ஞாயிறு, 10 டிசம்பர், 2023

 

திருக்குறள் குமரேச வெண்பாவில் சமுதாய மலர்ச்சிக் குரல்

                               முனைவர்(திருமதி)செ.நாகஜோதி

                              உதவிப்பேராசிரியை, தமிழ்த்துறை

                       வே..வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி,விருதுநகர்,

                              விருதுநகர்.

ஆய்வு நோக்கம்: 

                     சங்க கால மக்கள் இல்லறத்தை நல்லறமாகப் போற்றி வாழ முற்பட்டனர். எனினும் இல்லறத்தலைவன் பரத்தையை நாடிச்சென்று இழிநிலைக்குட்பட்டான். இதனைச் சங்ககாலப்புலவர்கள் தம் கவியில் வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையினைச் சங்கம் மருவிய காலத்தில் வாழ்ந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஒழிக்க நினைத்தார். எனவே தம் குறள் வழி பரத்தையை நாடிச் செல்வதன் விளைவுகளையும் இழிநிலையினையும் கருத்தில் கொண்டு குரல் கொடுத்தார். சங்க இலக்கியம் அரசர்களும், வீரர் புலவர்களும் கள் குடித்தலை, பொதுவான வழக்கமாக ஏற்றுக்கொண்ட காலமாக களும்,இருந்தமையை வெளிப்படுத்தியுள்ளது. ஆடவர்கள் கள்அருந்தும் இத்தகைய வழக்கத்தை தீமையானது என்று உணர்த்தி சமுதாயம் மலர்ச்சியடைய முதன்முதலாகக் குரல் கொடுத்தவர் வள்ளுவர். இத்தகைய புதுநோக்குச் சிந்தனை கொண்ட திருக்குறளில் ஆட்பட்ட கவிராச பண்டிதர் எனப் புகழ் பெற்ற ஜெகவீரபாண்டியனார் ஒவ்வொரு குறளுக்கும் ஒரு குறள் வெண்பா அமைத்துதிருக்குறள் குமரேச வெண்பா எனப் பெயரிட்டு, உரையும் எழுதியுள்ளார். மேலும் ஒவ்வொரு குறளுக்கும் பொருத்தமாகக் கதையினை எடுத்துரைத்து விளக்கி இந்நூலினைச் சிறப்பாக்கியுள்ளார். இத்தகைய நூலில் சமுதாயம் மலர்வதற்கான கருத்துக்கள் வெளிப்பட்டுள்ள விதத்தினை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.

ஆடவர் கற்பு அறம் காக்கும்: 

         ~~வினையே ஆடவருக்கு உயி;;ரே மனையுறை, வாள்நுதல் மகளிர்க்கு ஆடவர் உயிர்||1 என்ற சங்க இலக்கிய வரி  சமூகத்தில் ஆடவர் உயர்ந்த நிலையில் கருதத்தக்கவராக வாழ்ந்தனர் என்பதை நிரூபிக்கிறது. இத்தகைய ஆடவர் தன் மனைவியைத் தவிர பிற பெண்டிரைத் தாயாக, சகோதரியாக நினைக்க வேண்டும் என்று பகரவில்லை. மாறாக சங்ககாலத் தலைவன் பரத்தையை நாடிச் செல்லும்;;;;;;; வழக்கமுள்ளவனாக வாழ்ந்தான் எனச் சுட்டியுள்ளது. தலைவனின் இத்தகைய இழிநிலையைத் தலைவியர் பொறுத்துக்கொண்டு இல்லறம் நடத்த வேண்டும் என்பதாகச் சங்க இலக்கியம் சுட்டியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்ட வள்ளுவர் ஆடவரின் தீய ஒழுக்கத்தைக் கடிந்து கூற முற்பட்டார். மேலும் இல்லறத்தலைவன் தம் கற்பு நிலையிலிருந்து தவறாமல் இருந்தால் அறம் காத்தவர் ஆவார் என்றும் குரல் விடுத்தார். இதன்வழி ஜெகவீரபாண்டியனார்,

       ~~பண்டரக்கி வந்து பரிந்தும் இராமனேன்

       கொண்டகற்றி விட்டான் குமரேசாகண்ட

       பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

       அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு|| (தி.கு.வெ. பா148)

என்று வெண்பா அமைத்துள்ளார். இப்பாடலை விளக்கியுரைக்குமிடத்து இதற்குப் பொருத்தமாக ஜெகவீரர், பிறன்மனை நோக்கா பேராண்மையுடைய  அறத்தின் நாயகனான இராமபிரானின் கதையைக் கூறியுள்ளார். இலங்கைச் சிறையில் சீதை அனுமனிடம், ~இப்பிறப்பில் எனை ஒழிய மாதரை என் மனத்தாலும் தொடேன் என்ற காதலன்| என்று அறம் காத்த இராமனின் பெருமையைக்  கூறிய  கதையினை ஜெகவீரர் உணர்த்தியுள்ளார்.                                    

       இல்லறத்தை நல்லறமாக்கும் முழுப் பொறுப்பும் கடமையும் ஆடவனுக்கேயுரியது என்கிறார் வள்ளுவர். இதன்வழி ஜெகவீரர்,

      ~~வெற்றி இலக்குவனும் வேந்தன் உருக்குமனும்

                        குற்றமென்றேன் நீத்தார் குமரேசாஉற்ற

      அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலான்

      பெண்மை நயவா தவன்||(தி.கு.வெ. பா-147)

என்கிறார். பிறன் மனையாள் பேரழகு மிக்கவளாக இருந்தாலும் தம் இனிய மனைவியோடு  இல்;;;;வாழ்வு நடத்துபவன் எவனோ அவனே புண்ணியன் என்ற கருத்தை மேற்கண்ட பாடல் உணர்த்துகிறது. இக்கருத்திற்குப் பொருத்தமாக ஜெகவீரர் விநாயகபுராணத்திலிருந்து உணர்த்தும் கதையாவன, ~~விதர்ப்ப நாட்டு வேந்தன் உருக்குமாதவன் என்பவன் கானகம் வழியாக உலா சென்றான். அங்கே பேரழகுடைய தருண மங்கை இவனைக் கண்டாள். அவள் முகுந்தை என்னும் பேரினள்; ஒரு மாதவன் மனைவி. பேரெழிலுடைய அவள் பேரரசனான இவனைக் கண்டதும் காதல் மீக்கொண்டாள்; தனது ஆசையை யாதும் கூசாமல் வாய்திறந்து கூறி மருவி மகிழ விரைந்தாள். அறிவுரை கூறி உறுதியோடு இவன் தடுத்தான். அஃதாவது, அயல் மாதை மருவினோ பழியும் துக்கமும் எவ்வழியும் பெருகும்; முடிவில் கொடிய நரக துன்பமே அடைய நேரும். ஆதலால் மடமையான மையலோடு இந்த இழி தீமையைச் செய்ய எண்ணாதே; உன் மனத்தை அடக்கி ஒதுக்கிப் போ? என்று இவ்வுத்தமன் இவ்வாறு உரைத்தலால் இவனுடைய நெறி நியமங்களையும் உறுதி ஒழுக்கங்களையும் உள்ளப் பண்பையும் நன்கு உணர்ந்து கொள்கிறோம்.|| 2 என்பதாக அமைந்துள்ளது. இதன்மூலம் ஆடவர் தன் மனைவியைத் தவிர பிற பெண்ணை நயவாதிருந்தால் அத்தகையோர் அறம் காத்தவராவார் என அறியமுடிகிறது.

 

பெண்பாவம்:

       தமிழ்ப்பெண்டிர் தன் கணவனே கண்கண்ட தெய்வம் என எண்ணி வாழ்ந்தனர். இவ்வெண்ணத்;திற்கு மாறாக குடும்பத் தலைவன் பிற பெண்டிரை நாடிச்சென்று தன் மனைவியை ஏமாற்றினால் அவனுக்குப் பெரும்பழியும், பாவமும், தீமையும் வந்துசேரும் என்கிறார் வள்ளுவர். இதன்வழி ஜெகவீரரின் வெண்பா,

       ~~தேறுங் குருமனைபால் தீமைசெய்தான் சித்தனேன்

       கூறுபட மாய்ந்தான் குமரேசா- மாறி

       விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்

       தீமை புரிந்தொழுகு வார்.||(தி.கு.வெ.பா-143)

என உணர்த்துகிறது. இவ்வெண்பாவிற்குப் பொருத்தமாக ஜெகவீரர், ~~குலோத்துங்க பாண்டியன் அரசு புரிந்து வருங்கால் வல்லான் என்னும் பேருடைய நல்லான் அவ்வூரில் வீரர் சிலர்க்கு வாளாடல் பயிற்றி வந்தான். இந்தச் சித்தனும் அவருள் ஒருவனாய்ச் சேர்ந்து பயின்றான். அந்த வித்தையில் தேர்ச்சி அடைந்தான்; அடையவே தான் ஒரு கூடம் அமைத்துத் தனியே வாளாசிரியனான். தோள் வலியுடைய இவன் வாள்வலி வந்தவுடன் மனம் மிகச் செருக்கினான். முதிய குருவையும் மதியாமல் அதிக இடர்களைச் செய்தான்; அந்த ஆசிரியனுடைய அருமை மனைவியையும் அவமே விழைந்தான். அவள் நல்ல உத்தமி; வறிய வாழ்வினள் ஆயினும் பெரிய பதி விரதை. இந்தப் பொல்லாதவன் அந்த நல்லாளிடம் துணிந்து சென்று நசைமொழிகளாடினான். இவனுடைய புலைமொழிகளைக் கேட்டு அக்குலமகள் குலை துடித்தாள். துடித்து நிற்கின்ற அவளது கையை இவன் அடுத்து பிடித்தான். பிடிக்கவே அவள் உள்ளம் கடுத்து இவனை எள்ளி கதவை அடைத்தாள். அப்பாதகன் செயலை தன் பதியிடமும் சொல்லாமல் பரமபதியை நினைந்து அவள் உருகி அழுதாள். அவளுடைய பரிவும் பண்பும் பரமனை உருக்கின. ஆதிபகவன் நீதிபுரிந்துத் துணிந்து வாள்வல்லான் போலவே வடிவம் கொண்டு போய்ச் சித்தனை நேரே போருக்கு அழைத்தான். தொட்ட கை முதலில் துண்டமானது; பின்பு தலை சிந்தி விழுந்தது; அப்புலைமகன் முண்டமாய் வீழ்ந்தான்.|| 3 என்கிறார். இக்கதை மூலம் பெண்ணுக்குப் பாவம் செய்தால் அவனுக்கு அழிவு நிச்சயம் நேரும்  என்று அறிய முடிகிறது.

       ஓர் ஆடவன் ஒப்பற்ற தலைவனாக வீரத்திலும் அழகிலும் மேம்பட்டவனாக இருந்தாலும் பிற பெண்னை நாடிச்சென்றானாகில் அவன் இழிநிலையை அடைவான் என்பதை ஜெகவீரர்,

    

     ~~என்னே அகலிகையால் இந்திரனும் தன்பெருமை

      கொன்னே இழந்தான் குமரேசாஅன்னே

      எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்

      தேரான் பிறனில் புகல்.|| (தி.கு.வெ.பா-144) என்கிறார். இப்பாடலின் கருத்திற்குப் பொருத்தமாக அகலிகையை நாடிச்சென்ற இந்திரனுக்கு நேர்ந்த  இழிநிலையினை  உணர்த்தியுள்ளார் ஜெகவீரர். இந்திரனுக்கு நேர்ந்த இவ்விழிநிலைப் போக்கானது கவிஞர் வைரமுத்துவின் கவிதை வரிகளாகிய, ~~அடுத்தவன் மனைவிமேல், ஆசை கொள்ளாதே, அது, நல்ல பாம்பின், படத்தை, நாவால் ஸ்பரிசிப்பது||4  என்பதை நினைவுபடுத்துகிறது. இதன்மூலம் பிற பெண்டிரை அடைய நினைப்போர் இழிநிலையை அடைவர் என்பது நிச்சயம்.  எனவே ஆடவர் பிற பெண்டிரை நாடாமல் நல்வழியில் இல்லறம் நடத்தி சமுதாயத்தை மலரச் செய்ய வேண்டும் எனக் குரல் கொடுத்துள்ளார் ஜெகவீரர் என அறிய முடிந்தது.

கள் அருந்துவோர் அறிவிழப்பர்:

     சங்ககாலத்தின் புறப்பாடல்கள் மன்னன்-புலவர் உறவு, மன்னன்-மக்கள் உறவு மன்னன்-வீரர் உறவு  ஆகிய நிலைகளை உணர்த்தியுள்ளமையை அறியமுடிகிறது. வீரர்கள் பல்வேறு போர்க்காரணங்களுக்காகச் சென்று வெற்றி பெற்று மன்னனை மகிழ்விப்பர். அவ்வெற்றியைப்; பாராட்டும் விதத்தில் மன்னன் அவ்வீரர்களுக்குக் கலங்கிய கள்ளினைக் கொடுத்துத் தானும் அருந்தி களிப்படைவான். இக்குறிப்பினைச் சங்க இலக்கியத்தில் காணமுடிகிறது. இதனை இழிவு என்றோ, நாணுவதற்குரியது என்றோ, அறிவிழக்கச் செய்வது என்றோ சங்க இலக்கியம் குறிப்பிடவில்லை. கள் அருந்தும் இப்பழக்கத்தை வள்ளுவப் பெருந்தகை இழிவான, இகழ்ச்சிக்குரிய, செயல் என்பதாகக் கருத்துரைத்தார். வள்ளுவத்தின் வழி இப்போக்கினை ஜெகவீரர் ஒவ்வொரு குறளுக்கும் ஒரு குறள் வெண்பா அமைத்து பாடியுள்ளார். 

          சமுதாயத்தில் ஆடவர்கள் தனக்குப் புகழும், பெருஞ்செல்வமும், நிறைந்த அழகும் பெற்றிருக்க வேண்டும் எனக் கருதுவர். ஆனால் கள் அருந்துவதன் தீமையையும், இழிநிலையினையும் உணர்ந்திருந்தும் அச்செயலிலிருந்து விடுபடாதிருப்பவர்களைத் திருமூலர், ~~தௌ;ளுண்மை ஞானச் சிவலோகம் சேர்வுறார்; கள்ளுண்ணு மாந்தர் கருத்தறி யாரே||5  எனக் கூறியுள்ளமையை ஜெகவீரர் தம் நூலில் மேற்கோள் காட்டியுள்ளார்.  ஒருவன் உடல்வலிமையும், பொருள்வலிமையும் பெற்றவனாக இருந்தாலும் கள் அருந்தும் பழக்கமுடையவனாக இருந்தால் அவன் தன் அறிவை இழந்து, பிறரால் இகழப்படுவான் என்பதை,          ~~அன்றுகள் ளார்வமுற்ற அங்கி வருணனொளி

                 குன்றினான் என்னே குமரேசாநின்றெவரும்

                 உட்கப் படாஅர் ஒளியிழப்ப ரெஞ்ஞான்றுங்

                 கட்காதல் கொண்டொழுகுவார்|| (தி.கு.வெ.பா921)

என்கிறார் ஜெகவீரர். இப்பாடலுக்கான விளக்கவுரையில் அமைந்துள்; கதையானது, ~~அங்கிவருணன் என்னும் சூரியகுலத்து மன்னன் பல மாதரை விழைந்து அரசமுறையை அறவே துறந்தான்; பின்பு நறவும் அருந்தினான். விடரும் தூர்த்தரும் நடருமாகிய இழிநிலையாளர் பலரையும் புடைசூழ வைத்து நாளும் களிமயக்குடையனாய் இவன் காலங்கழித்து வந்தான். இவனது நிலையினையறிந்து குறுநிலமன்னரும் பெருநகை செய்தார். தாம் செலுத்தி வந்த திறைகளையும் முறைப்படி செலுத்தாதிருந்தான். இவன் நிலையினை நோக்கி மறுபுலவேந்தரும் மதியாதிருந்தார்.||6 என்பதாக அமைந்துள்ளது. இதன்மூலம் கள்ளுக்கு அடிமையாவோர் தன் அறிவையிழப்பதோடு தன் புகழையும் இழந்துவிடுவர் என அறியமுடிகிறது.  

           கள்ளுக்கு அடிiயான ஒருவன் தன் புகழ் அழிவதை நினைத்து வருந்தமாட்டான். நாணம் என்னும் பண்பு இவனிடத்தில் இருக்காது. இதனால் உற்றார் உறவினர்கள் உறவுகொள்வதை விரும்பாமல் இகழ்ந்து விலகிச்செல்வர் என்பதை,

       ~~நாணாமல் ஏனோ நளகூபன் கள்ளருந்திக்

        கோணா தழிந்தான் குமரேசாமாணமைந்த

        நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்குங் கள்ளென்னும்

        பேணாப் பெருங்குற்றத் தார்க்கு|| (தி.கு.வெ.பா-924)

என்கிறது திருக்குறள் குமரேச வெண்பா. இப்பாடலுக்கு விளக்கம் தரும் விதமாக பாகவதம் என்னும் நூலில் இடம்பெற்ற  குபேரனின் மகனாகிய நளகூபரன் கள்ளுண்டு இழிநிலை அடைந்த கதையினை ஜெகவீரர், ~~ஒருநாள் நிறையக் குடித்துவிட்டு தன் தம்பியாகிய மணிக்கிரீவனோடு அரம்பையர் சிலரை அழைத்துக் கொண்டு சைத்திராதம் என்னும் தனது இனிய பூஞ்சோலையி னருகேயிருந்த ஓர் அழகிய பொய்கையில் போய்ப் புனலாடிக் கொண்டிருந்தான். அவ்வமயம் அங்கு நாரதர் வந்தார். அம்மாதவரைக் கண்டவுடனே மங்கையரனைவரும் ஆடைபுனைந்து கரையில் வந்து அகல நின்றார். வெறியராயிருந்தபடியால் இவனும் தம்பியும் அம்முனிவரெதிரே நாணமுமின்றி நிருவாணமாய் நின்றார். அந்நிலையினை நோக்கி அவர் நெஞ்கங்கனன்றார்; ~மரம்;போல் நிற்கின்றீரே! இனிநீர் மரமாய் முடிவீர்!| என வைது போனார். இவர் அவ்வாறே மண்ணுலகத்தில் நந்தகோபன் வீட்டு முன்றிலில் இரண்டு மருதமரங்களாய்த் தோன்றிநெடுங்காலம் நின்றார்; பின்பு கண்ணன் உரலோடு தவழ்ந்து வந்து தம்மை நண்ணியபொழுது உருமாறி இவர் படிமாறியதையறிந்து குபேரன் பெருந்துயரடைந்து கள் என்பது தன் எல்லையிலுங்கூட இல்லையாம்படிச் செய்தான். சிறிது கள் உண்டதால் அழகு அறிவு கல்வி செல்வம் ஆண்மை முதலிய எல்லா நலங்களையும் இழந்து, உள்ள நாணமும் போய் எள்ளப்பட்டு இங்ஙனம் இழிந்தொழிந்தாரே யென்று விஞ்;சையனைவரும் நெஞ்சழன்று கள்ளின் கொடுமையை எள்ளியிருந்தார்.||7 என்கிறார். மேற்கண்ட கதையில் குபேரன் குலம் கள்ளினை ஒதுக்கி நன்னிலையை அடைந்தனர் என அறியமுடிகிறது. இதேபோல் நம் தமிழக  மக்கள் கள் அருந்தாமல் மேன்மையை அடைந்தால் ஒவ்வொரு குடும்பமும் நலம் பெற்று சமுதாயம் மலர்ச்சியடையும் என்பது நிச்சயம்.

முடிவுரை:

        ~~எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே||8 என்னும் ஒளவையின் வரிக்கேற்ப  சமுதாயத்தில் ஆடவர், வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மையைத் தரவல்லவர்கள். எனவே இத்தகையோர் நற்பண்புடைய ஒழுக்கமும், நற்பழக்கமுடைய கொள்கையும் உடையவர்களாக இருத்தல் அவசியம். இவ்வியல்பிலிருந்து மாறி பிறன்மனையாளை விரும்பிச் சென்று ஒழுக்கத்தில் பிறழ்வடைந்தோரும் மதிமயக்கத்தை உண்டாக்கவல்ல கள்ளுக்கு அடிமையானோரும் சமுதாயத்திற்குப் பேரிழிவை உண்டாக்கக் கூடியவர்கள். இந்நிலையினை வள்ளுவப் பெருந்தகை ஒழிக்க நினைத்து பிறனில் விழையாமை, கள்ளுண்ணாமை என்னும் அதிகாரங்களைப் படைத்தார். இதன்வழி கவிராச பண்டிதர் எனப் புகழப்படுகின்ற ஜெகவீரர்  பிறனில்விழையாமை, கள்ளுண்ணாமை என்னும் தலைப்பில் வெண்பா பாடி சமூகம் இருண்மையிலிருந்து நீங்கி மலர்ச்சியடைய வேண்டும் என்னும் நோக்கில் கதைகூறி புலப்படுத்தியுள்ளமையை அறிய முடிந்தது.     

அடிக்குறிப்புகள்:

1.குறுந்தொகை -135

2.திருக்குறள் குமரேச வெண்பா (தொகுதி-2) -187

3.மேலது -166     

4.வைரமுத்து கவிதைகள் -480

5. திருக்குறள் குமரேச வெண்பா (தொகுதி-2) -314 (மேற்கோள் -திருமூலர்)

6.மேலது -315 (தொகுதி-9)                    

7..மேலது -326   

8.புறநானூறு பா-77