திங்கள், 12 ஜூன், 2017

நாட்டுப்புறக் கதைகளில் காணலாகும் குடும்ப உறவுகள்

நாட்டுப்புறக் கதைகளில் காணலாகும் குடும்ப உறவுகள்
ஜெ.காயத்ரி,
முனைவர் பட்ட ஆய்வு மாணவி,
தியாராசர் கல்லூரி,
மதுரை.
முன்னுரை
நாட்டுப்புறக் கதைகளில் குடும்ப உறுப்பினர்களிடையே நிலவும் உறவு முறைகள் குறித்து காண்பதே இதன் முக்கிய அங்கமாகும். குடும்பம் என்பது சமுதாய அமைப்பின் உயிர் நாடியாக விளங்குகிறது. குடும்பம் என்பது இரத்த உறவுகளின் வழியாகவோ, திருமணம் மூலமாகவோ தொடர்புடைய உறுப்பினர்களை உள்ளடக்கிய சமூகக்குழு என்று பொதுவாகக் கருதப்படுகின்றது.
குடும்பமும் உறவுநிலையும்
ஆணும் பெண்ணுமாக,கணவனும் மனைவியுமாக குழந்தைகளோடு இணைந்தும் உற்றார் உறவினருக்கு உதவியும் வாழ்வதே குடும்ப வாழ்வின் சிறப்பாகும். சமுதாய அமைப்பில் ஒருவனும் ஒருத்தியுமாக வாழும் குடும்ப வாழ்க்கை குறிப்பிடத்தக்க சிறப்புடையதாகும். கணவன், மனைவி என்னும் உறவினை ஏற்படுத்திக் கொண்ட பின்னரே குடும்பம் எனும் அமைப்பு நிறைவேறுகிறது.
குடும்ப உறவுகள்
உறவுகள் பல வழிகளில் ஏற்படுகின்றன. பெற்றோருக்கு மகன் அல்லது மகள் மூலமாக உறவுகள் தோன்றி பின்னர் அவர்களின் மகள் அல்லது மகன் மூலமாக மேலும் உறவு வளர்ந்து கொண்டே போகிறது. இவ்வுறவுகள் கட்டுக்கடங்காமல் வளர்ந்து கொண்டே போகும். உறவினை,
1. முதல்நிலை உறவு
2. இரண்டாம் நிலை உறவு
3. மூன்றாம் நிலை உறவு
என பிரித்து காணலாம்.
முதல்நிலை உறவு
ஒருவருக்கு பிறந்த வீட்டு குடும்ப உறுப்பினர்களும் அவனைத் திருமணம் செய்து கொள்ளும் மனைவியும் இதில் அடங்குவர். மேலும் கணவன், மனைவி, தாய், சகோதரன், சகோதிரி, மகன், மகள் போன்ற உறவுகளும் அடங்கும்.

கணவன் மனைவி உறவு
உறவுகளிலே புனிதமான உறவு இவ்வுறவு ஆகும். ஓர் ஆணோ, பெண்ணோ அவர்களின் சமூக மரபுப்படி திருமணம் செய்து கொள்ளும் போது கணவன் - மனைவி என்ற புனித உறவு ஏற்படுகின்றது.
‘கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்’ 
என்ற பழமொழிகள் இவர்களின் உறவுநிலைகளை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளன.
“கணவனுக்கு மிஞ்சிய கடவுள் இல்லை”
“கணவனே கண் கண்ட தெய்வம்”
“கணவன் பெயரை மனைவி சொல்லக் கூடாது”
“கணவன் உண்ணும் முன் மனைவி சாப்பிடக் கூடாது”
போன்ற வழக்காறுகளும் கணவனுக்கு மனைவி அடங்கி நடப்பதை காட்டுகிறது.
“ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே”
என்ற புறநானூற்றுப் பாடல்வழி ஒரு பெண்ணுக்குக் குழந்தையைப் பெற்றுக்கொடுப்பது மட்டுமே கடமையாகச் சொல்லப்பட்டுள்ளது.
“சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே”
என்பது ஒரு ஆணின் கடமையாகக் கூறப்படுகிறது.
“கணவனை இழந்தோர்க்கு காட்டுவது இல்”
என்று சிலம்பு கூறுவது கணவனைத் தழுவியே மனைவியர் வாழ்கின்றனர் என்பதனைச் சுட்டுகிறது. நாட்டுப்புறக் கதைகளில் பெரும்பாலான கதைகள் கணவனை ‘புருஷன்’ என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் ‘மாமா’ என்றும் குறிப்பிடுகின்றது.
தந்தை – மகன் உறவு
மணமான ஓர் ஆடவன் குழந்தை பெறும் போது தந்தை ஆகவும் அக்குழந்தை ஆணாக இருக்கும் போது மகன் என்று அழைக்கப்படுகின்றனர்.
“தகப்பன் தேடக் காத்தான்
பிள்ளை அழிக்க காத்தான்”
“தகப்பன் பேரை எடுக்கின்ற
பிள்ளையே பிள்ளை”
போன்ற பழமொழிகள் தந்தை – மகன் உறவை எடுத்துக்காட்டுகின்றன.
தந்தை – மகள் உறவு
ஓர் ஆண் திருமணமாகி குழந்தைப் பெற்றதும் தந்தை என்று அழைக்கப்படுவது போலவே பெண் தாய் என அழைக்கப்படுகிறாள். மாதா, பிதா, குரு, தெய்வம் இவற்றில் தாய்க்கே முதலிடம்.
“தாயிற் சிறந்த கோயிலும் இல்லை”
என்ற திரைப்படப் பாடல்வழி தாயே முதலிடத்தைப் பெறுகிறாள். 
“தாய்க்கு ஆவாத மகன் யாருக்கு ஆவான்”
என்ற பழமொழி வழியாக தாய், மகன் உறவை அறியலாம்.
தாய் - மகள் உறவு
“தாயைக் கிணற்றடியில் பார்த்தால்
மகளைப் பார்க்கத் தேவையில்லை”
“தாய் செத்தால்
மகள் திக்கற்றாள்”
“தாயைப் போலப் பிள்ளை
நூலைப் போலச் சேலை”
இப்பழமொழிகள் மூலம் தாய் - மகள் உறவைப் பற்றி அறிந்து கொள்ள முடிகின்றது. நாட்டுப்புறக் கதைகளில் பெரும்பாலும தாய், மகன் உறவே அதிகமாக இடம் பெறுகின்றது. தாய்மகள் உறவு பற்றியவை மிக சிலரே இடம் பெற்றுள்ளன.
அக்கா – தங்கை உறவு
உடன்பிறப்புகளில் மூத்தவள் ‘அக்கா’ என்றும் பின் பிறந்தவள் ‘தங்கை’ என்றும் அழைக்கப்படுகின்றாள். ஒற்றுமையாக வாழும் தங்கைகளைப் பற்றியும், தன்னை விட அழகாக இருக்கும் தங்கைகளை கொடுமைப்படுத்தும் அக்காக்களையும் கதைகளில் காண முடிகின்றது.
இரண்டாம் நிலை உறவுகள்
முதல்நிலை உறவினர்களின் வாயிலாக நின்று அமையும் உறவுகளையே இரண்டாம் நிலை உறவுகள் என்கிறோம் அந்தவகையில் மாமியார் – மருமகள், மாமியார் – மருமகன், மாமனார் – மருமகள், அண்ணி – நாத்தனாள் உறவுகளை இதில் காணலாம்.
மாமியார் – மருமகள்
வாழ்க்கையில் மாமியார் – மருமகள் உறவு அன்பு உறவாகக் காணப்படுதல் மிகக் குறைவு. மருமகள் மீது மாமியார் அன்பு செலுத்துதலும் மாமியார் மீது மருமகள் மதிப்பு வைத்திருத்தலும் மிகவும் அரியதாகவே உள்ளது எனினும் சில சமயங்களில் மாமியார் மருகள் மீது அன்பாக நடந்து கொள்ளுதலும் மறுக்க இயலாது.
மருமகள்களுக்கு உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்தும் மாமியரையும்- மருமகள் மீது பாசம் கொண்ட மாமியாரையும், தன்னைக் கொடுமைப்படுத்தும் மாமியாரைக் கொல்லும் மருமகளையும்ää மாமியாரைக் கொல்வதற்குச் செய்யும் சூழ்ச்சியில் தான் மாட்டி இறக்கம் மருமகளையும் நாட்டுப்புறக் கதைகளில் காண முடிகிறது.
“மாமியார் ஒடைச்சா மண்குடம் மருமக ஒடைச்சா பொன்குடம்”
என்ற பழமொழி இவர்களின் உறவு நிலையில் மேம்பட்டதை எடுத்துக்காட்டுகின்றது.
மாமியார் – மருமகன்
தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்து அதன் மூலம் ஏற்படும் உறவு மாமியார் – மருமகன் உறவு ஆகும். மகளின் கணவன் என்பதால் சிறப்பாகக் கருதப்படுகின்றான். மருமகனின் முட்டாள் தனத்தை எண்ணி வருந்தும் மாமியாரையே கதைகளில் காண முடிகின்றது.
மாமனார் – மருமகள்
மாமியார் – மருமகன் பற்றி அதிக கதைகள் உள்ளது போல் மாமனார் – மருமகள் பற்றி அதிகமாக கதைகள் இல்லை.

அண்ணி – நாத்தனார்
கணவனின் உடன் பிறந்த அல்லது உடன் பிறவாத சகோதிரிகள் நாத்தி, நாத்தனாள் என்ற உறவுப் பெயரிட்டுச் சுட்டப்படுவர். உடன் பிறந்த சசோதரரின் மனைவியை அண்ணி என்று சகோதரனின் தங்கைகள் அழைப்பர். அண்ணி,நாத்தனாள்கொழுந்தியாள் உறவ போராட்ட உறவாகவே காணப்படுகிறது. இவ்வுறவுகள் இவ்வாறு இருப்பதற்கு காரணங்கள் பல இருந்தாலும் முதன்மைக் காரணமாக பொருளாதாரமே சுட்டப்படுகிறது.
கணவனின் தங்கை என்றும் பாராமல் சண்டையிட்டு அனுப்பும் அண்ணியையும் வீட்டிற்கு வந்த நாத்தனாரை வா என்று கூறாமல் உபசரிக்காமல் அனுப்பும் அண்ணியையும் நாட்டுப்பறக் கதைகளில் காண முடிகின்றது.
முடிவுரை
பல குடும்பங்களின் இணைப்பே சமூகமாகும். குடும்பங்களை உறவுகளின் பல்வேறு வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடியும். தமிழ்ச்சமூகத்தை ஆராய்ந்தவர்கள் கூட்டுக்குடும்பத்தை தாய்வழிக்குடும்பம், தந்தைவழிக்குடும்பம், தனிக்குடும்பம் என்று குறிப்பிடுவர். குடும்ப உறவுகளை இரத்த உறவு,மன உறவு, புனைவியல் உறவு எனவும் பிரித்து உறவு நிலைகளை நாட்டுப்புறக் கதைகளின் வழியாக ஆராய்ந்துள்ளனர்.