திங்கள், 12 ஜூன், 2017

வில்லி பாரதத்தில் உறவுகள்

வில்லி பாரதத்தில் உறவுகள்
ஜெ.குணசீலி,
பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர்,

தமிழ்த்துறை,அரசுக் கல்லூரி, ஊட்டி.


இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உயிரினங்களுக்கிடையேயான தொடர்பை இணைப்பை உறவு எனலாம். பெற்றோர் – பிள்ளை உறவு,சகோதர உறவு, கணவன் - மனைவி உறவு, நட்புறவு,தொழில் முறை உறவு, செல்லப்பிராணிகளுக்கிடையேயான மனித உறவு, கடவுள் மனிதன் உறவு என இணைப்புகள் இணையம் வரை நீண்டு கொண்டே செல்கின்றன. 
சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம். குடும்பங்கள் உறவுகளால் கட்டமைப்படுகின்றன. சில வேளைகளில் பெரும் சமையாக மாறினாலும் உறவுகள் தான் மனிதனின் பலமே! ஆபத்துக்களில் கைகொடுக்க, துயரங்களில் ஆறுதல் அளிக்க, இன்ப – துன்பங்களில் உரிமையோடு பங்கெடுக்க உறவுகள் வேண்டும்.
இன்றைய சூழலில் குடும்பங்களில் உறுப்பினர்களிடையே பிணைப்புகள் குறைந்து, பிணக்குகள் மேலோங்கிக் காணப்படுகின்றன. நெருக்கமாக இருக்க வேண்டிய உறவுகள் எல்லாம் விரிசல் கண்டு வருகின்றன. இதற்குச் சான்று என்று தனியாக ஒன்றை தெரிவிக்கத் தேவையில்லை. அன்றாடச் செய்திகளும் நிரம்பி வழியும் முதியோர் இல்லங்களும், தேங்கி நிற்கும் குடும்ப நல வழக்குகளும் இதைச் சுட்டிக் காட்டுகின்றன.
மனிதர்களாகிய நாம் ஒரு பெற்றோர்க்கு மகனாக அல்லது மகளாக பிறக்கின்றோம். உறவு என்பது நம்மைப் பெற்றவர்களிடமிருந்து ஆரம்பமாகின்றது. உறவுகளின் ஆரம்பப் புள்ளியான பெற்றோர் – பிள்ளை உறவை, நமது இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தின் தமிழ்த் தோன்றலான வில்லிபாரதம் வழிநின்று இக்கட்டுரை தனது உறவைத் தொடங்குகிறது.
இலக்கியம் வாழ்க்கையைப் பதிவு செய்கிறது என்று கூறும் அளவிற்கு இன்றைக்கும் அர்த்தமுள்ளதாக விளங்குகிறது.
குந்தி – கர்ணன் (தாய்-மகன் உறவு)
தாய் தான் பெற்ற குழந்தையைச் சில காரணங்களுக்காகப் பிரிய நேரும் போது அக்குழந்தை பின்னாளில் வளர்ந்து தன் தாய் மீது கொண்ட பாசத்தில் துளியும் மாறுபாடு இல்லாமல் இருப்பதனை தாய் மாறா நிலைப்பாடு எனலாம்.
கர்ணன் தன் தாயிடம் கொண்டிருந்த மாறாத அன்பின் காரணமாக குந்தி வேண்டும் இரண்டு வரங்களும் தன் உயிருக்கு உறுவிளைவிக்கும் என்பது நன்றாகத் தெரிந்திருக்கும் தயங்காமல் வரமளித்தான்.
கர்ணன் குழந்தைப் பருவத்தில் அவனுடைய பிறப்பினால் அவனுக்குப் பல்வேறு வகையிலும் அவமானங்கள் ஏற்படுகின்றன. அவனுடைய குழந்தைப் பருவ இன்னல்கள் அவன் அடி மனதில் தங்கி விடுகின்றன. இவ்வாறு பிறப்பிலிருந்து பல துன்பங்களை அடைந்தாலும் தாயின் மீது கொண்ட அன்பு மாறுபடாமல் இருக்கின்றன.
“பெண்மையினால் உயர்குந்தி வயிற்றிடை
பெருமையினால் இதயத்
திண்மையினால் உயர்தின்னையும் அன்பொடு
தினகரன் நல்கினனே” (பாடல்.278)
என்று கர்ணன் பிறப்பு ரகசியத்தை கண்ணன் கூறிய உடன் என்பு உருகவும் அன்பு பெருகவும் குழைந்தவனாய் நின்றான்.
“இன்றால் எனது பிறப்புணர்ந்தேன்
என்று என்பு உருகி…” (பாடல்.281)
என்ற பாடல் கர்ணனின் - குந்தி உறவு நிலைக்கு எடுத்துக்காட்டாக அமைகின்றன.
போர்களத்தில் அர்ச்சுனனைக் கொல்வதற்காக கர்ணன் ‘அசுவசேனை’ என்ற நாகக்கணையை அர்ச்சுனனின் கழுத்துக்கு நேராக ஏவும் போது கண்ணன் தேரினைச் சாய்த்து விழும்படியாகச் செய்து விட்டான் பின்பு ஒரு முறைக்கு மேல் மறுமுறை நாகக் கணையை அர்ச்சுனனின் மீது ஏவமாட்டேன் என்று தான் குந்திக்கு வரம் கொடுத்துள்ளதைக் கர்ணன் தன் தாய் மீது வைத்திருந்த எல்லையில்லா அன்பினையும் இவ்வாறு தன் உயிரைக் கொடுத்தும் தான் கொடுத்த வாக்கினைக் காப்பாற்றும் திறனை வில்லிபாரதம் எடுத்துரைக்கின்றது.
மேலும் இலக்கியங்களில் வகைப்படுத்தியிருக்கும் உறவுகளில் நட்பு சிறந்த இடம் பெறுகின்றது. தாய் - பிள்ளை,கணவன் - மனைவி என்ற உறவுகளுக்கு ஈடாகப் போற்றப்படுகின்ற உறவு நட்பாகும். இதனை திருவள்ளுவர்,
“செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
நினைக்கரிய யாவுள காப்பு”
என்று நட்பின் இலக்கணத்தை எடுத்து இயம்புகிறார். பொதுவாக நட்புறவு இரத்த, சட்ட தொடர்பற்ற மனிதர்களுக்கிடையே புரிந்துணர்வு,நம்பிக்கை,ஒத்துழைப்பு,நேசம் போன்ற பிணைக்கப்பட்ட ஓர் உறவைக் குறிக்கிறது.
வில்லிபாரத்தில் கண்ணபிரான் கர்ணனை நோக்கி சந்திரகுலம் வாழ்வுற வந்து உண்மையால் மேன்மையுடைய மன்னர்களாகிய பாண்டவர்கள் ஐவரும் ஆராய்ந்து பார்த்தால் உனக்குத் தம்பியர் ஆவார்கள் என்றும், குந்திதேவி பெற்ற உங்களில் எவரும் இந்த குரு நாட்டைப் பெற ஆளவில்லையானால் வேறு யார் உரிமையுடையவர் ஆவர். நீ உன் தம்பியரோடு வந்து சேர்ந்துகொள் என்று கூற,
“இந்த நிலம் பெறுவீர் தவிர்கில் பெற
யாரின் வேறு உரியார்
வந்தினிது உம்பியர் தம்மொடுசேர்கென
மாயன் மொழிந்தனனே” (பாடல்.280)
என்று கர்ணன் கண்ணனிடம் நான் யார் என்று அறிவதற்கு இல்லாத என்னை ஆதரித்து அரசுரிமை கொடுத்து முடிசூட்டிச் சிறப்பும் செல்வமும் அளித்த துரியோதனனுக்கு எதிராக நான் மாறமாட்டேன் அவ்வாறு மாறினால் செய்ந்நன்றி மறந்தவன், செஞ்சோற்று கடன் தீர்க்காதவன் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாவேன் என்று கூற்று,உயிரை விட நட்பின் மீது கொண்ட உறவினை அறிந்து கொள்ள முடிகின்றது.
“போர் என்று அறிந்தும் செய்ந்நன்றி
போற்றா தவரில் போவேனோ” (பாடல்.301)
என்ற பாடல் மூலம் வில்லிபாரத செய்தி கர்ணன் வாயிலாக நட்பு என்ற உறவுக்கு அர்த்தம் சேர்ப்பதாக அமைகின்றது.
வில்லிபாரதம் வழிப்பெறப்படும் ஏனைய உறவுகள்
தன் கணவர் பார்வையில்லாதவர் என்று அறிந்து தானும் உலகத்தை காண விரும்பாத காந்தாரின் கணவன் - மனைவி உறவு.
அண்ணனின் வார்த்தையை மதித்தும் (மரியாதையுடனும்) வாழ்ந்த பாண்டவர்களின் அண்ணன் - தம்பி உறவு.
தன் தந்தையின் ஆசையை நிறைவேற்ற பிரம்மச்சரியம் மேற்கொண்ட தந்தை  - மகன் உறவு.
தன் தங்கையின் வாழ்வு சீர்அழிந்ததை எண்ணி குலத்தையே அழிக்க எண்ணும் சகுனி. அண்ணன் - தங்கை உறவு.
இந்த உலகத்தின் பாரத்தைக் குறைக்க எண்ணி அவதரித்த கடவுள் கிருஷ்ணர் – மக்கள் - கடவுள் உறவு.
முடிவுரை
மனிதனை,மனித வாழ்வை சிறப்புறச் செய்தும், அர்த்தமுள்ளதாக ஆக்கும் உறவுகள் எல்லா காலங்களிலும் உயிருடன் இருக்க வேண்டிய ஒன்று.