‘பொன்விலங்கு’ நாவல் காட்டும் பணியிடக் கலகங்கள்
செ.மெல்வின் ராஜா
உதவிப் பேராசிரியர்,தமிழ்த்துறை
அமெரிக்கன்
கல்லூரி, மதுரை-02.
முன்னுரை:
மனித இனம்
தோன்றிய காலம் தொட்டே கலகங்களும் உண்டாகியிருக்கின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால்
திருவிலியத்தில், உலகம் கடவுளால் தோற்றுவிக்கப்பட்ட போது மனிதரையும் உண்டாக்கி, அவர்கள்
பணிபுரிய ஒரு தோட்டத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தாh.; அந்த தோட்டத்தில் கடவுள் புசிக்க
வேண்டாம் என்று சொன்ன மரத்தின் கனியை சர்பத்தின் தூண்டுதலால் பெண் உண்டது மட்டுமல்லாமல்
தன் கணவனுக்கும் கொடுத்து புசிக்கவைத்து கடவுளின் கோபத்திற்கு உள்ளாகின்றார்கள். இங்கு
பாம்பின் தூண்டுதலே கலகத்தின் ஆரம்பமாய் நான் கருதுகிறேன். அன்று தொடங்கிய கலகங்கள்
இன்று வரை நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன. கலகங்கள் தொடர்ந்து மக்களிடையே பலவிதமான
தாக்கத்தையும் புதிய அனுபவத்தையும் காலந்தோறும் கொடுத்துக்கொண்டே தான் இருக்கின்றன. கலகத்தைப் பற்றி தொல்காப்பியர் நூற்பாவின்
வாயிலாக பார்க்கும் போது,
“பழையன
கழிதலும்,பதியன புகுதலும் காலவகையினானே’ (நன்னூல், சொல்-உயிர்.462)
“பொய்யும்
வாழும் தோன்றிய பின்னர் ஐயர் யார்த்தனர் மற்றும் கரணம் என்ப’ (தொல்.பொருள்.களவு.4)
என்ற இவ்விரு நூற்பாக்களை ஆராயும் போது இவை கலகத்தின் வாயிலாக தோன்றிய நூற்பாக்களாக
இருக்கலாம் என்ற ஐயம் ஏற்படுகின்றது. மேலும் கலகத்தின் மூலமாக உண்டாகும் மாற்றத்தையும்
நூற்பா உணர்த்துகின்றன. கலகங்கள் பல இருப்பினும் பணியிட கலகங்கள் மற்ற கலகத்தை காட்டிலும்
மாற்றத்தையும், சிக்கலையும் உள்ளடக்கியதாக இருக்கும். மற்ற கலகங்களின் எதிரிகளின் தன்மை,
எதிரி யார்? என்பதை நம்மால் அறிந்து கொள்ள
முடியும் பணியிடச் சூழலில் அப்படி கண்டறிவது மிக எளிமையன்று. இவ்வாறாக, பணியிடச் சூழலில்
ஏற்படுகின்ற கலகங்களைப் ‘பொன்விலங்கு’ என்ற நாவல் வழி நின்று விளக்குவதாக இக்கட்டுரை
அமையப்பெறுகிறது.
பொதுவாக பணியி;ட கலகங்கள்
1.தலைமுறை,
2.அறிவு
முதிர்ச்சியின்மை,
3.திறமை,
4.தைரியம்,
5.புத்திசாலிதனம்
ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு
எழுகின்றன. பொதுவாகப் பணியிடத்தில் ஏற்கனவே வேலை செய்யும் ஒரு நபர் அங்கு வரும் புதிய
நபரிடம் தனது அதிகாரத்தையும,; ஆளுமையும் செலுத்த முற்படுவார். மேலும், தனது அனுபவம்
மற்றும் திறமையை புதிய நபரிடம் சொல்லி அவரை மறைமுகமாக எச்சரி;க்கவும் செய்வார். எங்கேயாவது
அந்த புதிய நபர் தனது திறமை மற்றும் புத்திசாலித்தனத்தின் மூலமாக முன்னேறும்போது அவரால்
ஏற்றுக்கொள்ள முடியாத சூழலில் அந்த புதிய நபர் மீது கோபமும், எரிச்சலும் உண்டாகி அவரைப்
பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த நபரின் மீது வீண்பழி சுமத்தி கலகத்தை ஏற்படுத்தி
தன்இருப்பை தக்க வைத்து கொள்ள முற்படுவர். அவ்வகையில், நா.பார்த்தசாரதி எழுதிய ‘பொன்விலங்கு’
என்ற நாவலில் இடம் பெற்றுள்ள சத்தியமூர்த்தி என்னும் கதாபாத்திரம் ஏம்.ஏ படித்த பட்டதாரியாகவும்,
உண்மை, குறிக்கோள், ஒழுக்கம் இவற்றிலிருந்து வழுவாமல் வாழும் ஓர் துடிப்பு மிக்க இளைஞராகவும்
காட்சிப்படுத்தப்பட்டுள்ளான். வீட்டில் வறுமை இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளமால்
தான் கற்ற கல்விக்கேற்ற வேலைக் கிடைக்கும் வரை காத்திருக்கின்ற இலட்சியவாதியாகவும்
ஆசிரியர் காட்டுகின்றார். காரணம், தான் கற்ற கல்வி தன்னை பக்குவத்துடனும், உறுதியுடனும்,
எதையும் எதிர் கொள்ளும் துணிவைத் தனக்கு தந்திருப்பதாக அவன் கருதினான். இன்றைய இளைஞர்களும்
கிட்டதட்ட சத்தியமூர்த்தயின் அதே மனநிலையுடன்
காணப்படுகின்றார்கள். குடும்பச் சுமையும் எதிர்காலமும், தனக்கு ஏற்ற வேலையும்
கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு வேலை செய்யும் போது
அவனுக்கு ஏற்படுகின்ற கலகங்கள் ஒன்றா, இரண்டா எத்தனையோ, அதைப்போல தான் சத்தியமூர்த்தியும் வேலைக்கு சென்ற இடத்தில் எத்தனை
கலகங்கள்.
நேர்முகத் தேர்வும் நிர்வாகி மற்றும் முதல்வரின்
மனநிலையும்
வேலைக்காக
காத்துக் கொண்டிருந்த சத்தியமூர்த்திக்கு மலையும் இயற்கையும் இணைந்த ‘மல்லிகைப்பந்தல்’
எனும் ஊரில் இயங்கி வரும் கல்லூரியில் இருந்து நேர்முக தேர்விற்கு அழைப்பு வந்தது.
சத்தியமூர்த்தியும் நேர்முக தேர்விற்கு சென்றான். |நேர்முகத் தேர்வில் கல்லூரியின்
நிர்வாகியான பூபதியும், முதல்வரும் சத்தியமூர்த்தியிடம் கேள்விகளைக் கேட்க தொடங்கினார்கள்.
கல்லூரி நிர்வாகியான பூபதி சத்தியமூர்த்தியிடம் “‘எங்கள் கல்லூரியின் பிரின்ஸ்பால்- இவருக்குத் தமிழ் ஆசிரியர்களைப்பற்றி எப்போதும்
ஒரு விதமான பயமும் சந்தேகமும் உண்டு’ என்று கூறி அவர் முகத்தை உற்று நோக்கினார். சத்தியமூர்த்தியின்
இதழ்களில் புன்னகை மட்டுமே மலர்ந்தது”1 நிர்வாகி கூறியது உண்மைதான் கல்லூரியின்
பிரின்ஸ்பாலுக்கு தமிழாசிரியர்களை அறவே பிடிக்காது காரணம் அவர்கள் மாணவர்களை தன்வசப்படுத்தி
வருவதோடு, முரட்டுக் குணமும் உள்ளவர்களாக இருப்பார்கள் என்பது அவரது எண்ணம் அதற்கேற்ப
சத்தியமூர்த்தியின் பதிலும் அமைந்ததால் பிரின்ஸ்பாலுக்கு சத்தியமூர்த்தியின் மீதும்
வெறுப்பு இருந்தது என்றே கூறலாம்.
கலகத்தின்
முதல் காரணம் பணியிடத்தில் ஏற்படுகின்ற இத்தகைய நம்பகத் தன்மையையே வயது முதிர்ந்த ஆண்கள்
இளைஞர்கள் யாரையும் எளிதில் நம்பி விடுவதில்லை. அவர்கள் தங்களது கண்களால் ஒருவரை அளவெடுத்து இவன் இப்படிப்பட்டவனாகத்தான்
இருப்பான் என்ற மனப்பிம்பத்தை உருவாக்கி தங்கள் மனதில் ஆழப் பதித்து விடுகின்றனர்.
உதாரணமாக, ‘சாட்டை’ என்ற திரைப்படத்தில் மேற்சொன்ன காட்சி அப்படியே அமைந்திருக்கும்.
அங்கு வரக்கூடிய புதிய ஆசிரியருக்கும் துணை முதல்வருக்கும் ஆன சந்திப்பே கலகத்தின்
வாயில்களாக அமைகின்றன என்ற காட்சியே கவனிக்கத்தக்க
நிகழ்வாகும்.
கல்லூரி
நிர்வாகி கேட்கக் கூடிய கேள்விகளுக்குயெல்லாம் சத்தியமூர்த்தியின் பதில் மகிழ்ச்சியினைத்
தருவதோடு, இந்த வயதில் இப்படிபட்ட திறமையா? என்ற எண்ணம் மேலோங்குகிறது. மேலும் சத்தியமூர்த்தியின்
பதிலைக் கேட்டு அவனைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்தாலும் அதனை வெளிப்படுத்தாது
கர்வம் தடுக்கிறது. காரணம், மனம் திறந்து பாராட்டி விட்டால் எதிர்காலத்தில் தன்னை மதிக்கமாட்டான்
என்றும் தன் தலையில் ஏறி அமர்ந்து கொண்டுவிடுவானோ என்ற எண்ணம் அவருக்கு எழுகிறது. பொதுவாக
மூத்தவர்களிடம் இந்த எண்ணம் இருப்பது இயல்பே.
ஆனால், குறைகளைக் கண்டுபிடித்துவிட்டால் அதனை உடனே அனைவரிடம் கூறி தன்னை பெருமைபடுத்திக்
கொள்வதில் ஆர்வமிகுந்தவர்கள் இந்த பணியிடை கலகவாதிகள்.
பொதுவாக
பணியிடத்தில் திருமணமாகாத ஆண்களை வேலைக்கு எடுப்பதற்கு தயக்கம் காட்டுவது வழக்கம் காரணம்,
பணிபுரியும் இடத்தில் பெண்கள் இருப்பார்கள் அவர்களிடம் தவறாக நடந்து கொள்ளும் பட்சத்தில்
பாலியல் ரீதியான பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடுவார்களோ என்ற எண்ணம் நிர்வாகிகளுக்கு
உண்டு அதே போன்ற சூழ்நிலையையும் சத்தியமூர்த்தி எதிர் கொள்கிறான்.
“மிஸ்டர் சத்தியமூர்த்தி உங்களுக்கு இன்னும்
திருமணமாகவில்லை சரிதானே? இன்னும் இல்லை” என்று சுருக்கமாக பதில் சொல்லி அதற்கு தனது
குடும்ப சூழ்நிலை காரணமாகவும் இருப்பதையும் எடுத்து கூறினான்”2 நிர்வாகி கல்லூரி கோ-எஜீகேஷன்
கல்லூரி அதன் இந்த கேள்வியைக் கேட்டதாக கூறினார். அதற்கு சத்தியமூர்த்தி என்னால் எந்த
பிரச்சனையும் வராது என்று உறுதியளித்தான். நேர்முகத்தேர்வின் இறுதியில் நிர்வாகிக்கு
சத்தியமூர்த்தியைப் பல விதங்களில் பிடித்திருந்தாலும் வயதும், இளமையும் வேலைக்கு தடுப்பதாகவும்
மனதில் எண்ணினார். இதனை “உணர்ந்த சத்தியமூர்த்தி இளைஞர்களாயிருக்கிற அத்தனை பேரும்
அயோக்கியர்கள் என்று நினைக்கும் மனப்பான்மையை வயது மூத்தவர்கள், இனியாவது இந்த தேசத்தில்
விட்டு விட வேண்டும.; வயது மூத்தவர்களில் ஒழுக்கம் தவறுகிறவர்களும் வரன்முறையின்றி
வாழ்கின்றவர்களும் எத்தனைப் பேர்கள் இருக்கிறார்கள் என்று சத்தியமூர்த்தி உணர்ச்சி
வசப்பட்டு பேசியதை கண்டு நிர்வாகி வியந்தார்”;.3
சத்தியமூர்த்தி சொல்வது உண்மைதான் இன்றைய இளைஞர்கள் அனைவரும் குற்றவாளிகள்
அல்ல. நாட்டின் மீதும், சமுதாயத்தின் மீதும், அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
அரசியலில் தவறை சுட்டிக்காட்டுவதிலும், அதற்கான தீர்வுகளைச் சொல்வதிலும் இளைஞர்கள்
மற்ற நாடுகளைக் காட்டிலும் முன் உதாரணமான இருக்கிறார்கள் அப்படிபட்ட இளைஞர்களை வயதான
மூத்த ஆட்சியாளர்கள் தடுத்து ஒடுக்குகிறார்கள் என்பது வருந்ததக்கது.
சத்தியமூர்த்திக்கு எதிரான முதல்வரின் வெறுப்பும்
கலகமும்:
சத்தியமூர்;த்திக்கு
பணியில் சேருவதற்கு அனுமதி கிடைக்கிறது மகிழ்ச்சியுடன் சத்தியமூர்த்தி பணியில் அமர்ந்தான்
பணியில் சேருவதற்கு முதல் நாள் நிர்வாகி அனைவருக்கும் தேநீர் விருந்தளிக்க ஏற்பாடு
பண்ணியிருந்தார். அதில் கல்லூரியில் இந்த ஆண்டு செய்ய வேண்டிய திட்டங்கள், வளர்ச்சிகள்,
புதிய ஆசிரியர்களின் அறிமுகம் என அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. விருந்தில்
கலந்து கொண்ட அனைவரும் ஆங்கிலத்திலேயே பேசினார்கள். சத்தியமூர்த்தியை அறிமுகம் செய்த
நிர்வாகி அவனை பேச அழைத்தார். அழைப்பினை ஏற்ற சத்தியமூர்த்தி தமிழில் பேச ஆரம்பித்தான்.
அப்போது முதல்வர் எழுந்து ஆங்கிலத்தில் பேசுமாறு காதருகே முணுமுணுத்தார். ஆங்கிலத்தில்
பேசுவது தான் கௌரவம் என்று கூறினார். அதற்கு சத்தியமூர்த்தி அவர் செவிமட்டும் கேட்குமாறு
கூறாமல் எல்லோருடைய செவிக்கும் கேட்குமாறு “சார்
-ஐ ஹானர் தி இங்கிலீஷ் பட் ஐ ஒர்ஷீப் தி டமில்.. (நான் ஆங்கிலத்தை மதிக்கிறேன் ஆனால்
தமிழை வணங்குகிறேன்”4 என்று அவரைக் குத்திகாட்டிவிட்டு நம்முடைய கல்லூரி முதல்வர்
அவர்களை அவமதிக்க கூடாதாகையால் அவருடைய கேள்விக்கு ஆங்கிலத்தில் மறுமொழி கூறியதுடன்.
இனி தமிழிலேயே பேசுகிறேன் என்று கூறி பேச்சை ஆரம்பித்தான். சத்தியமூர்த்தியின் இந்த
பேச்சு நிர்வாகிக்கு பிடித்திருந்தாலும் முதல்வரின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.
வேலை செய்யும் இடத்தில் வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த நபர்கள்
தங்களுக்கு கீழ் வேலை செய்யும் நபர்கள் தங்களுடைய சொல் பேச்சையும் கேட்க வேண்டும் என
விரும்புவார்கள். சத்தியமூர்த்தியின் இத்தகைய நிலை மேலும் முதல்வரின் வெறுப்புக்கு
தீனிபோடுவது போல அமைந்திருந்தது.
முதல்நாள் பாடவேலையில் புத்தகமின்மையால் மாணவர்களை சும்மா அமர்த்தியிருப்பது
சத்தியமூர்த்திக்கு பிடிக்கவில்லை எனவே அவன் ஆங்கில கவிதை ஒன்றை எடுக்க ஆரம்பித்தான்.
மாணவர்களை தங்கள் வாழ்நாளில் இப்படிபட்ட விரிவுரையைக் கேட்டதில்லை என்று அவனை புகழ்ந்து
தள்ளினார்கள். அதற்கு நிர்வாகியும் விதிவிலக்கல்ல இந்நிலையில் சத்தியமூர்த்தியை சந்தித்த
தமிழ்த்துறை முதல்வர் “இனிமேல் தமிழ்ப் பகுதியைச்
சேர்ந்த ஆசிரியர்கள் எந்த வகுப்பு போனாலும் தமிழையே நடத்த வேண்டும் என்கிறார் பிரின்ஸ்பால்
என்று கூறினார். அதற்கு சத்தியமூர்த்தி இனி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியதோடு”5
“மனதில் பெரிய பட்டங்களைப் பெயருக்கு முன்னும்
பின்னும் போட்டுக் கொண்டு நவநாகரிக உடையணிந்து படிப்பும் பதவியும் உண்டாக்கிய கௌரவத்தோடு
நடக்கிற முதிய மனிதர்களிடம் கூட இத்தனை பலவீனங்களும், ஆற்றாமைகளும், அசூயைகளும் இருப்பதை
எண்ணி சிந்தித்தான்.”6 இன்றைய இளைஞர்கள் இத்தகைய போட்டிகளையும், பொறாமைகளைவும்
எளிமையாக எடுத்துக் கொள்ளும் அளவிற்கு தங்களை மாற்றிக் கொண்டுள்ளனர்.
சத்தியமூர்த்திக்கும், முதல்வருக்கும் இடையேயான கருத்து மோதல் தொடர்ந்து
கொண்டே இருந்தன. சத்தியமூர்த்தியைப் பற்றி முதல்வர் குறை கூறினாலும் நிர்வாகி சத்தியத்தின்
மீது உள்ள நம்பிக்கையால் அதனைக் காதில் வாங்கிக் கொள்வதில்லை. முதல்வருக்கு எவ்வளவு
வெறுப்பு வந்ததோ அவ்வளவு நம்பிக்கை நிர்வாகிக்கு சத்தியமூர்த்தி மீது இருந்தது. எனவே,
சத்தியமூர்த்தியை உதவி வார்டனாக பணியமர்த்தினார். ஆரம்பத்தில் பதவியை ஏற்றுக்கொள்ளத்
தயங்கினாலும் பிறகு அப்பணியைச் சிறப்புடன் செய்தான் சத்தியமூர்த்தி அதிலுள்ள குறைகளைக்
கலைந்து மாணவர்களின் தேவைகளை நேரிடையாக நிர்வாகியிடம் தெரிவித்தான் சத்தியமூர்த்தி
இதனால் முதல்வருக்கு வெறுப்பு அதிகமானது. பணியிடத்தில் புதியவர்கள் முன்னேற்றம் பழையவர்களின் வெறுப்புக்குக்
காரணமாக அமைகின்றன.
ஓவ்வொரு நாளும் புதிய அனுபவத்தையும், பிரச்சனைகளையும் சந்தித்துக்
கொண்டிருந்த சத்தியமூர்த்திக்கு பேரிடையாக நிர்வாகியின் மரணம் அமைந்திருந்தது. வந்திருக்கின்ற
புதிய நிர்வாகியான மஞ்சள்பட்டி ஜமீன்தாரின் மீது நல்ல எண்ணமில்லை காரணம் அவர் படிப்பறிவு
இல்லாதவராகவும் செல்வத்தின் மூலம் எதையும் சாதிக்கின்ற பெரிய மனிதர் என்ற உண்மை அவனுக்கு
தெரிந்திருந்தது. முதல்வருக்கு இத்தகைய சூழல் கலகம் செய்ய ஏதுவாக இருந்தது.
அன்று கல்லூரியில் நடைபெற்ற புதிய நிர்வாகியின் அறிமுக கூட்டத்தில்
அனைவரும் நிர்வாகிக்கு மாலை அணிவிக்க சத்தியமூர்த்திக்கு விழாவில் மனமில்லாமல் எழுந்து
சென்றுவிட அது நிர்வாகிக்கு எரிச்சலையூட்டியது அதற்கேற்ப முதல்வரும் “நிர்வாகியின்
கோபத்திற்குத் தூபம் போட்டு வளர்த்தனர்”7. பணியிடத்தில் ஒருவனை கவிழ்க்க வேண்டுமானால்
இவ்வாறாக கலகங்களை ஏற்படுத்துகின்றனர்.
புதிய நிர்வாகியும் பிரின்ஸிபாலும்
சத்தியமூர்த்தியை பழிவாங்க எண்ணி சத்தியமூர்த்தியின் வார்டன் பதவியை இராஜினாமா செய்ய
வேண்டும் என வற்புறுத்த, அதற்கான காரணத்தை சத்தியமூர்த்தி கேட்க “புதிய நிர்வாகிக்கு நீங்கள் வார்டனாக இருப்பது
பிடிக்கவில்லை”8 என்று கூறினார். இந்த காரணத்தை மாணவர்களுக்கு தெரியப்படுத்தி என்னை
டிஸ்மிஸ் செய்யுங்கள் என்றான். அடுத்த சில நிமிடங்களிலேயே சத்தியமூர்த்தியிடமிருந்து
அந்த வார்டன் பதவி பரிக்கப்படுகின்றது.
பணியிடத்தில் பழிவாங்க வேண்டுமென்றால் அவனை மிரட்டி பணிய வைப்பது
அல்லது அதனை சத்தமில்லாமல் செய்து தனது காரியத்தைச் சாதிப்பது, நிர்வாகிகளுக்கு உள்ள
திமிர் என்றே கூறலாம்.
இந்தச்
செய்தி காட்டுத்தீயைப் போல மாணவர்களின் மத்தியில்
கலகத்தை ஏற்படத்தியது. இது முதல்வரின் கலகம் போல அல்லாமல் நன்மையை நோக்கிய கலகமாக முன்னெடுக்கப்படுகிறது.
விடுதி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக உணவு அருந்தாமல் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.
நாளுக்கு நாள் இந்த போராட்டம் வலுத்தது. அனைத்து மாணவர்களும் சத்தியமூர்த்தியின் பக்கம்
இருந்தார்கள். ஆனால், நிர்வாகியும், முதல்வரும் இந்த பழியை சத்தியமூர்த்தியின் மீது
சுமத்தி அதற்கான விளக்கத்தை கேட்டிருந்தார்கள். அதற்கு பதிலளித்த சத்தியமூர்த்தி “நீங்கள் தான் உங்கள் செய்கையின் மூலமாக அருமையான
மாணவர்களைத் தூண்டுகிறீர்கள்”9 என்றான் சத்தியமூர்த்தி
சத்தியமூர்த்தியின்
மீது பொய் பழியைச் சுமர்த்த எண்ணிய கலகக்காரர்கள் கல்லூரியின் கூரை ஷெட்டுக்கு தீவைத்து
எரித்ததோடு மட்டுமல்லாமல் அந்த பழியை சத்தியமூர்த்தியின் மீது சுமத்திச் சிறை செல்ல
வைத்தனர். இந்த நிலை தனிமனிதனுக்கு எதிரான கலகமாக இருந்தாலும் அது மாணவ சமுதாயத்தை
பாதிப்படையச் செய்து போராட்டம் தீவிரமடைந்தது. நிர்வாகம் கலகத்தை கட்டுப்படுத்த தவறியது
எனவே அரசாங்கம் ஒரு குழுவை நியமித்து காரணத்தை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
அக்குழு தீர விசாரித்ததில் நிர்வாகியும், முதல்வரும் செய்த கலகமே இத்தனைக்கும் காரணமாக
அமைந்தது என்பதனைத் தெரிந்து கொண்ட அக்குழு சத்தியமூர்த்தியின் ஆசிரியப்பணியை பாராட்டியது.
மேலும் முதல்வரையும், நிர்வாகியையும் எச்சரி;த்தது. அக்குழுவின் தலைவர் “உங்களுக்கு கல்லூரி நிர்வாகிக்கும் இடையே எவ்வளவு
பிரச்சனை, வேறுபாடுகள் எல்லாம் உண்டாகி அவற்றிலிருந்து நீ தப்பி வென்றுவிட்டாலும் இனி
உன்மேல் வைரம் வைத்து கொண்டு பழிவாங்க அவர்கள் நேரம் பார்த்திருப்பார்கள், தனியார்
நிர்வாகத்திலுள்ள எல்லா கல்லூரிகளிலும் இவ்வாறான பாரபட்சம் நிறைய உண்டு. இனி இங்கு
வேலை செய்ய வேண்டாம் அறிவுறுத்தியதோடு சத்தியமூர்த்தியின் அறிவுதிறனை பார்த்து அரசு
வேலைக்கும் ஏற்பாடும் செய்தனர்”10.
முடிவுரை:
‘பொன்விலங்கு’
நாவல் காட்டிய பணியிட கலகம் ஒரு முன் மாதிரிதான் நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசு மற்றும்
தனியார் துறையில் தனிமனிதனுக்கு எதிராகவோ அல்லது குழுவிற்கு எதிராக நாளும் கலகங்கள்
தோன்றிக் கொண்டே இருக்கின்றன. காரணம் முன்சொன்ன அந்த கருத்துகளே கலகங்கள் நன்மையில்
முடியும் என்பதைப்போல நாளடைவில் சத்தியமூர்த்திக்கு நல்ல வேலை கிடைத்தது. ஆனால் இது
நடைபெறுமா? என்பதில் எந்தவித சாத்தியமில்லை என்பது மறுக்க முடியாத உண்மையே. “நாரதர்
கலகம் நன்மையில் தான் முடியும்” என்ற வழக்கமொன்று உண்டு. அதுபோல பணியிடங்களில் உண்டாகும்
கலகங்கள் நன்மையில் முடிந்தால் நன்றே. பொன்விலங்கு நாவலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள
சத்தியமூர்த்தி போன்ற பாத்திரப்படைப்பு இன்றளவும் உலகளவில் கல்வி நிறுவனங்களில் இளைய
ஆசிரியர்கள் மூத்த ஆசிரியர்களால் அங்கீகரிக்கப்படாத சூழல் தொடர்ந்து கொண்டே வருகிறது.
மூத்த ஆசிரியர்களுக்கும், இளைய ஆசிரியர்களுக்கும் இணக்கமான சூழல் உண்டாகும்போது தான்
பணியிடக் கலகங்கள் தவிர்க்கப்படும் என்பதே நிதர்சனம்.
மேற்கோள் விளக்கக் குறிப்புகள்:
1.நா.பார்த்தசாரதி, பொன்விலங்கு,
ப.19
2.மேலது.ப.29
3.மேலது.ப.31
4.மேலது.ப.223
5.மேலது.ப.232
6.மேலது.ப.234
7.மேலது.ப.458
8.மேலது.ப.472
9.மேலது.ப.477
10.மேலது.ப.567
______________________________