ஞாயிறு, 10 டிசம்பர், 2023

 மணிமேகலை காப்பியம் - மரபும் மரபைக் கட்டுடைக்கும் தருணங்களும்

முனைவர் பா.பொன்னி,

தமிழ்த்துறைத் தலைவர்,

எஸ்.எ•ப்.ஆர் மகளிர் கல்லூரி, சிவகாசி

முன்னுரை :

மணிமேகலை காப்பியமானது தமிழ் இலக்கிய வாசிப்புத் தளத்தில் தனித்துவம் பெறுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. தமிழில் தோன்றிய பழைய இலக்கியங்களான சங்க இலக்கியம் சமயச் சார்பற்றது என்றும், சிலப்பதிகாரத்தில் பல சமயச் சிந்தனைகள் சொல்லப்பட்டாலும் எச்சமயத்தையும் பரப்பும் நோக்கம் அப்பிரதியில் தெளிவாக வெளிப்படவில்லை என்றும், மணிமேகலை மட்டுமே சமயப் பரப்புரையை மையமாகக் கொண்டு எழுந்த முதல் காப்பியம் என்றும் ஆதிக்க மரபினரின்   வரலாற்றாய்வு எழுதியலில் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் அன்றைய வைதீகக் கட்டமைப்பு மரபு உருவாக்கங்களைத் துணிந்து தெளிவாகவும் திட்டவட்டமாகவும் கட்டுடைக்கும் பல தருணங்களை இக்காப்பியம் தன்னகத்தே கொண்டுள்ளதை உற்று நோக்க வேண்டும். அதனால் கூட இப்படியான சிந்தனை விதைப்புகள் நடந்தேறி இருக்கலாம். இருப்பினும் பெண் மைய இயங்கியலைச் சார்ந்து வெளிப்பட்ட இக்காப்பியம் வெளிப்படுத்தும் இயல்புவாதத்திற்கு எதிரான கட்டுடைத்தலை அறிமுகம் செய்யும் சிறு பகுதியாகவே இக்கட்டுரை ஆக்கம் பெறுகின்றது. 

மணிமேகலைக் கட்டுடைக்கும் மரபுக்குறிகள் :

அன்றைய காலக்கட்டத்தில் மக்களின் வாழ்வியலோடு வெளிப்பட்ட சில மரபுக் குறிகளை மணிமேகலை காப்பியமானது மிகத் தெளிவாகத் காதைகளின் வாயிலாகவும் காட்சிகளின் வாயிலாகவும் கட்டுடைக்கும் நிலைகளைக் கீழ்க்கண்ட தன்மையில்  பகுக்கலாம்.

பெண் - மையம் - களம் - மரபுடைப்பு

வைதீக மரபுடைப்பு

மாய்மைகளுக்கு எதிரான குரல்

பெண் - மையம் - களம் - மரபுடைப்பு :

ஆண் சமூகத்தினரால் பாலியல் நுகர்பொருளாக மட்டுமே கருதப்பட்ட பெண்களைப் படைத்து, அப்பெண்களுக்கான கலகக் குரலெழுப்பிய கதையினை மையப்படுத்தும் தனிப் பெருமை வாய்ந்த காப்பியமாகவே தான் மணிமேகலையைக் கருத முடியும். ‘பெருமையும் உரனும் ஆடூஉ மேன’ என்ற மரபினைக் கட்டுடைத்துப் ‘பெருமையும் உரனும் மகடூஉ மேன’ என்பதாகக் கதையினைக் கட்டமைத்துள்ளது சிறப்பானது ஆகும். ஆணாதிக்கச் சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண் நிலைகளைப் பல்வேறு நிலைகள் கிளைக் கதைகளுடன் படைத்துக் காட்டுவதையும் அறியலாம்.

சித்ராபதி 

கணிகையர் வாழ்வின் கொண்டாட்டத்திற்காக வாதிடுபவள்.

மாதவி

கணிகையர் குலத்தில் பிறந்து குலமாதராக மாறத் துடித்துப் பின்பு வேறு வழியில்லாமல் துறவியானவள்.

மணிமேகலை

காப்பியத் தலைவி. பெளத்தத் துறவியாகி மக்களின் பசிப்பிணி நீக்கிச் சமயத் தொண்டாற்றியவள்.

காயசண்டிகை 

கந்தர்வப் பெண். ஒரு முனிவரின் சாபத்தால் யானைத் தீ என்னும் பெரும்பசி நோய்க்கு ஆளானவள். மணிமேகலை அமுத சுரபியிலிருந்து உணவளித்ததும் அந்தச் சாபம் விலகியது. உதயகுமரனிடமிருந்து தப்புவதற்காக  மணிமேகலை இந்தக் காயச்சண்டிகையின் உருவில் நடமாடினாள். இதையறிந்து பின் தொடர்ந்த உதயகுமரனைக் காயசண்டிகையின் கணவன் காஞ்சனன் வெட்டிக் கொன்றான்.

சுதமதி 

குழந்தைப் பருவத்தில் தாயை இழந்த அந்தணப் பெண்ணான சுதமதி, பூக்கொய்யத் தனியே சென்ற ‘குற்றம்’ காரணமாக, மருதவேகன் என்பவனால் கெடுக்கப்பட்டுத் தனிமையில் தவிக்குமாறு விடப்படுகிறாள்.(மருதி - விசாகை இதே போன்ற நிலையிலான பாத்திரம்)

பிற பெண்கள் : சாலி, இலக்குமி, இராசமாதேவி, கோதமை, நீலி, ஆதிரை.

இப்படிக் கதை முழுவதும் பெண் சமூகத்திற்கு ஏற்படும் சிக்கல்களை மையமிட்டவாறே கொண்டு செல்கின்றார் காப்பிய ஆசிரியர். ஆணாதிக்கச் சமூகத்தில் அடிமைகளாக வாழும் எந்தப் பெண்ணுக்கும் அமைதி இல்லை என்றவாறே பெண்ணியப் பிரச்னைகளை, குரல்களைத் தம் காப்பியத்தில் அங்கிங்கெனாதபடிப் பதிவு செய்துள்ளார். அதேவேளையில் பெண் சமூகத்தின் சிந்தனை ஊற்றாகப் பசிப் பிணியைப் போக்கத் தொண்டாற்றும் நிலையில் மையப் பாத்திரமாக மணிமேகலை பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. 

“பசியும் பிணியும் பகையும் நீங்கி

வசியும் வளனும் சுரக்க” (மணி - பதிகம்)

என வாழ்த்தித் தொடங்குகின்றது.

“அறம் எனப்படுவது யாது எனக் கேட்பின்,

மறவாது இது கேள், மன்னுயிர்க்கு எல்லாம்

உண்டியும் உடையும் உறையுளும் அல்லது

கண்டது இல்” (பாத்திரம் பெற்ற காதை)

என்ற பெளத்த சமயத்தின் கோட்பாட்டினை மணிமேகலை என்னும் பெண் தலைமைப் பாத்திரம் மூலமாகப் பதிவு செய்து புதுமை செய்வதை உணரலாம்.

வைதீக மரபுடைப்பு :

சமயங்கள் மனிதன் மனிதனாக வாழ உதவுவதும் மனித நிலையிலிருந்து மேம்படுவதற்கான உரிய வழிவகைகளை வகுத்துரைப்பதும் குறிக்கோளாகக் காட்டிக் கொள்கின்றன. ஆனால் அவை அவ்வாறு நடப்பவை அல்ல. காலத்தின் தேவைக்கேற்பத் தம்மை நிலைபடுத்திக் கொள்வதற்குச் சில முரண்களையும் கூட ஏற்கின்றன. புதிய சூழலில் தம்மைத் தகவமைத்துக் கொள்ளத் துடிக்கும் சமயங்கள், பழைய கொள்கைகளையும் பழக்கவழக்கங்களையும் பின்பற்றும் சமயத்தைச் சுட்டிக் காட்டி சமூகத்தில் புரட்சியையும் மறுமலர்ச்சியையும் அடையாளப்படுத்துவது இயல்பாகும். அப்படியான பணியினையே பெளத்த சமயம் செய்தது. அன்றைய கட்டத்தில் இருந்த  வைதீகச் சமயத்தின் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் உடைக்கத் தொடங்கியது. மனித உயர்விற்குத் தனித்த சடங்குகள் என்பது தேவையற்றது. மனிதன் தன் முயற்சியாலும் ஒழுக்கத்தாலையுமே உயர்வான நிலையினை அடைய முடியும்.

கடவுள் என்று தனித்த ஒருவன் இல்லை என்றும், அவனை அடைவதற்காக யாகம் வளர்ப்பது என்பது தேவையற்ற ஒன்று. தன் வினைப் பயனைக் காரணமாகக் கொண்டே பிறவிப் பிணி முடிவாகும் என்பதைக் காப்பியம் பேசுகின்றது. 

 “வினையின் வந்தது வினைக்கு விளையாயது” (பளிக்கறை)

மேலும், தெய்வமோ பேயோ யாரையும் வருத்துவதில்லை என்பதையும்,

“அணங்கும் பேயும் ஆருயிர் உண்ணா

 ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது” (சக்கரவாளக் கோட்டம்)

குறிப்பிடுகின்றது.

அன்றைய காலகட்டத்தில் நிலைபெற்றிருந்த பல்வேறு சமயங்களைக் கைக் கொண்டவர்களாகிய அளவைவாதி, சைவவாதி, பிரமவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசீவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி, பூதவாதி ஆகியோரிடத்தில் சமயவாதம் புரிவதும் இங்கு காப்பியப் புதுமை ஆகும். 

“வேற்றுருக கொண்டு வெவ்வே றுரைக்கும்

நூற்றுறைச் சமய நுண்பொருள் கேட்டே

அவ்வுரு வென்ன ஐவகைச் சமயமும்

செவ்விது அன்மையின் சிந்தையின் வைத்திலேன்

அடிகள் மெய்ப்பொருள் அருளுக என்ன” (தவத்திறம்)

இதுமட்டுமின்றி உள்ளத்தில் விளையும் கொடிய நினைவுகள், கொலை, களவு, காமம் போன்றவற்றை விலக்கி நிற்பதே தருமமாகும் என்றும் உரைக்கின்றது. நெற்றிக்கண்ணை உடைய சிவபெருமான் முதல் ஊரிலே வாழ்கின்ற சதுக்கப் பூதம் வரை உள்ள அனைத்துக் கோவில்களும் நிலைபெற்று இருக்க வேண்டும் என்றே கருத்துரைத்திருப்பதைக் கொண்டு சமயப் பொறையே காப்பிய ஆசிரியரின் உள்ளமாக இருந்துள்ளதையும் அறியலாம். அதேவேளை வைதீக மடைமைகளையும் மரபுடைத்திருப்பதும் உண்டு.

மாய்மைகளுக்கு எதிரான பார்வை :

மனித இனத்திற்குப் புலப்படாத கருத்துருவானது  பிறப்புக்கு முன்னும் இறப்புக்கு பின்னும் உள்ள நிலையே ஆகும். ஆனாலும் நிலைத்த தன்மை என்னும் மாய்மைகளில் சிக்குண்டு வாழ்க்கையைத் தவறான நிலை நின்று வாழப் பழகிக் கொள்கின்றான். இதில் இருந்து அன்று முதல் இன்று வரை விடுபட முடியாது உழன்று திரியும் இனத்திற்கு வாழ்வில் மாய்மை எவை என்பதைப் புலப்படுத்தி அதில் இருந்து விடுபடும் வழிவகையையும் கூறி நிலையாமையின் தேவையை மணிமேகலை உணர்ந்த்துகின்றது. யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, செல்வம் நிலையாமை ஆகியவற்றை இக்காப்பியம் மனித மாயைகளுக்கு எதிரான பார்வையாகப் பதிவு செய்கின்றது. இதற்காகவே சக்கரவாளக் கோட்டம் குறித்த செய்திகள் இடம் பெறுகின்றது எனலாம். ஆசையை அறுப்பது ஒன்றுதான் பிறவாமைக்கு வழி, ஆசையை அறுப்பதற்கு வழி அறம் செய்வது தான் எனப் பேசுகின்றது.

வஞ்சி நகரில் சமயவாதிகளிடம் தர்க்கம் செய்த மணிமேகலை தவத்திறம் பூண்டு தருமங் கேட்ட காதையில் காஞ்சி மாநகருக்குள் ஆர்ப்பரித்து நுழைகின்றார். அங்கே பெளத்த அறிஞராக இருந்த அறவணடிகளைக் கண்டு “அறமுறைத் தருள்க” எனக் காட்கின்றார். அன்றையச் சூழலில் காஞ்சியில் செழித்திருந்த பெளத்தத்தின் அறம் என்பது ‘நிலையாமை’ ஆகும்.

இளமை நிலையாமை

யாக்கை நிலையாமை

செல்வம் நிலையாமை

இந்த மூன்று கருத்துகளும் பல்வேறு இடங்களில் வெளிப்படுகின்றது.

“பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்

 பிறவார் உறுவது பெரும்பேர் இன்பம்

 பற்றின் வருவது முன்னது பின்னது 

 அற்றோர் உறுவது அறிக என்று அருளி” (ஊரலர் உரைத்த)

என்று உரவோன் அருளியதாக மாதவி கூற்றில் வைத்துப் பேசுகிறார். இப்படிக் காப்பியப் பாத்திரங்கள் பேசும் இடங்கள் பலவற்றுள்ளும் நிலையாமை கருத்து நீக்கமற நிறைந்துள்ளது. அதிலும் பசிப்பிணியைப் போக்குவதைப் போன்ற ஓர் உன்னத அறம் வேறொன்றுமில்லை என்பதையும் உணர்த்துகின்றார். இளமை, யாக்கை, செல்வம் இம்மூன்றும் பொதுவுடைமைக்கு எதிரான ஒரு தனியுடைமையின் அடையாளங்கள் ஆகும். இந்த மாய்மைகளில் சிக்குண்ட மனிதனால் தான் பிற மனிதன் சுரண்டப்படுகின்றான்; அநீதி இழைக்கப்படுகின்றான் என்பதையும் வலியுறுத்தி குரல் எழுப்புகின்றார்.

“வினைவிளங்கு தடக்கை விறலோய் கேட்டி

 வினையின் வந்தது வினைக்கு விளைவாயது

 புனைவன நீங்கில் புலால்புறத் திடுவது

 மூப்புவிளி உடையது தீப்பிணி இருக்கை

 பற்றின் பற்றிடங் குற்றக் கொள்கலம்” (பளிக்கறை புக்க காதை)

உடம்பு வினையால் உண்டானது. வினைக்கு விளைநிலமாக உள்ளது. புனையப்படுவனவாகிய மணப் பொருள்கள் நீக்கப்படுமானால் புலால் நாற்றத்தை வெளிக்காட்டுகின்றது. முதுமை அடைந்து சாஅதலை நோக்கிப் பயணிக்க வைக்கின்றது போன்ற செய்திகள் யாவும் அன்றைய மரபு மீறிய தருணங்களாகும். சமயங்கள் யாவையும் நிலையாமைக் கோட்பாட்டில் நம்பிக்கை உடையனவாயினும் பெளத்ததைப் போன்ற அறம் வழியிலான மரபு கட்டுடைத்தலைக் கருத்தில் கொள்ள வேண்டியது தேவையான ஒன்றாகும்.

முடிவுரை :

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் உடையது பெருங்காப்பியம் என்று இலக்கணம் வகுக்கின்றது. அந்த வகையில் இந்த நான்கினையும் ஒரு புதிய பார்வையுடன் மரபு கட்டுடைத்து நிலைத்த தன்மையிலான ஒரு சமூகத்தைக் கட்டமைக்க முற்படுகின்றது. பெண்ணறத்தினை மையமாகக் கொண்டும், பிற்போக்கான சமயச் செயல்பாடுகளைப் புறக்கணித்தும், நிலைத்த நிலையாமையை வலியுறுத்தியும் படைக்கப்பட்ட மணிமேகலை காப்பியமானது அன்றைய மரபினைக் கட்டுடைத்த தருணங்கள் இன்னும் ஏராளம் என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டிய தேவையும் இங்குள்ளது.