ஞாயிறு, 10 டிசம்பர், 2023

 

திருஞானசம்பந்தர் குரலும் மொழிமரபுக்காப்பும்

முனைவர் இரா.கோகுல்

உதவிப் பேராசிரியர்,

தமிழ்த்துறை,

ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி,

கோயம்புத்தூர் - 641020

அ.எண்: 9943015522

உலகம் உவப்ப தமிழும் சைவமும் தழைக்கத் தோன்றியவர் திருஞானசம்பந்தர். அவரது பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் முதன் மூன்று திருமுறைகளாக விளங்குகின்றன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்கள் யாவும் ‘தேவாரம்’ என்ற பொதுப்பெயரில் இன்று அழைக்கப்படுகின்றன. ஆயினும் திருஞானசம்பந்தரின் பாடல்கள் திருக்கடைக்காப்பு என்றும், திருநாவுக்கரசரின் பாடல்கள் தேவாரம் என்றும், சுந்தரரின் பாடல்கள் திருப்பாட்டு என்றும் சிறப்புப்பெயர் பெறுகின்றன. அவற்றுள் திருஞானசம்பந்தரின் பாடல்கள் தமிழையும் சைவத்தையும் முன்னிறுத்துவதில் முன்னிற்பன. அவரது பதிகங்களின் பத்தாம் பாடல்களும், கடைப்பாடல்களும் வரலாற்றுக் களங்களாக விளங்குகின்றன. குறிப்பாக, தமிழை இரண்டாம் பக்கமாகக் கருதி வடமொழியை முன்னிறுத்திய பொழுதும், சமணமும் பௌத்தமும் முன்னிலைப்படுத்தப்பட்டு சைவ வைணவக் கொள்கைகள் புறந்தள்ளப்பட்ட பொழுதும் திருஞானசம்பந்தரின் குரல் தமிழுக்காகவும் சைவத்திற்காகவும் ஓங்கியொலிப்பதை அவரது பதிகங்களில் காணமுடிகிறது. அக்குரலை அவரது பதிகங்களின் வழியாகவும் அவர்குறித்தெழுந்த பிற சான்றுகளின் வழியாகவும் இனங்கண்டுரைக்க இக்கட்டுரை முற்படுகிறது.

தமிழெனும் கருவி

       பெரியபுராணத்தைக் குறித்து ஆராய்ந்த பெருந்தகையர்களுள் ஒருவர் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள். அவர் தமது பெரியபுராணம் - ஓர் ஆய்வு என்னும் நூலில் ஓரு வினாவை முன்வைத்துத் திருஞானசம்பந்தரின் வரலாற்றை நுட்பமாக ஆராய்கிறார். “தமிழ்நாட்டில் தமிழராகப் பிறந்த ஒருவர் ஒவ்வொரு பாடலிலும் தம்மைத் தமிழுடன் சேர்த்துக் கூறிக்கொள்ள வேண்டுமானால் அதற்குரிய வலுவான காரணம் ஏதாவது இருத்தல் வேண்டும்” (பெரியபுராணம் - ஓர் ஆய்வு, ப.எ: 004) என்பது அவ்வினா. அதற்கான காரணங்களை ஆராய முற்பட்ட அவர் சில கருதுகோள்களை விடையாக முன்வைக்கிறார். “சங்கப் பாடல்களிலோ, சிலப்பதிகாரம் முதலியவற்றிலோ தமிழைப் பற்றிய தனிச்சிறப்பு எதுவும் கூறப்பெறவில்லை. ஆனால் ஏழாம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சி நடைபெறுங்காலத்தில் இந்தப் புதுமை நிகழ்கின்றது. அப்படியானால் சங்ககாலம் முதல் ஏழாம் நூற்றாண்டு வரை இத்தமிழகத்தில் நடைபெறாத ஒரு நிகழ்ச்சி இப்பொழுது நிகழ்ந்திருக்க வேண்டும்” (பெரியபுராணம் - ஓர் ஆய்வு, ப.எ: 004) என்பது அ.ச.ஞானசம்பந்தன் முன்வைக்கும் கருதுகோள். இதற்கு அவர் தண்டன் தோட்டச் செப்பேடு, கூரம் செப்பேடுகள் ஆகியவற்றின் துணைகொண்டு ஒரு முடிவினைத் தருகிறார். ‘தமிழகத்திற்குள் சமணர், பௌத்தர், வடபுல வைதீகர்களின் குடிபுகுதல்’ (பெரியபுராணம் - ஓர் ஆய்வு, ப.எ: 132) என்பது அவர்தம் துணிபு. இதனால் பல்லவர் காலத்தில் வடமொழியும், வேதமும் அரசியல் செல்வாக்குடன் இருந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

தமிழகத்தில் தொன்றுதொட்டு வாழ்ந்துவந்த வைதீகர்கள் தமிழையும் சிவவழிபாட்டையும் போற்றி வந்துள்ளனர். ஆëர் மூலங்கிழாரின் புறநானூற்றுப் பாடல் இதற்குத் தக்க சான்றாகப் பலரால் காட்டப்படுகிறது. வடபுல வைதீகர்களின் வருகை, பல்லவர்களிடத்து அவர்கள் பெற்ற அரசியல்பலம் ஆகியன தமிழக வைதீகர்களைப் புறந்தள்ளின என்பதை, “தொடக்க காலத்தில் பல்லவர் தமிழ்நாட்டு வேதியரை ஆதரிக்கவில்லை” (பெரியபுராணம் - ஓர் ஆய்வு, ப.எ: 133) என்ற அ.ச.ஞானசம்பந்தன் அவர்களின் குறிப்பு உணர்த்துகிறது.

சமண சமயம் சங்ககாலந்தொட்டே தமிழகத்தில் இருந்துள்ளதைப் பண்டைய இலக்கியங்கள் உணர்த்தினாலும், களப்பிரர் காலத்திற்குப் பிறகுவந்த பல்லவர் காலத்திற்றான் அது அரசியல் வலிமையபை; பெறுகின்றது என்பது வரலாறு. சமணம் தொடக்க காலத்தில் வடமொழியையே போற்றி வந்தது. அரசியல் பலம் பொருந்திய சமணம் வடமொழியையே கைக்கொண்டதெனின் ஆட்சிமொழியாகவும் அம்மொழியே இருந்திருக்கும் என்பதை எளிதில் உணரலாம். இதனால் தமிழ்மொழியும். தமிழர் பண்பாடும், சிவநெறியும் நலிவுற்றன. இச்சூழமைவில் தோன்றிய திருஞானசம்பந்தருக்குத் தமிழையும், சிவநெறியையும் ஏற்றம்பெறச் செய்ய, புறச்சமயங்களான சமண பௌத்தத்தையும், வடபுல வைதீகர்களையும் எதிர்க்க வேண்டிய தேவை இயல்பாகவே உருவாயிற்று.

திருஞானசம்பந்தர் திருத்தலச்செலவு மேற்கொண்டு தமிழையும், சிவநெறியையும் மக்களிடம் பரப்புரை செய்தார். அதற்குத் தமிழுடன் தன்னை இணைத்துக் கூற வேண்டிய தேவை அவருக்கு இருந்தது. அ.ச. ஞானசம்பந்தன் அவர்களுடைய ஆய்வின் சாரம் இது. அவருடைய ஆய்வின் அடிப்டையில் கண்டால் தமிழ் மக்கள் அரசியல் அதிகாரத்தாலும், விழிப்புணர்வின்மையாலும் இழந்த மொழிப்பற்றையும், நிலம் சார்ந்த பண்பாட்டுணர்வையும் சரியாகக் கண்டடைந்து அவற்றை மக்களிடையே மீண்டும் புகுத்த திருஞானசம்பந்தர் செயல்பட்டதை அறியமுடிகிறது. அச்செயல்பாட்டிற்குத் தமிழ்மொழியை ஒரு கருவியாகவே பயன்படுத்திய அவரது உத்தி அறியற்பாலது.

தமிழ்ப்படைஞர் சம்பந்தர்

       சைவ சித்தாந்தம் வேதாகமங்களை முக்கிய அளவைகளாகக் கொண்டு தனது தத்துவங்களைக் கட்டமைத்துள்ளது. எனவே சைவத்திற்கு வேதாகமங்கள் மிகவும் இன்றியமையா அடிப்படையாகும். சிவநெறியைப் பரப்புரை செய்யப் புகுந்த திருஞானசம்பந்தர் தன் குலமரபான மறையோதுதலை விடுத்துத் தமிழ்மரபை வளர்த்தார் என்று அறுதியிட்டுக் கூற இயலவில்லை. ஆயினும் வேதத்தைக் காட்டிலும் தமிழையே அவர் உயர்வாகக் கருதினார் என்பதை அவரது பல பதிகங்கள் உறுதி செய்கின்றன.

“……………………… தொல்சீர்ப்

புகலிநகர் மறைஞான சம்பந்தன் உரைசெய்த

நிகரில்லன தமிழ்மாலைகள்” (சம்பந்தர் தேவாரம், பா.எ: 129)

“………………………. கவுணி

ஞானத்துயர் சம்பந்தன் நலங்கொள் தமிழ்” (சம்பந்தர் தேவாரம், பா.எ: 151)

“நல்லுயர் நான்மறை நாவின் நற்றமிழ் ஞானசம்பந்தன்” (சம்பந்தர் தேவாரம், பா.எ: 436)

“……………………..... கவுணி

நார்மலிந்தோங்கு நான்மறை ஞனசம்பந்தன் செந்தமிழ்” (சம்பந்தர் தேவாரம், பா.எ: 447)

 

இவையாவும் திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்புப் பாடல்கள் சிலவற்றின் பாடலடிகள். இப்பாடலடிகளைக் கூர்ந்து கவனித்தால் ஒரு நுண்ணிய கருத்து இழையோடுவதைக் காணலாம். திருஞானசம்பந்தர் மறையோதும் அந்தணர் குலத்தில் தோன்றியவர். ஆனால் தமிழையும் சிவத்தையும் ஏற்றிப் போற்றியவர். மேற்கண்ட பாடலடிகள் மூலமாக, ‘நான்மறையோதும் கவுணியர் குலத்தோன்றலாகிய நான் தமிழால் சிவத்தைப் பாடுகிறேன்’ என்று அவர் பட்டயம் எழுதித் தருவதைக் காணலாம்.

       இதனால் தன் குலத்திற்குரியதான மறையைக் காட்டிலும் தமிழ்ப்பா மேலது, வடமொழியைக் காட்டிலும் தமிழ்மொழி இந்நிலத்திற்கும், இந்நிலம் சார்ந்த பண்பாட்டிற்கும் தேவையானது என்ற அவரது உட்கிடை பெறப்படுகிறது.

மெய்ந்நெறியாம் சிவநெறி

       புறச்சமயங்களான சமண, பௌத்தத்தையும், அரசியல் செல்வாக்குப் பெற்ற வடமொழியையும், வடபுல வைதீகர்களையும் பின்தள்ளிவிட்டு சிவநெறியையும், தமிழ்மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும் மக்கள்முன் நிலைநிறுத்த வேண்டுமாயின் தமிழ்மொழியின் சிறப்பையும், சிவநெறியினது அருமையையும் அறிந்திருந்தால் மட்டும் போதாது. சமண, பௌத்தத் தத்துவங்களையும், வடமொழியையும், நான்மறையையும் அறிந்திருத்தல் வேண்டும். அப்பொழுது தான் அவரது சொல் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய வாய்ப்புண்டு. “நற்றமிழ் ஞானசம்பந்தன் நான்மறை கற்றவன்” (சம்பந்தர் தேவாரம், பா.எ: 3041) என அவர் தன்னை நான்கு மறைகளையும் கற்றவன் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார். அதுவும் இவ்வடி அவர் தனக்கு உபநயனச்சடங்கு இயற்றவந்த வேதியர்களிடம் கூறுவதாக அமைந்திருப்பது ஈண்டு சிந்திக்கத்தக்கது. கவுணியர் குலத்துதித்த திருஞானசம்பந்தரிடம் இவையாவும் நீக்கமற நிறைந்திருந்தமை அவர் தமிழையும் சிவத்தையும் அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்க ஏதுவாயிற்று எனலாம்.

“உலகியல் வேதநூல் ஒழுக்க மென்பதும்

         நிலவு மெய்ந்நெறி சிவநெறி யதென்பதும்” (பெ.பு. பா. 2723)

“வேதப் பயனாம் சைவமும் போல” (பெ.பு. பா. 1219)

என்னும் சேக்கிழாரின் பாடலடிகளை எடுத்துக்காட்டிய வித்துவான் க. வெள்ளைவாரணன் அவர்கள், “வேதநூல்களிற் காணப்படும் கருத்துக்களிற் பெரும்பாலன உலகியல் நடைமுறைக்குப் பெரிதும் அரண்செய்யும் முறையில் அமைந்துள்ளன என்பதும், வேதநெறியின் மேலாக அதன் முடிந்த பயனாய்த் திகழும் சிறப்புடைய திருநெறி சைவம் என்பதும் நன்கு தெளியப்படும்” (பன்னிரு திருமுறை வரலாறு, ப.எ:673) என்ற குறிப்பையும் தருகிறார்.

       தொடக்கால பல்லவர்கள் சமண சமயத்திற்குப் பேராதரவு நல்கி அச்சமயத்தை வளர்த்துள்ளனர் என்பது வரலாறு. சமணநெறி தென்னகத்திலிருந்த மரபிற்கு மாற்றாக நின்றுள்ளது. “இடைக்காலப் பல்லவர் காலத்தில் தமிழகம் நுழைந்த திகம்பர சமணத் துறவிமார் ஆடையின்றித் திரிந்தமை, நீராடாமல் அழுக்குப் படிந்த மேனியராய் அலைந்தமை, இயற்கைக்கு மாறுபட்ட முறையில் தனித்துத் துறவுநிலையில் முற்ற இருந்தமை, கடுமையான நோன்புகள் நோற்றமை, சமயத்தின் பெயரால் தற்கொலை செய்துகொண்டமை இன்ன பிறவும் தமிழர் முன் இந்நாட்டிற் காணாத காட்சிகள் அல்லவா? இவை அனைத்தும் தமிழர் மரபுக்கே மாறுபட்டவை... முதலிற் சமண முனிவருடைய கல்வி கேள்விகளிலும் பிற நற்பணிகளிலும் உவந்து சமணரான மக்கள், இம்மாறுபாடுகளை உணர்ந்த பின்னர் உள்;ர வெறுத்து வந்தனர். அப்பர் துணிந்து வெளிப்பட்டவுடன் சிலர் வெளிப்போந்தனர். அரசனே மாறியவுடன் தொண்டை நாடே சமயம் மாறியதென்னலாம். இந்நிலைமையே பாண்டி நாட்டிலும் இருந்து சம்பந்தரால் மாறியது” (மா. இராசமாணிக்கனார், பல்லவர் வரலாறு, ப.எ: 227) என்ற இராசமாணிக்கனாரின் கூற்றும் உற்று நோக்கத்தக்கது.   எனவே சமண பௌத்தத்தின் அரசியல் செல்வாக்கையும் திருஞானசம்பந்தர் கருத்திற்கொள்ள வேண்டியிருந்தது என்பதை உணரமுடிகிறது. அவரது பதிகங்களின் பத்தாம் பாடலில் அவர் சமண சமயக் கருத்துக்களையும் பண்பாட்டையும் மறுத்தும் சாடியும் பேசியுள்ளமை இதற்குத் தக்க சான்றாகும். அந்த மறுப்பினுடைய உச்சமாக அனல் வாதத்தையும் புனல்வாதத்தையும் அவற்றின் விளைவான சமணர் கழுவேற்றலையும் கூறலாம்.

       “மன்னவன் மாறன்கண்டு மந்திரி யாரை நோக்கித்

         துன்னிய வாதிலொட்டித் தோற்றவிச் சமணர் தாங்கள்

         முன்னமே பிள்ளை யார்பால் அநுசிதம் முற்றச் செய்தார்

         கொல்நுனைக் கழுவில் ஏற முறைசெய்க என்றுகூற” (பெ.பு. 2756)

என்றும்

        “தோற்றவர் கழுவில் ஏறித் தோற்றிடத் தோற்றும் தம்பம்” (பெ.பு. 2759)

 

என்றும் பெரியபுராணம் இதனைப் பதிவுசெய்துள்ளது.

       “கோதைவேல் தென்னன்தன் கூடல் குலநகரில்

         வாதில் அமணர் வலிதொலையக் - காதலால்

         புண்கெழுவு செம்புனலா றோடப் பொருதவரை

         வன்கழுவில் தைத்த மறையோனை” (ஆ.பி. திருவுலாமாலை,பா.அ: 73-75)

என்று நம்பியாண்டார் நம்பியும் சமணர் கழுவேற்றம் குறித்துக் கூறுகிறார். இஃது திருஞானசம்பந்தர் காலத்து சமயப் பூசல்களின் விளைவை எடுத்துரைக்கின்றன.

திருமறைக்காட்டில் வேதங்களால் காப்பிடப்பட்ட திருக்கோயிற் கதவுகளைத் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் திறக்கவும் மூடவும் அருளிய செயலும் அவர்தம் மொழிப்பற்றை எடுத்துரைக்கின்றது. இவ்வருளிச் செயலின் தன்மையைச் சற்று உற்று நோக்கிடின் ஒரு செய்தி புலனாகும். வடமொழி மறையால் காப்பிடப்பட்டுப் பல ஆண்டுகளாகத் திறக்கப்படாமல், சரியாகக் கூறவேண்டுமானால் திறக்கமுடியாமல் அடைந்து கிடந்த திருக்கதவுகள் தமிழ்ப்பதிகங்களால் திறக்கவும் அடையவும் பெற்றன என்பது அச்செய்தி. தமிழ்நிலத்தில் வலுவாகக் காலூன்றி மக்களின் இயல்பான வாழ்விற்கு ஒவ்வாத வகையில் தடைநின்ற வடமொழி வழக்காற்றைத் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தமிழ்ப்பதிகங்களால் நீக்கி அருளினர் என்ற குறிப்புப் பொருளும் இவ்வரலாற்றுள் நின்றொலிப்பதை உணரமுடிகின்றது.

       மேலும் தமிழ்பரப்பும் திருஞானசம்பந்தராலும், திருநாவுக்கரசராலும் இந்நிகழ்வு நடைபெற்றது சிந்தனைக்குரியது. இதனால் வடமொழி மரபைக் காட்டிலும் இந்நிலத்திற்குரிய மொழியே இந்நில மக்களுக்கு ஏற்புடைத்து என்பதை உணரலாம். சைவப் பெரியார்களான அவ்விருவரின் கருத்தும் இதுவாகவே இருந்திருத்தல் வேண்டும். இவ்வரலாறு நம்மை இவ்வாறே எண்ணச் செய்கின்றது.

சமண, பௌத்த, வடபுல வைதீகர்களின் அரசியல் வலிமையால் தமிழும் சைவமும் வலுக்குன்றியிருந்த காலச்சூழலில் தமிழ்நிலத்தில் தமிழையும் சிவநெறியையும் வலுவுறச்செய்ய இளம்வயதிலேயே களம் புகுந்தவர் திருஞானசம்பந்தர். இம்முறைமையில் அவர் மிகத் தீவிரமாகச் செயல்பட்டார் என்றும் உறுதிபடக் கூறலாம். திருக்கோயில்களில் தமிழில் வழிபாடு செய்யலாம், செய்ய வேண்டும் என்று கி.பி. ஏழாம் நூற்றாண்டிலேயே குரல் எழுப்பியவர் திருஞானசம்பந்தர்.

       “சந்தம் பரவு ஞானசம் பந்தன்

         வந்த வாறே  புனைதல் வழிபாடே” (சம்பந்தர் தேவாரம். பா.எ: 304)

என்று சிவபெருமானைத் தமிழால் பாடிப் பரவுதலே வழிபாடு என்று விதி செய்தவர் அவர்.

       மக்கள் சமண பௌத்தம் போன்ற புறநெறிகளினின்று நீங்கிச் சிவநெறியைக் கைக்கொள்ள வேண்டும் என்று திருத்தலச்செலவு மேற்கொண்ட திருஞானசம்பந்தர், அதற்குத் தகுந்த கருவியாகத் தமிழைக் கொண்டமை, அவருடைய தமிழ்ப்பற்றையும், சிவநெறிக்கும் தமிழுக்குமான நெருங்கிய தொடர்பையும் புலப்படுத்துகிறது. அந்தந்த நிலத்தின் மொழியும் மரபும் வலுக்குன்றும்பொழுது அம்மொழி சார்ந்தோர் அதற்காக ஓங்கிக் குரலெழுப்புதல் வேண்டும் என்ற அறைகூவலைத் திருஞானசம்பந்தரின் வாழ்வும் வாக்கும் உலகிற்குச் செய்தியாக வழங்குகிறது. அவற்றுட் கொள்ளத்தக்கனவும் விலக்கத்தக்கனவும் உள்ளன என்பதையும் மறுத்தற்கில்லை.