செவ்வாய், 4 ஏப்ரல், 2017

சங்ககால இலக்கியக் காதலும் பின்னெழுந்த பக்திக் காதலும்

சங்ககால இலக்கியக் காதலும் பின்னெழுந்த பக்திக் காதலும் - நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்) - இலக்கியம்

E-mailPrintPDF
- நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்) -காதல் என்னும் பதத்திற்கு அன்பு, பற்று, பாசம், நேசம், நட்பு, காம இச்சை, பக்தி, வேட்கை, ஆவல், பற்றார்வம், காதலணங்கு, அன்புச்செய்தி, காதல் நினைவூட்டு, காதல் தொடர்பு, காதலாட்டம், காதல் தெய்வம், மதவேள், அன்புகொள், பாசங்கொள், நேயமுறு, காதல்கொள், காதலி, விரும்பு, அன்புடன் பேணு, பெற்றுமகிழ், நுகர்ந்து மகிழ், ஈடுபாடுகொள், நாட்டங்கொள், சார்புகொள், விரும்பிப்பயில் போன்ற கருத்துகள் அகராதியில் நீண்டு அமைவதுபோல் காதலும் இன்ப ஒழுக்கத்தின் இயல்பை உணர்த்தி நின்று மக்களை வழிப்படுத்துகின்றது. பெண்ணானவள் 12 ஆவது, 13 ஆவது அகவைகளிலும், ஆணானவன் 14 ஆவது, 15 ஆவது அகவைகளிலும் பருவமடையும் பொழுது உடம்பில் ஏற்படும் ஓர் இயற்கை உந்தலால் தூண்டப்பட்டு, உடல் இச்சை கொண்டு, இன்பமடைய விரும்பி, காதல் வயப்பட்டு, பெண் ஆணையும், ஆண் பெண்ணையும் விரும்பிக் காதலிப்பர். பசித் தூண்டலுக்குச் சாப்பிடுவதும், தாகத்துக்கு நீர் அருந்துவதும் உடல் தேவையின் நியதியாகும். தொல்காப்பியம் (தி.மு.680—கி.மு.711):- இனி, எமக்குக் கிடைக்கக்கூடிய காலத்தால் மூத்த சங்க இலக்கிய நூலான தொல்காப்பியம் முதல் மற்றைய நூல்களிலும் காதல் எவ்வண்ணம் பேசப்படுகின்றது என்ற கதைகள் பற்றிக் காண்போம். தொல்காப்பியர் காதலை (1) கைக்கிளை, (2) அன்பின் ஐந்திணை, (3) பெருந்திணை என்று மூன்று பகுதிகளாக வகுத்துள்ளார்.
(1) கைக்கிளை-  என்பது  ஒரு  தலைக்  காமம்.  (கை – பக்கம், கிளை – உறவு).  இதை ஒவ்வாக் காமம் என்றும் கூறுவர். கைக்கிளை புணரா நிகழ்ச்சியாகும்.   கைக்கிளைக்கு  நிலம்  ஒன்றும்  ஒதுக்கப்படவில்லை.  ஏனெனில்  இது  மலராக் காதல், எங்கும் காணப்படலாம்.
(2) அன்பின் ஐந்திணை- இதை அன்புடைக் காமம் என்றும் கூறுவர். அன்பின் ஐந்திணை என்பது ஐந்திணைகளான குறிஞ்சித்திணை, முல்லைத்திணை, பாலைத்திணை, மருதத்திணை, நெய்தல்திணை ஆகிய ஐவகை நிலங்களுக்கேற்ப ஒட்டிய சூழல் சுற்றாடல் ஆகியவற்றோடு இணைந்தனவாய்   குறிஞ்சியில் புணர்தலும், முல்லையில் இருத்தலும், பாலையில் பிரிதலும், மருதத்தில் ஊடலும், நெய்தலில் இரங்கலும் ஆகியன - இயற்கையோடு ஒட்டி நிகழ்வன