தொகை நூல்களில் சுட்டப்படும் ‘உறவு நிலைகள்’
முனைவர் இர.சீலாராணி,
உதவிப்பேராசிரியர்,
அரசு கலைக் கல்லூரி,
மேலூர்.
முன்னுரை
தொகை நூல்களில் தமிழர்களின் உறவானது மிகவும் போற்றத்தக்கதாகவே விளங்கியுள்ளது. அதனை நாம் இலக்கியங்கள் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் தொகை நூல்களில் உறவு நிலைகள் எந்ததெந்த அடிப்படையில் சுட்டப்பட்டுள்ளது என்பதைக் குறித்து ஆய்வதே இக் கட்டுரையின் சிறப்பாகும்.
தலைவன் தலைவியின் காதல் மற்றும் இல்வாழ்க்கை உறவு
தமிழர்கள் காதலுக்கு அளித்த சிறப்பினைத் தொகை நூல்களில் சுட்டப்படும் செய்யுட்களின் வாயிலாக நாம் அறியலாம். அவ்வகையில் வயது வந்த ஆணும் பெண்ணும் கொடுப்பாரும் அடுப்பாருமின்றித் தெய்வத்தின் அருளால் எதிர்ப்பட்டு உள்ளம் கலத்தலைக் களவென்றனர். அவ்வாறு உள்ளம் ஒன்றியக் காதலர் தம் பெற்றோருக்குத் தெரிவித்து மணந்து கொண்டு வாழ்வதனைக் கற்பு வாழ்வு என்றனர்.
“யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முகை; கேளிர்
நீயும் யானும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந்தனவே” (குறுந்தொகை பா.எ.40)
காதலுலகத்தில் இருவர் என்ற நிலையில்லை. இருதலைப் புள்ளில் ஓருயிர் போலவும், நீரொடு நீர் கலந்தாற் போலவும், ஈருடலும் ஓருயிருமாய் ஆவதே உண்மைக் காதலென்றனர். தமிழர் எங்கெங்கோ பிறந்த ஆணும் பெண்ணும் உள்ளமொன்றி உறவுநிலை கொண்டமையை ஆசிரியர் இதில் விளக்கியுள்ளார்.
தலைவன் தலைவி உறவு நிலை
தலைவன், தலைவி இவர்களின் உறவில் உன்னதமும் அதன் வழி அவர்கள் தோழியிடம் கொண்ட நட்பையும் புலப்படுத்தும் வகையில் குறிப்பிடப்படும் நற்றிணைப்பாடல் ஒன்றினை சான்றாக இங்கு தெளிவுபடுத்திக் காணலாம்.
“நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர்
என்றும் என்தோள் பிரிபு அறியலரே
தாமரைக் கண்தாது ஊதி பீமிசைச்
சாந்தின் தொடுத்த தீம்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீர் இன்று அமைய உலகம் போலத்
தம் இன்று அமைய நம் நயந்து அருளி
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவலோ செய்யு அறியலரே” (நற்றிணை பா.எ.1)
இப்பாடலில் தலைவி,தலைவன் இருவரின் அன்பின் ஆழத்தைக் கபிலர் குறிப்பிடுகின்றார். தலைவன் காதல் உறவுநிலை, தாமரைத் தேன்ச,ந்தனமரத்தில் தேன் அடையானது போல உயர்ந்ததாகும். தலைவிக்குத் தலைவன் எவ்வளவு முக்கியமானவன் என்பதை 6 மற்றும் 7 ஆம் அடிகள் மூலம் விளக்கியுள்ளார். தலைவன்த,லைவி உறவு நிலை பெருமையினை ஆழமாக எண்ணி மகிழ்வதற்குரியனவே.
தலைவி,தோழி உறவுநிலை
எல்லா உறவுகளிலும் வேறுபட்டு நிற்பதே தலைவி, தோழி உறவாகும். தலைவியன் வாழ்க்கையை மிகச் செம்மையாக அதை;துத் தருவதில் தோழியே அதிக கவனம் செலுத்துவாள். இதற்கு இருவரிடமும் உள்ள நல்லுறவே காரணம் ஆகும். தலைவியின் எல்லா செயல்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அவருடன் ஒன்றி நிற்பதே தோழியின் பெருமிதமான பண்பு நலனகப் பாடப்பட்டிருக்கிறது. இவ்வாறு பாடப்பட்ட பாடல் ஒன்று,
“எறும்பி யனையிற் குறும்பால் சுனைய
உலைக்க லன்ன பாறையேறிக்
கெடுவி லெயினர் பகழி மாயக்கும்
கவலைத் தென்பவவர் சென்ற வாறே
அது மற்றவலங் கொள்ளாது
நொதுமற் கழறுமிவ் வழங்க லூரே” (குறுந்தொகை பா.எ.12)
இப்பாடலில் தலைவி, தலைவன் சென்ற வழியின் கொடுமையை உணர்ந்து ஆற்றாலாய் நிற்கிறாள். இதில் படர்க்கையில் ஊராரை ஏசுவதைப் போல தோழியையும் ஏசுகிறாள். தலைவன் மீது கொண்ட காதல் என்னை வருந்தி நிற்க, தோழிக்கும் தலைவன் மீது பாசமில்லாத ஊரார் போல் கூறுகிறாளே என்று உரிமையில் பேசுகிறாள். இதிலிருந்து தலைவி, தோழி மீது எவ்வளவு உரிமையுடன் கூடிய உறவு வைத்துள்ளாள் என்பது புலனாகிறது.
வரைவுகடாதல்
தலைவின் களவைக் கற்பாக்குவதே தோழியின் குறிக்கோள் ஆதலால் களவின்பத்தில் விரும்பி இருக்கும் தலைவனுக்குத் தங்களின் நிலையை எடுத்துக்கூறி வரைவுகடாதல் தோழயின் கடமையாகவே இருக்கின்றது.
“இறவு புறத்து அன்ன பிணர்படு தடவுமுதல்
சுறவு கோட்டன்ன முள் இலைத்தாழை
பெருங்களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு
நல்மான் உளையின் வேறுபடத் தோன்றி
விழவுக் களம் கமழும் உரவு நீர்ச்சேர்ப்ப
இனமணி நெடுந்தேர் பாகன் இயக்க
செவிஇய செறி ஆயின், இவளே
வரவை ஆகிய சில்நாள்
வாழாளாதல் நற்கு அறிந்தனை சென்மே” (நற்றிணை பா.எ.19)
என்று தலைவனைப் பிரிந்தால் தலைவி இறந்து விடுவாள் என்று கூறி தலைவனை வரைவுகடாவுகின்றாள்.
அறத்தொடுநிற்றல்
அறத்தொடுநிற்றல் தலைவின் களவைக் கற்பாகத் தோழி மேற்கொள்ளும் முயற்சியாக அமைகிறது.
குறுந்தொகை 23, 251, 374 ஆகிய பாடல்களின் வழியாக தோழி செவிலிக்கு அறத்தோடு நின்று தலைவியின் தவிப்பை நீக்குகின்றாள்.
உடன்போக்கு
தோழி,தலைவிக்கு நேராகவே உடன்போக்கை அறிவுறத்தும் நிலை அமைகின்றது. தலைவியை அழைத்துச் செல்ல தலைவன் வந்த போது கண்ணீருடன் அரவணைத்து அனுப்பும் தோழியை நாம் காண முடிகிறது. (ஐங்குநூறு.235, அகம்.259, 285) இதன் மூலம் தோழியின் பொறுப்புணர்வுää தாய்மையுணர்வு, தலைவிபால் கொண்ட அன்பு ஆகியவை நன்கு புலனாகிறது.
தனிமனிதனும் சமூகமும்
தனிமனிதர்களின் பண்பைப் பொறுத்தே சமூகத்தின் பண்பும் அமைய முடியும் என்பதனையே ஒளவையார்,
“நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லலர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே”
என உணர்த்துகிறார். ‘அன்பெனப்படுவது தன் கிளை செறாஅமை’ என்று கலித்தொகை கூறுகின்றது.
‘மன்னாலுலகத்து மன்னுதல் தம் புகழ் நிறுவித்தான் மாந்தரே’ எனச் சீத்தலைச் சத்தனார் உயிரைக் கொடுத்தேனும் புகழ் பெறுவதனையே சுட்டுகின்றார்.
மன்னனும் மக்களும்
மன்னனுக்கும் மக்களுக்கும் உள்ள உறவைத் தந்தைää தாய்க்கும்ää பிள்ளைக்கும் உள்ள உறவாகக் கூறுவதண்டு குடிகள் மன்னனை நம்பி வாழக்கூடியவர் என்னும் பொருள் தோன்ற மன்னன் தாள் நிழலில் குடிகள் வாழ்வதற்காகக் கூறுப்படுகிறது. மன்னனுடைய படை தருகின்ற வெற்றியும் உழவர் தம் உழைப்பின் பயனால் கிட்டத்தக்கதே என்று புலவர் ஒருவர் வற்புறுத்தியுள்ளார்.
“பொருளை தரூஉம் கொற்றமும் உழவர்
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே”
சமயப்பணியின் சிறப்பைச் சுட்டுகிறது.
அரசர்கள் - ஆசிரியர் உறவு
வேதம் ஓதும் பார்ப்பனர்கள் தமிழ் அரசரிடம் மிகுந்த செல்வக்குப் பெற்றிருந்தனர். கரிகால் பெருவளத்தான் என்ற சோழ அரசன் பல வைதீக வேள்விகளை விரிவாக இயற்றினான் என்று கருங்குழல் ஆதனார் கூறியுள்ளார் (புறம்.224).
வேந்தர்கள் ஆட்சியில் வேள்வி தலைமையிடம் பெற்றதையும் பண்டை இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. (பதிற்றுப்பத்து 74:1-2), (புறம்.384:15-18)
அரசனின் கடமை மக்களைப் பேண வேண்டும் என்பது மாறி பார்ப்பனர்களைப் பாதுகாப்பது என்பதே முதற்கடமை ஆயிற்று. வேள்விகள் செய்த பார்ப்பனர்களுக்கு,அரிய பொன்னை நீர் சிந்திக் கொடுப்பது மரபாயிற்று. இதனை புறநானூற்றுப் (புறம்.361:4-6) பாடல்களாலும் பதிற்றுப்பத்து பாடலடிகளாலும் தெளியலாம்.
பாணன் - பாங்கன் உறவு
தலைவனைக் காணாது இனி உயிர் வாழ மாட்டேன் என்று தலைவி கூறியதைக் கேட்ட பாணன் ஒன்றும் சொல்லாதவனாகி தலைவனைத் தேடிச் செல்ல,எதிரே தலைவன் தேரிலே வருவதைக் கண்டு வரவினைப் பாங்கியனர் கேட்பது தலைவிக்குச் சொல்லியது,
“பயன் குரல்ம,ன்று நிறை புகு தரும்
மாலையும் உள்ளான் ஆயின், காலை
யாங்கு ஆகுவம் கொல்? பாண! என்ற
பனையோள் சொல் எதிர் சொல்லல் சொல்லேன்
செவ்வழி நல்யாழ் இசையினென் பையயென
கடவுள் வாழ்த்து பையுள் மெய்நிறுத்து
அவர் திறம் செல்வேன் கண்டனென் யானே”
என்ற பாடல் வழி பொருள்வழிபிரிந்த தலைவனை எண்ணி ஆற்றாதவளாய் வருந்தும் தலைவிக்குப் பாணனை அழைத்து பாங்காயினர் உரைத்த திறத்தின் வழி அவர்களின் உறவு மேம்பட நிலையினை அறிய முடிகின்றது.
முடிவுரை
தொகை நூல்களில் பொதிந்து கிடக்கும் உறவுநிலைகளை காணும் போது இவை முழுக்க முழுக்க செல்லியல் பண்பு நிறைந்ததே என்று கூறலாம். ‘நிலத்தினும் பெரிதே’ என்ற பாடல் வழி காதலியின் நட்பின் ஆழமே உறவு நிலைக்கு அடித்தளமாகக் கூறப்பட்டுள்ளது. தலைவன் - தலைவியின் காதல் வாழ்வில் ஏற்படும் அனைத்து சிக்கல்களையும் உணர்வுப் போராட்டங்களையும் தீர்த்து வைப்பவளாக தோழியே இருப்பதை உணர முடிகின்றது. மனித உறவுகள் தொகைநூல்களில் நாணயத்தின் இரு பக்கம் போன்று உறவுகள் மேன்மையுற்று இருந்தமையினை உணர முடிகின்றது.