வியாழன், 29 டிசம்பர், 2022

 

"முளையிலேயே  கிள்ளி  எறியப்பட  வேண்டும்"

சு.தங்கமாரி, மதுரை

9894102130

வணக்கம். அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற குழு எடுத்த முடிவினைக் கொண்டு பல்கலையின் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையை ஆதாரமாகக் கொண்டு 08/12/2022 வியாழக்கிழமையன்று வெளிவந்துள்ள தங்களது இதழில் ”பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப் பட்டதாரிகளுக்கு வேலை” என்று ஒரு செய்தி வெளியிட்டுள்ளீர்கள். ஆனால், அந்தச் சுற்றறிக்கையில் வெளிப்பட்டுள்ள தமிழ்ப் பட்டதாரி பேராசியர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதை உணர வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் முதலாமாண்டின் இரு பருவங்களுக்கும் தமிழ் இரண்டு தாள்கள் கட்டாயம் என்றும், அந்தப் பாடங்கள் இந்தக் கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்றைய இளம் தலைமுறையினருக்குத் உயர்கல்வியில் தமிழ்ப் படித்தால் பணி வாய்ப்பு உறுதி என்ற சிந்தனையையும் தமிழ்ப் பேராசிரியராகலாம் என்ற கனவினையும் சாத்தியமாக்கக் கூடிய இந்த உத்தரவு வரவேற்கப்பட வேண்டியதாகும்.  ஆனால் இந்த உத்தரவின் வாயிலாகத் தமிழ்ப் பேராசிரியர் பணியிடம் கூடும் என்ற நிலையில், அதனை நீர்த்துப்போகச் செய்யும் ஒரு முடிவினை அண்ணா பல்கலையின் ஆட்சி மன்றக் குழு முடிவெடுத்துள்ளதைப் பதிவாளரின் சுற்றறிக்கை வாயிலாக அறிய முடிகின்றது. (This course may be handled by teaching faculties with eligible qualification in Tamil  Literature. However, this course may also be handled by the teaching faculties of  Science and Humanities / Engineering / Technology, who have studied Tamil as one of Languages in School.)” அண்ணா பல்கலைக்கழகம் கீழ் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் இந்தப் பாடத்தை நடத்துவதற்குப் பள்ளிகளில் ஒரு பாடமாகத் தமிழைப் படித்திருந்தால் தகுதி என்ற உத்தரவினைக் கொடுத்துள்ளது வேதனை அளிக்கின்றது”.

ஏற்கனவே, அனைத்துக் கலை அறிவியல் கல்லூரிகளிலும் பகுதி – I தமிழ் இரண்டாண்டுகளுக்குக் கட்டாயம் என்ற போதிலும் சில பல்கலைக்கழகங்களில் பிகாம் பிபிஏ போன்ற பட்டங்களுக்கு வணிகக் கடிதம், வணிக மேலாண்மை என்பன போன்ற தமிழ் இலக்கியங்களுக்கு மாறுபட்ட சில பாடங்களை வைத்துக் கொண்டு நாங்களும் தமிழில் தான்  நடத்துகின்றோம் என்று சொல்லிக்கொள்கின்றனர். இதன்படி சில வாய்ப்புகள் தமிழ்ப்பாடங்களை முறையாகப் படித்த பேராசிரியர்களுக்கு இல்லாமல் போய்விடுகின்றது.  ஆகவே, இந்தச் சுற்றறிக்கைப்படித் தகுதி நிலை தொடரும் என்றால் தமிழ்ப் பேராசிரியர்களுக்கான பணி வாய்ப்புகள் பறிக்கப்பட்டு விடும். இதனைத் தொடக்கத்திலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும்.