத்தில் ஆட்பட்டுள்ளதை ஒரு சில காட்சிகளின் வாயிலாக உணர முடிகின்றது. 
“அதற்காக பெண் என்று கூடக் கண்டுகொள்ள முடியாத பெண்ணாகவா இருக்கிறேன்......என்று கேட்டுச் சிரித்தாள்.அவளது வெண்மை நிறமான முகம் வெட்கத்தால் கசங்கி சிவப்பு ஏறிக் கனிந்து விட்டது.
கழுத்திற்குக் கீழ் அவளை அவன் பார்க்க.....அவன் பார்ப்பதை அவளும் கவனித்து அவர்கள் இருவர் மட்டும் அர்த்தத்தோடு சிரித்துக் கொண்டனர்.”ப-43
 “எல்லோருக்கும் களைப்பு மேலிட்டது.கொஞ்சம் தாமதித்து நின்றார்கள்.எல்லோரும் தொப்பு தொப்பாக நனைந்திருந்தார்கள்.ப்ரஜீத்து போட்டிருந்த வெள்ளை உடை முழுவதும் நனைந்து உடலோடு ஒட்டிப்போயிருந்தது.உள்பாடி அணியாதிருந்ததால் அவளது மார்பகங்கள் வளமாக மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் உருண்டு திரண்டு சரிந்து முன் தள்ளிக் கொண்டிருந்தது.
பழனி கூர்ந்து அவளைக் கவனிப்பதைப் பார்த்த எல்லோரும் ஓ...... எனக் கூச்சலிட்டுச் சிரித்தனர்”ப-156
இந்த உரையாடல் வாயிலாக முதன்மைப்பாத்திரத்தின் தனித்துவத்தில் சில இந்தியப் பாலியல் சார்ந்த முரண்பாடுகள் சித்திரித்துக் காட்டப்படுவதும் அச்சித்திரிப்பிற்குள் படைப்பாளரும் அடங்குவதும் புலனாகும்.இம்முரண்பாடுகள் நிரம்ப இடங்களில் காட்சிப்படுத்தப்படுகின்றன.பிரான்சு தேசத்தவரின் பாலியல் உறவுகளைக் கேட்கும் பொழுது வெளிப்படுகின்றது.
மார்க்சியக் கருத்தாடல்கள்  : 
  புதினத்தில் பெரும்பான்மையான உரையாடல்கள் மார்க்சியக் கருத்தாடல்களைத் தாங்கியதாகவே அமையப் பெற்றுள்ளன.

 பழனிமுருகன்(அடிப்படை மார்க்சியம் கற்பவன்)




   ஷபின்னா                 ங்கொஷெஸ்குவா 
(முதலாளித்துவப் பின்னணி கொண்ட சமூக சேவகி)    (ஆழ்ந்து பட்ட மார்க்சியவாதி)

மார்க்சியக் கருத்தாடல்கள் இம்மூவரைக் கொண்டே இப்புதினத்தில் அமையப் பெற்று வந்துள்ளன. ‘பழனி முருகன்’ தலைமைப் பாத்திரமாக அமையப் பெற்றிருப்பினும் ஒரு தேர்ந்த மார்க்சியவாதியாகக் களம் நின்று பிரச்னையைக் கையாளக் கற்றுக் கொடுக்கும் ஒரு ஆசானாக ‘ஷ்ஸ்குவா கொஷெ’ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது சிறப்பாகும். அதாவது உள்ளூர் பிரச்னை மட்டுமே கையில் எடுத்துக் கொண்டு தன்னைச் சிறந்த மார்க்சியவாதியாகக் காட்டிக் கொள்ள விரும்பும் ‘பழனிமுருகன்’ இடையே,உலக நடப்பியலையும் சர்வதேச சிக்கலையும் தன் விரல் நுனியில்  பேசும் ‘ஷ்ஸ்குவா கொஷெ’ சிறப்பான பாத்திரப் படைப்பு ஆகும்.
“அவர்களோடு இரவு பகலாகப் பழகி,உண்டு,உறங்கி,குளித்து வேலை செய்யும் பொழுது தற்செயலாக இந்த கட்சிக் கார்டைப் பார்த்துவிட்டால் கூட இவருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமே.......என்று பழனிக்கு வியப்புத் தாளவில்லை.
என்ன தோழரே.....இவ்வளவு வியப்படைகிறீர்கள்.....உலகம் முழுமைக்கும் விடுதலை கிடைக்கும் வரை நாம் தந்திரங்களையும் தலைமறைவு வாழ்க்கையும் மேற்கொள்ளத் தானே வேண்டும்”ப-238
“பேச்சின் போக்கில் பழனியைப் பற்றிய அவருடைய கருத்தைக் கூறினார்.பழநி கட்சிக்கு வந்து ஓரிரு ஆண்டுகள் தானிருக்க வேண்டும்.வெளியில் நான்கு ஐந்து ஆண்டுகள் அனுதாபியாக இருந்திருக்கலாம் என்றார்.”ப-239
மேற்கண்ட இந்த உரையாடல்கள் ‘ஷ்ஸ்குவா கொஷெ’வினுடைய கருத்தாழமிக்க மார்க்சியக் கருத்தாடல்களைப் புதினத்தின் மேற்தளத்தில் வைக்காமல் நுட்பமாகப் புதினத்தை வாசிக்கும் வாசகனுக்கு விருந்தாக்கும் நோக்கில் படைப்பாளர் வைத்துள்ளமைச் சிறப்பிற்குரியதாகும். 
இதேபோன்று ‘ஷபின்னா’ என்ற மேற்தட்டு வர்க்கத்தின் கண்மூடித்தனமான சமூகப் பார்வையினைச் சீர்படுத்தும் முகமாக அமையப் பெற்ற உரையாடல் முழுமையும் மார்க்சியக் கருத்தாடல்களைக் கொண்டவையாகும்.
“நான் கம்யூனிஸ்ட்டுகளைக் கடுமையாக வெறுக்கிறேன்.ஏவு,இரக்கமற்றவர்கள்,கொலை கொள்ளைகளுக்கு அஞ்சாதவர்கள்.அழகுணர்சி அற்றவர்கள்.கலாட்டா பேர்வழிகள்......உலகின் அமைதியைக் கெருப்பவர்கள்.....என்று ஆத்திரத்தோடு கூச்சலிட்டாள்”ப-49
இப்படிக் காம்ரேட்டுகளை முதலில் வெறுக்கும் ‘ஷபின்னா’ இப்புதினத்தின் இறுதியில் உதிக்கும் ஒரே வார்த்தை எதுவெனின், 
“கா......ம்.........ரே.......ட்.............”ப-298
என்பதாகும். அந்தளவிற்கு மார்க்சிய உரையாடல்களும்,அதன்வழி நின்ற போராட்டங்களும் மார்க்சியவாதிகளின் மீதான தவறான பார்வையினை மாற்றியவைகளாகக் காட்சியமைக்கப்பட்டு உள்ளது சிறப்புடையதாகும்.
புதினத்தில் மார்க்சியச் சிந்தனைப் பதிவுகள் : 
  புதினத்தில் மார்க்சியச் சிந்தனைப் பதிவுகள் மட்டுமின்றி இந்திய அளவிலான மிகப் பெரிய சிக்கலான சாதியச் சிக்கலும்,சாதியம் மீதான மேலைநாட்டாரின் பார்வையையும்,மொழி குறித்தப் பார்வையும் மிகச் சரியாகப் பதிவு செய்யப் பட்டுள்ளமை சிறப்பாகும்.
சாதியச் சிந்தனை : ‘ஹரிஜன்’ என்ற சொல்லாடல் மீதான மீள்பார்வை
“ஹரிஜனங்கள் கடவுளின் குழந்தைகள் என்றால் மற்ற்வர்கள் எல்லாம் கடவுளின் குழந்தைகள் இலாது மரக் கட்டைகளின் குழந்தைகளா?மற்றவர்கள் எல்லாம் மனிதர்களின் குழந்தைகள்,ஹரிஜனங்கள் மட்டும் கடவுளின் குழந்தைகள் என்று குறிப்பிடுவதாலேயே ஹரிஜனங்கள் மற்றவர்களிலிருந்து வேறுபட்டவர்கள் என்று ஆகிவிடுகிறது இல்லையா?........”ப-140
மொழிச் சிந்தனை : ‘ஒரு மொழி’ என்ற குறுகியப் பார்வை எதிர்ப்பு
“ஹோ...... என்ன கொடுமை...... எவ்வளவு பைத்தியக்காரத்தனமானது........ வறுமை,அறியாமை,அழுக்கு,நோய்கள்,அடிமைத்தளங்கள் நிறந்த இந்த நாட்டிலே அவற்றைப் போக்க முயற்சிக்காது மொழியைப் பிராதப்படுத்தி அரசியலா?....என்னால் நம்பவே முடியவில்லையே...?”ப-234
இறுதிவாய் : 
புதினத்தின் ஒவ்வொரு பக்கங்களும் சாலச் சிறந்த கருத்துக்களைச் சொல்லிச் செல்கிறது.
மார்க்சியம் குறித்தான நல்ல புரிதலை வாசகனுக்குத் தருகின்றது.
மொழி,இனம் தாண்டிய மனிதத்திற்கான விடிவு மார்க்சியத்திலே தான் உள்ளது என்பதை இப்புதினம் எடுத்துரைக்கின்றது.
பாலியல் சிக்கல் இன்றளவும் இந்தியத் துணைக் கண்டத்தில் இருந்து வருவதைக் கட்டுகின்றது.
‘தோழர்’ என்ற சொல்லாடல் தரும் வலிமை மிகுந்த போராட்டக் குணத்தினை உணர முடிகின்றது.
இவை தாண்டிப் புதினத்திற்கான நடை மிகச் சிறப்பாக உள்ளமையை உணர முடிகின்றது.